வாழ்க வளமுடன்
13. காசி அன்னபூரணி கோவில் ...
பராசக்தி பல வடிவங்கள் கொண்டு பக்தர்களைக் காக்கிறாள்.
முப்பெருந்தேவிகளாக துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என உருக்கொண்டு கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கிறாள். அதுபோல எல்லா உயிர்களுக்குமே உணவளித்து வறுமைப் பிணியிலிந்து காப்பதையே தன் கடமையாகக் கருதும் அம்பிகையே அன்னபூரணியாக அவதரித்து காசி மாநகரில் திருவருள் புரிந்து வருகிறாள்.
அன்னபூரணி காசி வந்த வரலாறு ....
கந்தமகா புராணத்தில் உள்ள அருணாச்சல மகாத்மியத்திலும், மார்க்கண்டேய புராணத்தின் துணை நூலான காமாட்சி விலாசத்திலும் அன்னபூரணியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தேவரும் முனிவரும் எப்போதும் தியானிக்கும் கயிலைவாசன், ஏகாந்தமாக தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள்.
சூரிய, சந்திரரை வலது, இடது கண்களாகவும், அக்கினியையே நெற்றிக் கண்ணாகவும் கொண்டவர் சிவபெருமான். தேவி அவர் கண்களைப் பொத்தியதால் சூரிய, சந்திரர் தம் ஒளியிழந்தனர். அதனால் உலகம் இருண்டது. அனைத்து உயிர்களும் பரமேஸ்வரனை சரணடைந்தனர்.
அவர் தன் அக்கினிமயமான நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளியைத் தந்தார்.
இவை அனைத்தும் கணநேரத்தில் நடந்ததால் பார்வதி தேவி பயந்து உடனே தன் கைகளை ஈசனின் கண்களிலிருந்து எடுத்தாள். கூடவே மனம் கலங்கி அவரிடம் ‘‘நான் விளையாட்டாக தங்கள் கண்களை பொத்தியதால் ஏற்பட்ட பாவம் நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டாள்.
‘‘நமக்கு இது கண்ணிமைக்கும் நேரமே என்றாலும் உலக உயிர்களுக்கு அது எவ்வளவு காலம் என்று உனக்குத் தெரியாதா தேவி? ஏன் இந்த குறும்புத்தனம்? ஆனாலும் நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஆகவே உன்னை ஒரு பாவமும் அணுகாது’’ என்றார் ஈசன்.
அந்த வார்த்தைகளால் சமாதானமடையாத அம்பிகை பூவுலகில் தவம் செய்து உலக உயிர்களுக்குத் தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தம் தேட முயன்றாள்.
ஈசனின் அனுமதி பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள்.
அந்த சமயம் காசி திருத்தலம் மழையின்றி, கடும் பஞ்சம் பூண்டிருந்தது. மக்கள் பசியினால் துடித்தார்கள். தேவி காசியை அடைந்து அங்கு அற்புதமான ஒரு திருக்கோயிலை உருவாக்கி அன்னபூரணி எனும் பெயரில் நிலைகொண்டாள்.
அவள் திருக்கரத்தில் என்றுமே வற்றாத அட்சய பாத்திரம் எனும் அமுதசுரபியும், பொன்னாலான கரண்டியும் இருந்தன.
அவள் உயிர்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தாள். அதனால் மக்களின் பசிப்பிணி நீங்கியது. மக்கள் அன்னபூரணியை போற்றிப் புகழ்ந்தனர். அவள் புகழ் திக்கெட்டும் பரவியது.
காசியில் கடும்பஞ்சம் நிலவும் வேளையில் அன்னபூரணி தேவி அனைவருக்கும் உணவளிக்கும் செய்தியை அறிந்த மன்னன், தேவியைச் சோதனை செய்ய எண்ணினான்.
