03 June 2023

49.இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே.


(49) இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே.







விபீஷணன் ராவணனின் இளைய சகோதரன். அரக்கர்களுக்கே உரிய தீய குணங்கள் கொண்ட சகோதர சகோதரிகளிடையே வளர்ந்தாலும் விபீஷணனின் குறிக்கோள்: நேர்மை, தர்மம், நீதி. விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்து கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்ததால் பிரம்மன் அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வரமாக வழங்கினார்.


இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது கண்டித்தான். பிராட்டியை இராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு இராவணனை வலியுறுத்தினான். விபீஷணன் இராவணனின் ஒவ்வொரு கொடிய செய்கையையும் எதிர்த்தான். அவனுடைய அறிவுரைகளை இராவணன் ஏற்கவில்லை.


சீதா தேவி இலங்கையில் சிறை பிடிக்கப் பட்டிருப்பதை ஹனுமான் கண்டு வந்த பின், ஸ்ரீ இராமனும் அவருடைய வானரப் படையும் இலங்கை நோக்கி பாலம் அமைக்க, இராவணன் இச்செய்தி கேட்டு அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினான். 

அப்பொழுது, அவனது மந்திரிமார்களும் படைத் தளபதிகளும் இராவணனின் வீரத்தையும், இந்தரஜித்தின் போர் திறனையும், தங்களின் வீரத்தைப் பற்றியும் பெருமையாக கூறி, வானரங்களுக்கு எதிராக போரிடுவதே தங்களுக்கு இழுக்கு என்று மார் தட்டிக் கொண்டிருந்தனர்.


அதற்கு அவையில் எதிராக பேசிய ஒரே குரல் விபீஷணனுடையதுதான். 

"மற்றொரு படையை பற்றி முழுமையாக ஆராயாமல் அப்படையின் திறமையை தீர்மானிப்பது புத்திசாலித்தனமல்ல. சீதா தேவியை இங்கு கடத்தி வந்த நாள் முதலே, பல அமங்கல நிமித்தங்களை நாம் பார்க்கிறோம். 

சீதை பெரும் பதிவிரதை. 

இராமனும் இலக்குவனும் இணையில்லா மாவீரர்கள். 

ஜனஸ்தானில் இராமன் தனியே நமது பெரும் படையை நிமிடங்களில் வீழ்த்தினான் என்பதை மறவாதீர்கள். விராடன் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களை அவர்கள் வதைத்திருக்கிறார்கள்.

 எனவே, சீதா தேவியை இராமரிடம் ஒப்படைத்து அமைதியை விவாதிப்போம். அதுதான் நாம் உயிர் பிழைக்க ஒரே வழி. நம் குலத்திற்கு எது சிறந்தது என்ற என் அக்கறையின் காரணமாகத்தான் இதைச் சொல்கிறேன்" என்றான்.


விபீஷணனின் வார்த்தைகள் இராவணனுக்கும் இந்தரஜித்துக்கும் கோபத்தை மூட்ட, விபீஷணனைக் கடிந்து பேசினர். இராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித் தன்னை அவமானப் படுத்தியதும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை.

 இராவணனே அவனை லங்கையை விட்டு நீங்க சொன்னதால் உறவுகளை விட்டொழித்து தன் நான்கு உயிர் தோழர்களுடன் இராமனும் அவன் படையும் முகாமிட்டிருந்த கரைக்கு வந்தான்.


இராமனின் சரணங்களில், அவன் சர்வ லோக சரண்யத்தில், அடைக்கலம் தேடினான் விபீஷணன். ஆரம்பத்தில் சுக்ரீவனும் மற்றவர்களும் அவனை ஏற்பதில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் இராமன் அதற்கு சம்மதியாமல், காலில் விழுந்து, "என் முந்தைய பற்றுகளை துறந்து வந்திருக்கிறேன். இனி என் வாழ்வு முழுமையாக உங்கள் கையில் உள்ளது" என்ற விபீஷணனை ஏற்றான்.


