21 June 2023

பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை...

 பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில்





ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 15 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

 ஸ்ரீ ஜெகந்தாதர் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் இரத உலா வருவதைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

உலகிலேயே மிகப் பழமையான இரத யாத்திரையாகக் கருதப்படும் பூரி இரத யாத்திரையானது, ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறுவது பூரியின் 146 வது இரத யாத்திரையாகும். ஆலய நகரமான பூரி மட்டுமல்ல, ஒடிசாவே இரத யாத்திரையின் போது திருவிழாக் கோலம் பூணும். 


ஸ்ரீ ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் மூன்று இரதங்களும் அளவு மற்றும் பிற விவரங்களில் பரஸ்பரம் வேறுபட்டவை. தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகாகவும் உள்ளார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன.

ஸ்ரீ ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும். 

14  சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 

12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஸ்ரீ ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள்.

தங்கள் அத்தையின் இருப்பிடமான குண்டிச்சா ஆலயம் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின்போது, மவுசிமா கோவிலில் ஸ்ரீ ஜெகன்நாதர் தங்கி ஓய்வெடுப்பார்.  

அதன்பிறகு சகோதர சகோதரியின் தேர்கள் புடைசூழ ஜெகந்நாதரின் இரத யாத்திரை மீண்டும் கிளம்பி தங்கள் இருப்பிடமான ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.

ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை. ஆண்டுதோறும் 45அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய இரதங்கள் உருவாக்கப்படுகின்றன.






ஸ்ரீ ஜகந்நாதரின் தேர்

பெயர்: நந்திகோஷா

மாற்றுப் பெயர்கள்: கருடத்வஜா, கபிலத்வஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 832

சக்கரங்களின் எண்ணிக்கை: 16

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்): 44′ 2″ x 34’6″ x 34’6″

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் மஞ்சள்

காவலர்: கருடன்

தேரோட்டி: தாருகா

கொடியின் பெயர்: ட்ரைலோக்யமோகினி

குதிரைகளின் பெயர்: ஷங்க, பலஹாகா, சுவேதா, ஹரிதாஷ்வா

தேர் கயிற்றின் பெயர்: சங்கசூடா நாகினி

பரிவார தெய்வம்: மதன்மோகன்

துவாரபாலா: ஜெயா, விஜயா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): பஞ்சமுகி மஹாபீர், ஹரிஹர, மதுசூதனன், கிரிதர், பாண்டு நரசிங்க, சிதாமணி கிருஷ்ணா, நாராயணா, சத்ர பங்கா ரபனா, ஹனுமான் மீது அமர்ந்த ராமர்.


ஸ்ரீ பாலபத்ரரின் தேர்.....

பெயர்: தலத்வாஜா

மாற்று பெயர்: லங்காலத்வாஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 763

சக்கரங்களின் எண்ணிக்கை: 14

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்): 43′ 3″ x 33′ x 33′

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் நீல பச்சை

காப்பாளர்: வாசுதேவ்

தேரோட்டி: மாதலி

கொடி பெயர்: உன்னனி

குதிரைகளின் பெயர்: திரிப்ரா, கோரா, திர்காஷர்மா, ஸ்வர்ணனவா

தேர் கயிற்றின் பெயர்: பாசுகி நாகா

பரிவார தெய்வம்: ராமகிருஷ்ணர்

துவாரபாலா: நந்தா, சுனந்தா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): விநாயகர், கார்த்திகேயா, சர்வமங்களா, பிரலம்பரி, ஹலாயுதா, மிருத்யுஞ்சயா, நாதம்வர, முக்தேஸ்வர், ஷேஷதேவா.



ஸ்ரீ சுபத்திரை தேர்

பெயர்: தர்படலனா

மாற்று பெயர்கள்: தேவதாலனா, பத்மத்வஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 593

சக்கரங்களின் எண்ணிக்கை: 12

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்):

42’3″ x 31’6″ x 31’6″

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு

காவலர்: ஜெயதுர்கா

தேரோட்டி: அர்ஜுனா

கொடி பெயர்: நாதாம்பிகை

குதிரைகளின் பெயர்: ரோசிகா, மோச்சிகா, ஜிதா, அபராஜிதா

தேர் கயிற்றின் பெயர்: ஸ்வர்ணசூடா நாகினி

பரிவார தெய்வம்: சுதர்சனம்

துவாரபாலா: கங்கா, ஜமுனா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): சண்டி, சாமுண்டா, உக்ரதாரா, பனதுர்கா, ஷுலிதுர்கா, வாராஹி, ஷியாமகாளி, மங்களா, விமலா.
















எத்தனை விஷேசமான திருவிழா படிக்கும் போதும், பார்க்கும் பொழுதுமே  பரவசம் தரும் விழா. 



இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

உயர்வற உயர்ந்த மாயோன் வெண்ணெயுண்ட எளிமையில் ஈடுபடல் 

உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்

      உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம்

விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ

      அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்

வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று

      மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்

அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்

      அளை, வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே            (3)

1900

 


தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்

      சரண் ஆய், முரண் ஆயவனை உகிரால்

பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த

      பெருமான், திருமால், விரி நீர் உலகை

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை

      மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்

அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்

      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே            (4)

1901



 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பூரி ஸ்ரீஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் உற்சவங்களின் விபரம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். பதிவில் விபரமாக படிக்கும், போதும், படங்களை பார்க்கும் போதும் தேர் திருவிழா காட்சிகள் மெய்யுருகி சிலிர்க்க வைக்கிறது. சிறப்பான இத்தகவல்களை தந்திருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. ஒரு முறை பூரி கோவிலுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே சென்று எனது பக்கத்தில் சில பதிவுகள் எழுதி இருப்பது நினைவில் பசுமையாய்...

    ReplyDelete