தன் வீரர்களை அவளிடம் அனுப்பி சிறிதளவு தானியம் கடனாகப் பெற்று வரப் பணித்தான். அதன்படி அம்பிகையிடம் வந்த வீரர்கள் மன்னனின் ஆணையைத் தெரிவித்தார்கள். அதற்கு தேவி, ‘‘நான் தானியங்களைத் தர மாட்டேன். வேண்டுமென்றால் உங்கள் மன்னன் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து உணவருந்திச் செல்லலாம்’’ என்றாள்.
விவரம் தெரிந்து கொண்ட மன்னனும் அவன் அமைச்சரும் மாறுவேடம் பூண்டு அன்னபூரணி எழுந்தருளியிருந்த திருமாளிகைக்குச் சென்றனர்.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
மன்னனும் அமைச்சரும் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தினார்கள்.
தேவியின் திருக்கரத்தில் உள்ள தங்கபாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாத உணவு வந்து கொண்டிருந்ததைக் கண்ட மன்னன், அவள் சாட்சாத் பராசக்தியே என்பதனை உணர்ந்தான்.
தேவியின் திருவடிகளைப் பணிந்தான். ‘‘தாயே என் அரண்மனைக்கு எழுந்தருளி அடியேனை ஆட்கொள்ளவேண்டும்’’ என்று கண்ணீர் மல்கக் கதறினான்.
அவன் பக்திக்கு மெச்சிய தேவி தன் சுய உருவத்தை அவனுக்குக் காட்டினாள்.
‘‘நான் இங்கு தங்கிய காரணத்தால் இனி காசியில் பஞ்சமே ஏற்படாது; அப்படி ஏற்பட்டாலும் நான் உடனே வந்து பஞ்சத்தைத் தீர்ப்பேன். அதோடு நான் தவம் செய்யும் பொருட்டு தென்திசை போக வேண்டும். நீ மக்களைக் கண்ணும் கருத்துமாய் காப்பாயாக’’ என்றாள்.
‘‘அம்மா! தங்கள் சாந்நித்யம் எப்போதும் இங்கு நிலைத்தருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டான் காசி மன்னன்.
அதன்படி தேவி தன் சாந்நித்யத்தை அங்கு நிறுவி தன் பக்தர்களைக் காத்து அருள்புரிந்து வருகிறாள். இதுவே தேவி அங்கு நிலைகொண்டதற்கான ஆதிகாரணமாகக் கூறப்படுகிறது.
ஆதிசங்கரர் ஒருமுறை அன்னபூரணியிடம், உலகோர் பசி போக்குமாறு துதி செய்தார். ‘நித்யானந்தகரீ’ எனத் தொடங்கும் அந்த துதியின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் ‘பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி’ என முடித்திருப்பார்.
கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணி தேவியே, எனக்கு பிட்சையிடுவாயாக என்பது அதன் பொருள்.
அந்த அன்னபூர்ணாஷ்டகத்தின் கடைசி ஸ்லோகத்தில் ஞானம், வைராக்யம் இரண்டையும் பிட்சையாக அருள்வாயாக என்று கேட்டு அன்னபூரணியைப் பிரார்த்தித்துள்ளார்.
மேலும், ‘மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர: பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்’ என்றும் கூறியுள்ளார்.
தன் பசிக்கான உணவை குழந்தை முதலில் தாயிடமே கேட்கும். அம்மாவிடம் கேட்க இயலாத சூழ்நிலையில் அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் அவ்வழியையே பின்பற்றி எனக்கு பார்வதியான நீயே அம்மா, ஈசனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் உறவினர்கள், மூவுலகங்களும் எனது வீடு என்ற பொருளில் இத்துதியை பாடியுள்ளார்.
