19 June 2023

அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை)

 04/06/2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயிலில் தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

அன்று தான்  ஸ்ரீ ஸ்ரீ ஜெகன்னாத பிரபுவின் பிறந்தநாளாகக் கருதப்படுகிறது.








சூரிய நாள்காட்டியின்படி வைகாசி  மாத பௌர்ணமியில் இந்த உத்ஸவம் நடக்கும். சந்திரமான நாள்காட்டியின் படி பூரியில் இது ஜேஷ்ட மாதம்.[ ஆனி மாதம்] இந்நாளில் ஸ்ரீ ஜெகன்னாதரைத் தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கை. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.   தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டபோது இந்த விழாவை மன்னர் இந்திரத்யும்னன் முதல் முறையாக ஏற்பாடு செய்ததாக கந்த புராணம் குறிப்பிடுகிறது.

விடியற்காலையில் ஸ்ரீ ஜெகந்நாதர்,

ஸ்ரீ பலபத்திரர்,

ஸ்ரீ சுபத்திரா,

ஸ்ரீ சுதர்சன சக்கரம் மற்றும் ஸ்ரீ மதன் மோஹனரையும் கோவிலுக்கு வெளியே இருக்கும் ஸ்நான மண்டபத்துக்குக் கொண்டு வந்து எழுந்தருளச் செய்வார்கள்.

பூரி திருக்கோயிலுக்குள் "ஸூனா கூவொ" என்றொரு தீர்த்தக் கிணறு இருக்கிறது.

"ஸூனா கூவொ" என்றால் "தங்கக்கிணறு" என்று பொருள்.

"ஸூனா கூவொ" தீர்த்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து 108 மண் சால்களில் நிரப்புவார்கள். அதில் வாசனை திரவியங்களும் வேர்களும் போட்டு ஸ்நான மண்டபத்துக்குக் கொண்டு வருவார்கள். தீர்த்தக்  கிணற்றில் இருந்து வருடம் ஒரு முறை தான் நீர் எடுக்கப்படும்.

பிறகு  ஸ்ரீ ஜெகந்நாதர், ஸ்ரீ பலபத்திரர், ஸ்ரீ சுபத்திரை, ஸ்ரீ சுதர்சனர் நால்வருக்கும் அபிஷேகம் நடக்கும். 

ஸ்ரீ ஜெகந்நாதருக்கு 35 குடங்கள், 

ஸ்ரீ பலபத்திரருக்கு 33 குடங்கள்,

 ஸ்ரீ சுபத்திரைக்கு 22 குடங்கள், 

ஸ்ரீ சுதர்சனருக்கு 18 குடங்கள் ஆக மொத்தம் 108 குடங்கள் என, "ஸூனா கூவொ" தீர்த்தக் கிணற்று தண்ணீரால் அபிஷேகம் நடக்கும். மண் சால்களில் இருந்து வெள்ளிச் சொம்பால் எடுத்து அபிஷேகம் நடக்கும்.

அதன் பிறகு பூரி ராஜா வந்து,ஒருவர் சந்தனம் கலந்த தண்ணீரைத் தெளிக்க, தங்கப்பூண் போட்ட துடைப்பத்தால் ஜெகன்னாதர் முன் பெருக்குவார். .. அவர் ஜெகந்நாத தாசர் அல்லவா?அவர் அந்த கைங்கர்யத்தை செய்தால் தான் பிரபுவுக்கு திருப்தி. இந்த ஆண்டு இளவரசரும் உடன்வந்து அந்தக் கைங்கரியத்தைச் செய்தார். 












நீராடுதல் நிகழ்ச்சி முடிந்ததும், தெய்வங்களுக்கு 'சதா பேஷ' அலங்காரம் செய்யப்படுகிறது.

ஹாத்தி பேஷா --- 

 பிற்பகலுக்குப் பிறகு, ஜெகநாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ராவின் சிலைகள் மீண்டும் 'ஹத்தி பேஷா' (விநாயகர் அல்லது யானை உடையின் ஒரு வடிவமாக) என்ற யானை வேஷத்தில் தரிசனம் தருவார்.  

சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஒரு கணபதி உபாசகருக்காக, ஜகந்நாதன் கணபதியாக காட்சி தந்தார். அன்று முதல் இன்று வரை ஸ்னான  பௌர்ணமி அன்று ஸ்ரீ  ஜகந்நாதன் ஸ்னானத்திற்கு(அபிஷேகம்) பிறகு இவ்வாறு காட்சி அளிப்பார்.

