வாழ்க வளமுடன்
காசி மாநகரின் பெருமைகள் -
சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ;
முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் ஒன்று ;
அம்மனின் சக்தி பீடம் ;
ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்புதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவஸ்தலம்..
காசியில் மரித்தால் முக்தி என்பது சைவ மரபில் தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகம். காசியில் இறப்பவருக்கு மரணத்தறுவாயில் காசி விஸ்வநாதரே தாரக பிரம்மத்தை உபதேசித்து நற்கதி அடையச் செய்கிறார்.
புனித காசி மாநகரைப் பற்றி இராமாயணம், பகவத்கீதை ஆகியவற்றில் பல குறிப்புகள் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன், தேவர்களான இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் தவம் செய்த இடம் இது.
தவசீலர்களான வியாசர், ஆதிசங்கரர் ஆகியோர் வசித்த இடமும் இதுதான்.
ரிக் வேதம் காசியை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்று குறிப்பிடுகிறது. ஸ்கந்த புராணம் மூவுலகிலும் காசிக்கு இணையான நகரம் கிடையாது என்று சிவபெருமான் கூறுவதாகச் சொல்கிறது.
'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும்.
கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.
பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.
சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.
கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.
வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.
பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.
அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது.
இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.
காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.
லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.
அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.
கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.
விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.
சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.
எங்களுக்கு ரூம் கொடுத்து விட்டார்கள், ஆனாலும் இப்பொழுது அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமே, அதனால் அனைவருக்கும் ரூம் என்பது கடினமே.
மிக அருமையான, மிக பழமையான இடம்.
இங்கும் சிவபெருமானுக்கு தனி ஆலயமும் மற்றும் பல சன்னதிகளும் உள்ளன. தினமும் வழிபாடுகளும் இங்கு நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும் இங்கு வருகிறார்கள். மேலும் பெரியவர்களுக்கு ஏதுவான உணவு இங்கு உண்டு. அதுவே பலர் விரும்பி இங்கு தங்க காரணம். காலை, மதியம், இரவு உணவுக்கான டோக்கனை முன்பே பெற்றுக் கொள்ளவேண்டும். சில நேரங்களில் அன்னதானமும் உண்டு.
முதல் திருமுறை
068 திருக்கயிலாயம்
பாடல் எண் : 1
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.
மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலைமலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரிநூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.
தொடரும் ...
அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼
அனுபிரேம் 🌼🌼🌼
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. காசி மாநகரத்து பெருமைகளை தொகுத்து தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. படித்து ரசித்தேன். காசி விஸ்வநாதரரையும், அன்னபூரணேஷ்வரியையும் வணங்கிக் கொண்டேன். படங்கள், மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப அழகான படங்கள் அனு. காசியின் பெருமையும் வாசிக்க வாசிக்க....எனக்கு இந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப வருடங்களாக உண்டு. அதாவதுபுண்ணியத்தலம் என்பதை விட, அங்கு செய்யப்படும் ரிச்சுவல்ஸ் என்பதை விட அந்த ஊர் ஏற்படுத்திய ஒரு தாக்கம்...கங்கை, சங்கமம் என்று பலதும்..
ReplyDeleteரசித்து வாசித்தேன் அனு
கீதா