காசியில் அருளும் அன்னபூரணி தேவி தன் திருக்கரங்களில் ஒரு கையில் உள்ள தங்கப் பாத்திரத்தில் பால் சோற்றை ஏந்தியுள்ளாள். உலகிலுள்ள ஜீவன்களின் பசியாற அவள் தன் மறுகையில் உள்ள தங்கக்கரண்டியால் அள்ளி அள்ளி அந்த பால்சோற்றை அனைவருக்கும் அளிக்கிறாள். அந்த பால் சோற்றோடு ஞானத்தையும் சேர்த்தளித்து நம் வயிற்றுக்கு மட்டுமல்லாமல், ஆத்மாவிற்கும் உணவிடுபவளாகத் துலங்குகிறாள்.
காசி அன்னபூரணி கோவில் அமைப்பு ---
காசி விஸ்வநாதர் சந்நதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரை தரிசித்து பின் சற்று தொலைவில் அன்னபூரணி தேவியின் ஆலயத்தை அடையலாம்.
ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தின் மேல் வடஇந்திய பாணியில் அமைந்த விமானத்தின் வெவ்வேறு அளவிலான கூம்புகள், உச்சியில் பறக்கும் கொடியுடன் கோலாகலமாகக் காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்ததும், கர்ப்பக்கிரகத்துக்கு நேர் எதிரில் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் இருந்துதான் கர்ப்பக்கிரகத்தில் அருள்பாலிக்கும் அன்னை அன்னபூரணியைத் தரிசிக்க இயலும்.
அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயிலின் வலது புறம் பாதாளலிங்கமும், இடது புறம் சிறிய கிணறும் உள்ளன. மராட்டியர் கால கட்டிட அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது.
அதன் நடுவில் சந்நதிக்கு முன் அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தை பன்னிரண்டு கற்தூண்கள் தாங்குகின்றன.
அன்னையின் பீடத்துக்குக் கீழே, ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்ரம் கண்களுக்குப் புலப்படாது. எனினும், அன்னபூரணியின் அழகைக் கண்ணுறும்போது ஸ்ரீசக்ரத்தைத் தரிசிக்கமுடியாத குறை நிவர்த்தியாகிவிடும்.
இரண்டடி உயர கருங்கல் சிலையாக நிற்கும் அன்னபூரணி, இடது கையில் அன்னப் பாயசப் பாத்திரத்தையும், வலது கையில் வாரி வழங்கும் கரண்டியையும் ஏந்தி, காட்சி தருகிறாள்.
கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன. தென்கிழக்கு நோக்கிய வாயிலிலிருந்து அன்னபூரணியை தரிசிக்கலாம். மற்ற இரண்டு வாயில்களும் தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் என அழைக்கப்படுகின்றன. அதன் மூலமாக பக்தர்கள் அன்னையின் அருளைப் பெறுகின்றனர். காசியில் தங்க அன்னபூரணி தரிசனம், தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும்.
இருபுறமும் தேவி-பூதேவியர் வீற்றிருக்க அருளும் தேவியிடம், பிட்சாண்டிக் கோலத்தில் விஸ்வநாதப் பெருமான் பிட்சை கேட்கும் அற்புதத் திருக்கோலத்தைக் காண இரு கண்கள் போதாது. சுத்த தங்கத்தால் ஆன அன்னபூரணியின் திருவுருவம் கண்களைக் கூசச் செய்யும் ஒளியுடன் பிரகாசிக்கும்.
இடக்கரத்தில் தங்கக்கிண்ணம் ஏந்தி வலக்கரத்திலுள்ள தங்க அகப்பையால் ஈசனுக்கு படியளக்கிறாள் தேவி. அவள் அணிந்திருக்கும் நவரத்ன கிரீடம் மேல் தங்கக் குடை அணி செய்கிறது. சொர்ண புடவை பூண்டு, மார்பிலும் கழுத்திலும் நவரத்ன ஆபரணங்கள் மின்ன, பத்மாசனத்தில் அன்னை கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.
ஒரு ஆள் உயரத்தில் பிட்சாடனர் வெள்ளி விக்ரகமாக திருவோடு ஏந்தி அன்னபூரணியிடம் பிட்சை கேட்கும் பாவனையில் அலங்கரிக்கப்படுகிறார். நாகாபரணத்தை அணிந்து இடுப்பில் புலித்தோலுடன் ஒரு கையில் உடுக்கையும், மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய அவரது அழகே அழகு.
