30 December 2024

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி !

 மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர் அனுமன்.





ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ' ஸ்ரீ ராம ஜெயம் '   கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு முறை 'ராம' என்று சொன்னால் அது ஒரு சகஸ்ர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார்.

அப்படி பட்ட ஆஞ்சநேயர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருகின்றார்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீ ராமனிடத்தில் ஒப்படைத்து. தனக்காக வாழாமல் ஸ்ரீ ராமனுக்காகவே  வாழுகின்றார்.

ஸ்ரீ ராம நாமத்திற்கு  ஏன் இவ்வளவு பெருமை ?   

சிவ விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம். நாராயணாவில் இருந்து வருகின்ற 'ரா' வும் நமசிவாய வில் இருந்து வருகின்ற 'ம' வும் சேர்ந்த நாமமே 'ராம'.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்.


ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,
ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு
ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு
ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை
அயல் தேசமான லங்கையில் வைத்தான்.
அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.


நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.


சொல்லில் அடங்கா புகழவன். சொல்லின் செல்வன். அஞ்சனைப் புதல்வன். சிவனின் அவதாரன். அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும்.   அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும்.  

அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பானம்.  வானுயர வளர்ந்தாலும் வானரன். தானுயரப் பார்பதில்லை. 'ராம' என்று ஓரு முறை  உரைத்தால் போதும். கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.

எங்கள் ஆஞ்சநேயப் பெருமான் துணிவிலும் பணிவிலும் சிறந்தவர். 

ஸ்ரீ ராம பக்தியிலே உயர்ந்தவர், அன்பின் கடல், அறிவின் சுரங்கம், தன் நலம் கருதாத தனிப் பெரும் கருணை, பொறுமையின் சிகரம், வீரத்தின் விளை நிலம், ஓரு முறை ஓம் ஸ்ரீ ராம ஜெயம் சொன்னாலே சகல செல்வங்களையும் அள்ளித் தருகின்ற வள்ளல். தன்னுடைய மார்பினைப் பிளந்து  ஸ்ரீராமனையும் அன்னை சீதா பிராட்டியையும் காண்பித்த தெய்வம்.






யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்


எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கின்றதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே ஸ்ரீ அனுமன்.....

    பக்திபூர்வமாக ஸ்ரீ ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்....





ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருவடிகளே சரணம் ...






 ஜெய்  ஸ்ரீ ராம் !   ஜெய் ஸ்ரீ ராம் !
 ஜெய்  ஸ்ரீ ராம் !   ஜெய் ஸ்ரீ ராம் !


அன்புடன் 
அனுபிரேம் 💗💗💗

No comments:

Post a Comment