30 November 2017

கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி மஹாத்மியம்


இன்று கைசிக ஏகாதசி (30.11.2017)



கைசிகப் புராணம்....., வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக  உரைத்த பெருமை கொண்டது.

இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்..

பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க ....

அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்றும்

 இவ்வாறு  கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு....,

வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..






எனவே  இப்போதும்,

 ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று....

 எல்லா வைணவத் தலங்களிலும் கைசிக புராணம் பராசர பட்டரின் வியாக்கியானத்துடன் வாசிக்கப்படுகின்றது.

திருக்குறுங்குடியில் நம்பாடுவான் வாழ்க்கையை நாடகமாக நடத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


....இத்தகு பெருமை மிகு நம்பாடுவான் வாழ்க்கையை இன்று நாம் தரிசிக்கலாம்,....









திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவர் நம்பாடுவான் என்ற பக்தர்.

 இது காரணப் பெயர்.

 `நம்மைப் பாடுவான்' என்று பெருமானால் சொல்லப்பட்டதாலும்

வடிவழகிய நம்பியையே சதமாக  "நம்பிப் பாடுவார்" என்பதனாலும் நம்பாடுவான் என்று ஆயிற்று.

கைசிகம் என்ற பண்ணில் (பைரவி இராகம்)   நம்பியின் புகழை இசைத்து மகிழ்வித்து வந்தவர் இவர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பியைத் தொழுவதே தன் வாழ்க்கை இலட்சியம் என்று  எனக் கொண்டு வாழ்ந்து வந்த பரம பாகவதர். 



தினமும்  அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார்.

 குலத்தினால் தாழ்ந்தவன் என்பதால்  திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத போதிலும், வெளியிலேயே  நின்று  வண்ணமழகிய குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து திருப்பள்ளியெழுச்சி பாடுபவர்.

ஜாக்ர விரதம் என்னும் இந்த பெருமாளை திருப்பள்ளியெழுப்புவதை தனது சேவையாக செய்து வந்தார். 




பிரம்மராட்சசன் வழிமறித்தல்

அன்று கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி   வழக்கம் போல நம்பாடுவான் கையில் வீணையுடன் திருப்பள்ளியெழுச்சி  பாட புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார்.


மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழியில் அடர்ந்த  காடு.

அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பிரம்மராக்ஷசன்.

 `நல்லவேளை! வந்தாயா என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று' என்று சொல்லி, அவரை உண்ண  நெருங்கியது.


பயம்தரக்கூடிய கரிய மேனி, நெடிய உருவம், கொண்ட பிரம்ம ராக்ஷசனின் அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான்.

பெருமாள் மேல் பாரத்தை போட்டு விட்டு அந்த பிரம்மராக்ஷசனுடன் உரையாடினார்.

உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும்.

எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.




ஆனால் நான் பெருமாளை எழுப்பும் ஜாக்ர விரதம்  பூண்டிருப்பதால் நான் சென்று அந்த சேவையை செய்து  விட்டு வருகிறேன் என்றார்.

அதை கேட்டு  அந்த பிரம்மராக்ஷசன் சிரித்தது.


நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக நீ  சொல்லும் பொய் இது.

 வேறு வழியில் என்னிடமிருந்து தப்பி ஓடி விடப் பார்க்கிறாய் என்றது. மேலும் .

தன்னுடைய உடல்   அழிந்து விடும் என்பதை அறிந்த பிறகும் ஒருவன் திரும்பி வருவானா? உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது.

அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான்.

உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன் என்பதற்காக பல சத்தியம் செய்தார்.



அப்படி வராமல் போனால்

 இறைவன் வடிவான சத்தியத்தை மீறுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக,

தன் மனைவியை விடுத்து வேறு பெண்ணை நாடுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக,

உணவு உண்ணும் இடத்தில் தனக்கும் மற்ற்வர்களுக்கும் வேறு விதமான உணவளிப்பவன் அடையும் பாவத்தை அடைவேனாக,

யார் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்து விட்டு அதை மீண்டும் அபகரிக்கின்றானோ அவன் செய்த பாவத்தை நான் அடைவேனாக,

ஒரு அழகிய பெண்ணை இளமையில் அனுபவித்து விட்டு அவளை முதுமையில் எவன் ஒதுக்கி வைக்கின்றானோ அவன் அடையும் பாவத்தை அடைவேனாக,

என்று தொடர்ந்து......

 இறுதியாக யார் ஒருவன் அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், மோக்ஷம் அளிப்பவனாகவும் உள்ள சர்வேஸ்வரனையும் மற்ற கர்மத்திற்கு வசப்படுகின்ற தெய்வங்களையும் ஒன்று என்று எண்ணுகின்றானோ அவன் அடையும் கொடிய பாவத்தை அடிவேனாக என்று இவ்விதமாக    பதினெட்டு வகையான பாவங்கள் தன்னை வந்து சேரட்டும் என்றார்.


 இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராக்ஷசன்  அவரை ஆலயம் செல்ல அனுமதித்தது.

 அவரும் சம்சாரத்திலிருந்து விடுபட்ட ஆத்மா வைகுந்தம் செல்வது  போல விரைந்து  குறுங்குடிக்கு வந்தார்.

ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார்.


இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள்  சந்தோஷம் ஏற்பட்டது..

ஆனால் பாவ வினை தீர்க்கும் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

தனக்கு சேவை செய்து தன் உடலையும் இழக்க விரும்பும் அன்பனுக்கு அருள விரும்பினார் நம்பி,

 எனவே தன் அன்பன் தன்னை தரிசிக்கும் விதமாக கொடிமரத்தை விலகப் பணித்தார்.

 நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம்.

 கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அர்ச்சாவதார நிலையில் வண்ணமழகிய நம்பி, நம்பாடுவானுக்கு சேவை சாதித்தார்

பெருமாளின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார்.

அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் வந்தது.

தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற  முன்னை விட இரட்டிப்பு  வேகமாக புறப்பட்டார்.

வராகமூர்த்தி காட்சி கொடுத்தல்

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது,

ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்???.

நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்!

அங்கே போகாதே"" என்று கூறினார்.

நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்;

 நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன்.

ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினார்.


அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த

பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை.

அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.

நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினார்.

தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்"...

 உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றார்.

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!!

எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே!

நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாட்ஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி...



நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

 இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன்.

 எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றார்.

பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது.

நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை.

அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது!!!! ...


"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்...

 நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றார்.

அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு.. ..

உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது.

அதற்கும் மசியாத நம்பாடுவான் ...

நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினார்..



பிரம்மராக்ஷஸனின் பூர்வ ஜென்ம ஞாபகம்

பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன் ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது.

"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார் நம்பாடுவான்.

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது.

பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.

பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன்.

அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன்.

இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.

தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.


தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தார் நம்பாடுவான்.


அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன்.

 அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினார் நம்பாடுவான்.

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது.



 மகிமைகள்

நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தார்.

மேலும் வராஹப் பெருமான் பூமிதேவி நாச்சியாரிடம் யார் ஒருவன் பக்தியுடன் வந்து நம் முன் கைசிக இராகம் இசைக்கின்றானோ அவனுக்கு நான் வைகுந்தம் அருளுவேன் என்று கூறினார், இதனால் இந்த ஏகாதசிக்கு `கைசிக ஏகாதசி' என்று பெயர்.

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.



 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் கோவிலில் நவம்பர் 30 ம் தேதி "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும்.

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும்.

 ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.

மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும்.




நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச்
செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,*
எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?

-  நம்மாழ்வார் (2898)





அன்புடன்
அனுபிரேம்

12 comments:

  1. வைசிக ஏகாதசி விடயம் அறிந்தேன்.
    அழகிய தரிசனத்துடன்.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம், எளிமையாக.நன்றி

    ReplyDelete
  3. ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா பற்றி அறிந்து கொண்டேன் அனு படங்களுடன் கதையுடன் அருமை

    ReplyDelete
  4. ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா பற்றி அறிந்து கொண்டேன் அனு படங்களுடன் கதையுடன் அருமை

    ReplyDelete
  5. கைசிக ஏகாதசித் தகவல்கள் புராணக் கதை அருமை..சகோதரி

    கீதா: கைசிக ஏகாதசி ந உடனேயே அட திருக்குறுங்குடி எங்க அப்பா ஊர் ஃபேமஸ் ஆச்சேனு அங்கு இப்போதும் கொண்டாடுவார்கள் நீங்கள் படம் போட்டிருப்பதுபடி...என் அப்பா முன்னெல்லாம் போய்வருவார் ...சமீப காலமகாப் போவதில்லை. இம்முறை அங்கு அருகில் இருந்தும் போக பலத்த மழை காரணமாகப் போக முடியலை...நல்ல பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. பதிவிடும் போது உங்களை தான் நினைத்துக் கொண்டேன் கீதாக்கா...!

      Delete
  6. திருக்குறுங்குடி, வள்ளியூர், திருவண்பரிசாரம், திருவனந்தபுரம்/கேரளா, இலங்கை இந்த ஊர்கள் என் மனதில் என் நினைவில் எப்போதும் பதிங்க இடங்கள். என் சிறுவயது ஊர்கள் திருமணம் ஆகும் வரை என்னில் பதிந்த ஊர்கள். சென்னையில் பல வருடங்கள் இருக்கிறேன்..இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. ஏதோ வேறு வழியில்லை இருந்தாகணும்னு இருக்கும் ஊர்...ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது அக்கா....

      இருக்கும் இடத்தை விருப்பத்தோடு இருக்கும் இடமாக மாற்றுவோம்...

      Delete
  7. அருமையான பதிவு.
    படங்கள் அழகு.

    கைசிக ஏகாதசி மஹாத்மியம் படித்து, பெருமாளை தரிசனம் செய்து விட்டேன் உங்கள் தளத்தில் நன்றி அனு.

    ReplyDelete
  8. கைசிக ஏகாதசி..

    இப்பதான் கேள்விப்படுறேன்

    ReplyDelete
  9. வைகுண்ட ஏகாதசி தெரியும்.. இது புதுசா இருக்கு எனக்கு... படங்கள் அருமை. வராகி அம்மன் போல இருக்கு முதல் படம்.

    ReplyDelete
  10. சுவையான, சுவாரஸ்யமான விவரங்கள்.

    ReplyDelete