இக்கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே வலப்பக்கம் காளிங்க நர்த்தனமாடும் கண்ணன். இடப்பக்கம் கஜலக்ஷ்மி, ஆலயத்தின் வடகிழக்கில் குபேரர் குடிகொண்டிருக்கிறார். அடுத்தபடியாக கௌரிஷங்கர். அக்கினி பகவானுக்கு ஆஸ்தான இடமான தென்கிழக்கு மூலையில் சூரிய நாராயணர், நான்கு கரங்களுடன் ரதத்தில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார். தேரோட்டி அருணன் ஏழு குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.
சிந்தாமணி கணபதி அடுத்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வாயு மூலையான வடமேற்கு மூலையில் துளசிதாசர் ஸ்தாபித்த ஆஞ்சநேயர் சந்நிதி. அருகில் ராமர் சந்நிதி.
அன்னபூரணியின் கருவறையை நோக்கியவாறு சத்தியநாராயணர் எழுந்தருளியிருக்கிறார். அவரைச் சுற்றிலும் சிறிய அளவில் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் முதல்தளத்தில் தங்கியிருக்கும் தங்க அன்னபூரணி தீபாவளிக்கு முதல் நாள் நரகசதுர்த்தசி அன்று, உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறாள்.
அபிஷேகம், ஆரத்தி அடங்கிய உச்சிக்கால பூஜைக்குப் பின்னர் திரைக்குப் பின்னால் மறைந்துவிடும் தங்க அன்னபூரணி, மறுநாள் தீபாவளி அன்று விடியற்காலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறாள்.
தீபாவளிக்கு அடுத்த நாளும் தரிசனம் தொடர்கிறது.
அன்னை கொலு மண்டபத்தின் மையத்தில் பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்க, அவள் அங்கமெங்கும் தங்க ஆபரணங்கள்.
தலையில் மணிமகுடம்.
அதற்கு மேல் தங்கக் குடை, மார்பிலும், கரங்களிலும் மின்னும் மணியாரங்கள், வைரம், வைடூரியம், மரகதம், புஷ்பராகம், கோமேதகம் என விலைமதிப்பற்ற அத்தனை கற்களும் ஆபரணங்களில் இழைக்கப்பட்டிருக்கின்றன.
இடக்கரத்தில் தங்கக்கிண்ணம். வலக்கையில் தங்கக் கரண்டி., எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் வெள்ளி விச்வேஸ்வரருக்கு அன்னமிடுகிறாள் ஞானத்தாய்.
அன்னபூரணிக்கு வலது பக்கத்தில் தங்கத்திருமேனியுடன் ஐஸ்வர்ய நாயகி லக்ஷ்மி. இடது புறத்தில் வற்றாத செல்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பொன்னாலான பூமி தேவி. அவர்களும் வலக் கரங்களை உயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்.
சமைக்கப்பட்ட அன்னம், இனிப்புகள், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு சமைக்கப்பட்ட கூட்டு போன்ற பதார்த்தங்கள் அன்னைக்கு முன் அம்பாரமாகப் படைக்கப்பட்டுள்ளன.
அன்னையின் செவ்விதழில் புன்னகை தவழ்கிறது.
'என் குழந்தைகளின் பசியைப் போக்கத்தானே நான் இங்கு வீற்றிருக்கிறேன். இந்தா, பெற்றுக் கொள்!’ என்று அந்தக் கருணைநாயகி கூறுவது போல் தோன்றுகிறது.
காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது.
தீபாவளி சமயத்தில் இந்த அன்னபூரணி தேவி லட்டுத் தேரில் பவனி வருகிறாள். பிறகு அந்த லட்டை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். இந்த வைபவம் மிகவும் விமரிசையாக இங்கு நடக்கிறது.