இராமன் இருந்தது பாரதவர்ஷ கரையில். விபீஷணின் இருப்பிடமோ இராவணன் இருக்கும் அந்தக்கரை, லங்கைக் கரை. பொதுவாக ஒரு கரையிலிருந்து எதிர் கரைக்கு செல்பவர்களுக்கு எதிர் கரை எப்போதும் அக்கரைதான்.

 ஆனால் இந்த 49 வது வாசகமோ "இக்கரைக்கே சென்றேனோ" என்று இருக்கிறது. இது கொஞ்சம் குழப்புவது போல இருந்தாலும் இதற்கு விளக்கம் பெரியாழ்வாரின் ஒரு பாசுரத்தில் உள்ளது.


"அக்கரை என்னும் அனந்தக்  கடலுள் 

அழுந்தி உன் பேர் அருளால்

இக்கரை ஏறி இளைத்திருந்தேனை 

அஞ்சேல் என்று கை கவியாய்

சக்கரமும் தடக்கைகளும் கண்களும் 

பீதக ஆடையொடும்

செக்கர் நிறத்துச் சிவப்பு உடையாய்

திருமாலிருஞ்சோலை எந்தாய்"


(பாசுர விளக்கம் - சிவப்பு நிறமுடைய சக்கரமும் திருக்கைகளும் திருகண்களும் கொண்ட பீதாம்பரம் அணிந்த திருமாலிருஞ்சோலை அழகர் பெருமாளே!

சம்சாரம் என்னும் ஆழ்கடலுக்கும் மூழ்க்கி அமிழ்ந்து கிடந்த நான் உன் பேரருளால் இக்கரை ஏறி நின்றேன் எனக்கு நீ அபய முத்திரையை காட்டியருள வேண்டும்.)


இங்கு ஆழ்வார் "சம்சாரம்" என்பதை அக்கரை என்றும் எம்பெருமானின் திருவடி இக்கரை என்றும் மிகவும் அனுபவித்துக் கூறுகிறார். நமக்கு மிகவும் அனுகூலமான ஒன்றை நாம் என்றும் அருகில் வைத்துக் கொள்வது வழக்கம். இது என்னுடையது என்று கூறுவது நமது மனதுக்கு உகந்த பொருள்களையே. இந்த அர்த்தத்தில்தான் பெரியாழ்வார் அவர் என்றும் விரும்பும் வைகுண்டத்தை இக்கரை என்றும் துன்பத்தில் ஆழ்த்தும் சம்சாரக் கடலை அக்கரை என்றும் கூறுகிறார்.


அதனைப் போலத்தான் எம்பெருமான் இராமன் இருக்கும் இடம்தான் தன்னை கரைசேர்க்கும் என்பதை உணர்ந்தவன் விபீஷணன். அவனுக்கு அது அக்கரையாகத் தோன்றவில்லை, 'இக்கரையாகவே' தோன்றியதால்தான் அவரிடம் அடைக்கலம் புகுந்தான்.


"அப்படிப்பட்ட விபீஷணனைப் போல பற்றுகள் அனைத்தையும் விட்டு சரணாகதி தத்துவத்திற்கு ஒரு விளக்கமாகாமல் இருக்கும் என்னால் இந்த திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? எனவே நான் கிளம்புகிறேன்" என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்பினாள்.

முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -முதற் பத்து

1- 9 இவையும் அவையும் 

ஆழ்வாரோடு  எம்பெருமான் கலந்த வகை 


தோள் இணை மேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடி மேலும்,

தாள் இணை மேலும், புனைந்த தண்ணம்  துழாய் உடை அம்மான்

கேள் இணை ஒன்றும் இலாதான், கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,

நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே. 9.7

2993


நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்,

ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே,

பூவியல் நால் தடம் தோளன், பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,

காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே. 9.8

2994















 50. திருஊரகம்

ஸ்ரீ அமுதவல்லீ ஸமேத ஸ்ரீ உலகளந்தான் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

1 comment:

  1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் சிறப்பு. நன்றி.

    ReplyDelete