10 June 2023

50. இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே!

(50) இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே! 




மதங்க முனிவரின் காலத்தில், சபரி என்ற வேடுவ குல பெண் வாழ்ந்து வந்தார். வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர்.

 சிறு வயது முதலே சிறந்த பக்தியும் குணமும் நிறைந்த சபரி, மதங்க முனிவரின் போதனையால் அவருக்கு சிஷ்யையாக அவரது ஆஷ்ரமத்தில் சேர்ந்தார். ஆஷ்ரமத்தில் அவருக்கும், அவரது சிஷ்யர்களுக்கும் பணிவிடைகள் செய்து வந்தார் சபரி.


காலங்கள் சென்றன. 

மதங்கரும் அவரது சிஷ்யர்களும் யோக நெறியில் சித்தி பெற்று முக்தி அடைந்தனர். மதங்கர் இல்லா உலகம் தனக்கும் வேண்டாம். எனவே தன்னையும் அழைத்து செல்லுமாறு சபரி வேண்டினார். 

மதங்கர் சபரியிடம் “இன்னும் சில காலங்களில், ஸ்ரீ இராமனும் லக்ஷ்மணனும் இவ்வழியே வருவர். அவர்களை தகுந்த முறையில் உபசரி. இராம தரிசனம் பெற்ற பிறகு மோக்ஷம் அடைவாய்” என்றார். தன் ஆச்சாரியாரின் வார்த்தையின் படி சபரி இராமர் வரும்வரை ஆசிரமத்தில் இருந்து இராம நாமம் கூறிக்கொண்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.

வருடங்கள் பல சென்றன. 

எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து காலம் செல்வதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த ‘இராம’ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஓதிக்கொண்டிருந்தார்.


கம்பர் இதனை சபரி தனது வாயால் கூறுவதாக கூறுகிறார்:



3804. “ஈசனும், கமலத் தோனும்,

    இமையவர் யாரும், எந்தை!

வாசவன் தானும் ஈண்டு

    வந்தனர், மகிழ்ந்து நோக்கி,

‘ஆசு அறு தவத்திற்கு எல்லை

    அணுகியது; இராமற்கு ஆய

பூசனை விரும்பி, எம்பால்

    போதுதி ‘என்று போனார். ‘‘


அதவாது, தேடிப்போய் அடையப்பட வேண்டிய சிவன் முதலியோரை, ஒற்றைக் குறிக்கோளோடு இராம நாமத்தை உறைத்து நின்றதாலேயே அவர்கள் சபரியைத் தேடி வந்தனர் என்கிறார். இது சபரி, இராமனையே நினைந்து நோற்ற தவத்தின் மேன்மை.


ஒவ்வொரு நாளும் இராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த முதியவரான சபரி, அனுதினமும் காலை, தனது கைத்தடியுடன் ஆஷ்ரமம் நீங்கி, காட்டினுள்ளே சென்று, வாடாத மலர்களையும், முதிராத சுவை விலகாத கனிகளையும் பறித்து வருவார். 

பறித்து வந்த கனிகளை கடித்துச் சுவைத்துப் பார்ப்பார். இனிய சுவையுடைய கனிகளை மட்டும் இராமனுக்கு என்று தனியே எடுத்து வைப்பார். பின், ஸ்ரீ இராமனின் வருகைக்காக வாசலில் அமர்ந்து விடுவார்.


சீதையை கடத்திக் கொண்டு சென்ற பிறகு இராமரும் லக்ஷ்மணனும் அங்கும் இங்குமாய் வனத்தில் தேடி அலைந்தனர். அப்படி இருக்கும்போதுதான் அவர்கள் ராக்ஷஷனான கபந்தனை கொன்றனர். கபந்தன் பரலோகம் செல்லும் அவர்களிடம் வானர ராஜன் சுக்ரீவனை சந்தித்து அவனிடம் நட்பு பாராட்ட கூறினான். அப்படியே போகும் வழியில் மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் இளைப்பாறிவிட்டு போகச் சொன்னான்.


இராமரும் லக்ஷ்மணனும் ரிஷ்யமுக பர்வதம் நோக்கி பயணம் செய்தனர். வெகுதூரம் நடந்ததன் களைப்பில், சபரியின் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மதங்கர் கூறியிருந்தபடி, இராமர் வந்ததைக் கண்டு பூரிப்படைகிறார் சபரி.


மதங்காஸ்ரமத்திற்குள் ஸ்ரீ இராமனையும் லக்ஷ்மணனையும் அழைத்தார். அன்புடனும் பண்புடனும் உபசரித்தார். சற்று முன் சபரி பறித்து கடித்துச் சுவைத்துப் பார்த்து சேகரித்து வைத்திருந்த இனிய கனிகளை இராமரிடம் கொடுத்தார். தூய பக்தியோடு தனக்கென எடுத்து வைத்த இனிய கனிகளை இராமர் உண்டு மகிழ்ந்தார். லக்ஷ்மணனுக்கும் கொடுத்தார்.


இதற்கிடையில், சபரி தனது பாவங்களிலிருந்து விடுபட்டு ஆச்சார்ய பக்தியின் பலன்களை பெற்றார். சபரி, இராமனிடம் தனக்கு ‘முக்தி கொடு' என்று கேட்கவில்லை. 

இராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. இராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதசேம் பெற்று, ஸ்ரீ இராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே இராம நாமத்திற்காக அர்ப்பணித்தார்.


அப்பேற்பட்ட சபரியைப் போல் இனிய பழங்களை மட்டுமே எங்கள் வைத்தமாநிதி பெருமாளுக்கு ஈந்தேனோ நான்? இல்லையே. பிறகு ஏன் நான் இங்கு இருக்க வேண்டும்? நான் புறப்படுகிறேன்" என்கிறாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -முதற் பத்து

1- 9 இவையும் அவையும் 

ஆழ்வாரோடு  எம்பெருமான் கலந்த வகை 


கமலக் கண்ணன், என் கண்ணின் உள்ளான், காண்பன் அவன் கண்களாலே,

அமலங்கள் ஆக விழிக்கும், ஐம்புலனும் அவன் மூர்த்தி,

கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி

அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே. 9.9

2995


நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி,

கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,

ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,

மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சி உளானே. 9.10

2996


உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் கண்ணபிராற்கு,

இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குருகூர்ச் சடகோபன்,

இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,

நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள்கழல் சென்னி பொருமே. 9.11

2997












51. திருவெஃகா

ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

1 comment:

  1. தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடரட்டும் பக்தி உலா.

    ReplyDelete