தலையில் ரத்தின மகுடம், உடலெங்கும் மணிகளாலான பல்வேறு ஆபரணங்கள், நவரத்தினங்களும் வைர, வைடூரிய, மரகத, பவழ, கோமேதக, புஷ்பராக, மாணிக்கங்கள் ஜொலிக்கும் பொன் நகைகளோடு தேவி அருள்புரிகிறாள். இந்த அன்னபூரணி சந்நதிக்கு எதிரில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சக்ர மேரு உள்ளது. பூஜைகள், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை முதலானவை இந்த மேருவிற்கும் செய்யப்படுகின்றன.
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் உரிமையை அன்னை பார்வதிக்கு அளித்திருந்தார் ஈசன். ஒரு சமயம் திருக்கயிலையில் ஈசன் பார்வதியோடு உரையாடிக் கொண்டிருந்தார்.
அந்த சமயம் ஈசன் பார்வதியிடம் ‘‘தேவி அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து விட்டாயா?’’ என கேட்டார். அனைவருக்கும் அன்னம் பாலித்து விட்டேன் என்றாள் தேவி.
அப்போது ஈசன் தன் இடுப்பிலிருந்த சிறு பாத்திரத்தை எடுத்து திறந்து பார்த்தார். அதில் ஒரு எறும்பு இருந்தது. அதன் வாயில் அரிசி நொய் ஒட்டிக் கொண்டிருந்தது! ‘‘தேவி நீ ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் முன்னேயே அந்த எறும்பை இந்த பாத்திரத்தில் வைத்தேன்.
சகல ஜீவராசிகளுக்கும் நீ படியளந்தது இதில் நிரூபணமாயிற்று,’’ எனக் கூறி தேவியைப் பாராட்டி ஆசிர்வதித்தார். அன்னபூர்ணாஷ்டகம், அன்னபூர்ணாபஞ்சரத்னம் போன்ற துதிகளால் அன்னபூரணி தேவியை ஆராதித்து அவள் திருவருள் பெறலாம்.
காசி அன்ன பூரணி
பிரம்மனின் செருக்கை அறுக்க, அவன் தலைகளில் ஒன்றை அரிந்தான் ஆதிசிவன். அதனால், பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான் ஐயன். அந்தத் தோஷம் அரனின் அடிவயிற்றில் பசிப் பிணியாகப் பற்றிக் கொண்டது. பசிப்பிணி அகல வேண்டுமெனில், பரமசிவன் கையில் கபாலம் தாங்கிப் பிச்சை புக வேண்டும்; அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் ஆதிசக்தி அன்னம் அளித்து அது நிறைய வேண்டும் என்பது விதி.
ஆதிசக்தி, அன்னபூரணி அவதாரம் எடுத்தாள்.
ஆண்டவன் ஏந்திய கபாலத்தை அன்னமிட்டு நிரப்பினாள்.
பரமேஸ்வரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பின்வாங்கியது.
ஆண்டவனுக்கே படியளந்த அன்னை அன்னபூரணிக்கு காசி மாநகரில் ஆலயம் அமைந்ததற்கு மற்றோரு அற்புதமானதொரு வரலாறு உள்ளது.
காசியில் தேவதத்தன், தனஞ்செயன் எனும் சகோதரர்கள் இருவர் இருந்தனர். தேவதத்தன் செல்வந்தன்; தனஞ்செயன் தரித்திரன்.
ஒருநாள், மணிகர்ணிகைத் துறையில் முக்குளித்து, விஸ்வேஸ்வரனைத் தரிசித்து விட்டு, புசிப்பதற்கு ஏதுமின்றி, காசியின் முக்தி மண்டபத்தில் பசியுடன் அமர்ந்திருந்தான் தனஞ்செயன்.