தேவ ஸ்நான பூர்ணிமா நாளில் இறைவனுக்கு பிரசாதமாக ஒரு சிறப்பு போக் தயாரிக்கப்படுகிறது. மீண்டும் மாலையில், பொதுமக்கள் தரிசனம் செய்வதற்காக, தெய்வங்கள் 'சஹனமேள'க்காக காட்சியளிக்கின்றன.











"அனாபஸார காலம்!"

பிறகு மூவரையும் அனாபஸார கரொ (Anasara Ghara) எனப்படும் ஓர் இடத்துக்கு எடுத்து செல்வார்கள்.

108 குடங்களால் ஸ்நானம் செய்ததால் , மேனி மிகவும் குளிர்ச்சி அடைந்து மூவருக்கும் ஜுரம் வந்து விடுவதாக ஐதீகம்.

இரண்டு வாரங்கள் அந்த கிருஹத்தில் தான் மூவரும் இருப்பார்கள். பக்தர்களுக்கு அப்போது தரிசனம் கிடையாது. ஜுரம் என்பதால் கஷாயம்,மூலிகை மற்றும் பழங்கள் தான் நிவேதனம். ஆகவே அன்ன பிரசாதமோ அல்லது வேறு பிரசாதங்களோ "ரத ஜாத்ரா" வரை சமைக்கமாட்டார்கள்.

 ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, ஸ்ரீ ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்!

அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் மட்டுமே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும்!

இந்த இரண்டு வாரங்கள் பகவானை யாரும் தரிசிக்க இயலாது!

இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதனின் மூர்த்திகள், ஸ்ரீ ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளைத் துணியிட்டு மூடி வைப்பார்கள்! 

ஆஷாட (ஆடி) அமாவசை வரையிலான இந்த பதினான்கு நாள்கள், பக்தர்களுக்குக் கோயிலில் தரிசனம் அனுமதியில்லை. ஆஷாட (ஆடி), சுக்லபக்ஷ வளர்பிறை, பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். ஸ்ரீ ஜகந்நாதன்,ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். அதற்கு " நபயௌவன (புதிய இளமை) தரிசனம் " என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்!

( இதற்கு வேறு ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது ---- பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயிலில் மூல விக்கிரகங்கள் மரத்தால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டவை. அதனால் வருஷம் ஒரு முறை தான் அபிஷேகம். அபிஷேகத்தால் வர்ணம் அழிந்து விடும். விக்ரஹங்களை தனி அறையில் வைத்து, பதினைந்து நாள்கள்  மறுபடி வர்ணம் தீட்டுவார்கள். பதினைந்து நாட்கள் முடிந்து ரத யாத்திரையின் போது தேர் ஏறுகையில் மூவரும் புதுப்பொலிவோடு ஜொலிப்பார்கள்! )

பதினைந்து நாட்கள் கழித்து ரத யாத்திரை அன்று காலை, ஜூரத்தில் இருந்து எழுந்தவர்களுக்கு எளிதாக ஜீரணமாகும் கிச்சடி பிரசாதத்தை நைவேத்தியமாகச் சமர்பிப்பார்கள். பின்  ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, ஸ்ரீ ஜகந்நாதன் மூவரும் தேர் ஏறுவார்கள்!

அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற "பூரி ஜெகந்நாத ரத யாத்திரை!"


இந்த ஆண்டு தேர் பணிகள் ...
















இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

உயர்வற உயர்ந்த மாயோன் வெண்ணெயுண்ட எளிமையில் ஈடுபடல் 

எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
      -நர நாரணனாய் உலகத்து அற நூல்
சிங்காமை விரித்தவன், எம் பெருமான்
      அது அன்றியும், செஞ்சுடரும், நிலனும்
பொங்கு ஆர் கடலும், பொருப்பும், நெருப்பும்,
      நெருக்கிப் புக, பொன் மிடறு அத்தனைபோது
அங்காந்தவன் காண்மின்-இன்று, ஆய்ச்சியரால்,
      அளை, வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே (1)

1898


 
குன்று ஒன்று மத்தா, அரவம் அளவி,
      குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால்,
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர
      நினைந்த பெருமான் அது அன்றியும், முன்
நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ்
 மலை ஏழ்   உலகு ஏழ் ஒழியாமை நம்பி
அன்று, உண்டவன் காண்மின்-இன்று, ஆய்ச்சியரால்,
      அளை, வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே (2)

1899




நாளை பூரி ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள்,  சுபத்ராதேவி, பலராமஸ்வாமி தேர் காட்சிகளுடன்  தொடரும் ...



 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖

2 comments:

  1. இன்று பூரி ஜகந்நாத் கோவில் ரத யாத்திரை. சிறப்பான பதிவாக அமைந்தது. தகவல்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பக்தி உலா.

    ReplyDelete