31 December 2024

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

திருப்பாவை 16

 



     நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

 கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்

      ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

      தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

      நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art

பொருள்: 

எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக. 


விளக்கம் -

கண்ணன் திருமாளிகையில்

சென்ற பத்து பாட்டுக்கள் பத்து பெண்களை உணர்த்தினதை கூறியது.

 பத்து பெண்களை சொன்னது, திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சங் குடியில் உள்ள அத்தனை பெண்களையும் உணர்த்தியதை சொன்னதற்கு சமம். எல்லா பெண்களையும் உணர்த்தித் தம்முடன் கூட்டிக் கொண்டு எல்லோரும் பெரும் கூட்டமாக திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற்கு சென்று, திருக் கோயில் காப்பானையும் திரு வாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று வேண்டியதை கூறும் நாயாகனாய் நின்ற என்ற பாசுரம். 

முதலடி, கோயில் காப்பானையும், இரண்டாவது அடி, வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது. உகந்து அருளின நிலங்களில் உள்ளே புகும் போது, க்ஷேத்திராதிபதிகளையும், துவார யக்ஷயர்களையும், அனுமதி பெற்று கொண்டு புக வேண்டும் என்று பகவத் சாஸ்திரங்களில் கூறியதுபோல, இந்த ஆச்சியர்களும் செய்கிறார்கள். 

அவன், (எம்பெருமான்) உணர்ந்தெழும் அழகுக்கு மங்களாசாஸநம் பாட வந்தோம் என்றார்கள். தோரணவாசலுக்குக் “கொடித்தோன்றும்” என்று சொன்னது, நடுநிசியில் ஆயர்மாதர் தடுமாறாமல் ‘இது நந்தகோபர் திருமாளிகை’ என்று உடனே உணர்ந்து வருதற்காகக் கொடி கட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதாகும். ஏதாவது உபாயத்தை தேடியோ, வழியை தேடியோ வரவில்லை, எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம், யாம் என்கிறார்கள்.

வாசல் காப்பான், “நான் உங்களை மறுக்கவில்லை’ கதவைத் தள்ளிக்கொண்டு புகுங்கள்” என்று சொல்ல, அது கேட்ட ஆய்ச்சியர்கள்,’ “நாயகனே! எம்பெருமான் திறத்து உனக்குள்ள பரிவினை காட்டிலும் மிக விஞ்சின பரிவு இந்த கதவிற்கு உள்ளது போலும்’ எங்களால் தள்ள முடியவில்லை” என்று சொல்கிறார்கள். வாயில் காப்பவன் இவர்களை விலக்குவது கண்ணன் மேல் உள்ள ஸ்னேகத்தாலே என்றால், இந்த நிலை கதவுகள் திறக்க முடியாமல் இருப்பதும் ஸ்னேகத்தாலே தான் என்கிறார். திறந்து கொள்வார் முகத்தில் அறைவது போல் கம்ஸனுடைய ஆட்களுக்கு உயிருள்ளவை, உயிரற்றவை என்று ஒரு வித்யாசமும் இன்றி எல்லாம் திருவாய்பாடியில் கண்ணனுக்கு துணை போகின்றன என்கிறார்.

இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.














ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கங்களும் தெரிந்து கொண்டேன். மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இன்றைய பாசுரத்திற்கேற்ற ஏற்ற ஓவியமும், தங்களின் பாசுர பாடலும், பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன். திருக்குறுங்குடி பெருமாளை கண்டு வணங்கிக் கொண்டேன்.
    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    ReplyDelete