'இப்படி அன்னதோஷம் என்னைப் பீடிக்க என்ன காரணம்? எந்தப் பிறவியில், எவருக்கு, என்ன கெடுதல் செய்தேன்?’ எனப் பலவாறாக யோசித்துப் பசி மயக்கத்தில் ஆழ்ந்தான்.
அப்போது, கனவொன்று கண்டான். கனவில் கருணை முகத்துடன் ஒரு சந்நியாசி காட்சி தந்து, 'தனஞ்செயா! முன்னொரு காலத்தில் காஞ்சியில் சத்ருமர்தன் எனும் ராஜகுமாரன் இருந்தான். அவனும் அவன் தோழனான ஹேரம்பனும் வேட்டைக்காகக் காட்டுக்குச் சென்று, வழிதவறி நிலை தடுமாறினர், பசியால் பரிதவித்தனர்.
ஆதவன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் ஒரு முனிவர் கண்டார். தமது ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று தாகம் தணித்ததுடன், பசியை அடக்கப் பாலில் வேகவைத்த அரிசி மாவை அளித்தார். ராஜகுமாரன் சத்ருமர்தன் அதை ஆவலுடன் உண்டான். அவன் தோழன் ஹேரம்பனுக்கோ அந்த அரிசி மாவுக் கஞ்சி அற்பமாகத் தோன்றியது. கொஞ்சம் உண்டுவிட்டு, மிச்சத்தை எறிந்தான்.
அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதால்தான், அப்பிறவியில் ஹேரம்பனாக இருந்த நீ, இப்பிறவியில் தனஞ் செயனாகத் தரித்திரத்தைத் தழுவியிருக்கிறாய். அரச குமாரனோ, உன் சகோதரன் தேவதத்தனாகப் பிறந்து, திரளான செல்வத்தையும், குன்றாத அன்னத்தையும் கொண்டிருக்கிறான்.
அன்னத்தை அவமானப்படுத்தியதால், அன்னதோஷத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். இந்த நிலை மாறவேண்டுமானால், அன்னபூரணியைச் சரண் அடை. விரதம் இருந்து அன்னபூரணியை ஆராதித்தால், அவள் அருளைப் பெறலாம். உன் தரித்திரத்தை ஒழித்துக் கட்டலாம்...' என்று கூறினார்.
கனவு கலைந்தது.
தனஞ்செயன் துள்ளி எழுந்தான்.
அன்னபூரணி விரதம் இருக்க விழைந்தான்.
அஸ்ஸாமில் உள்ள காமரூபம் எனும் இடத்தில், மலையடிவாரத்தில் உள்ள ஏரிக்கரையில் தேவி பூஜையில் ஈடுபட்டிருந்த தேவகன்னியரிடம், அன்னபூரணி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்த தனஞ்செயன், காசியை நோக்கிக் கடுகி வந்தான்.
நியமங்களைக் கடைப்பிடித்து, அன்னபூரணி ஆராதனையைப் பங்கம் எதுவுமின்றிப் பண்ணி முடித்தான். இருந்தும், அவனால் அன்னபூரணியின் அருளைப் பெறமுடியவில்லை.
'இனி நான் எங்கே போவேன்? யாரைக் கேட்பேன்?’ என்றெல்லாம் ஓலமிட்டபடி, காமரூபத்தை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி, நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது.
எந்த இடத்தில் அன்னையின் அம்சம் கொண்ட ஆரணங்குகள் அவனுக்கு அன்னபூரணியைப் பூஜிக்கும் முறைகளைப் போதித்தார்களோ, அந்த இடத்தில் ஓர் இருட்டுக் கிணறுதான் இடம் பிடித்திருந்தது. வாழ்க்கையை வெறுத்த தனஞ்செயன் அந்த இருட்டுக் கிணற்றில் குதித்தான்.
ஆனால், அவன் இறக்கவில்லை.
அந்தக் கிணற்றில் கண்களைக் கூச வைக்கும் ஓர் ஒளிப்பிரதேசம் தெரிந்தது.
தனஞ்செயன் அந்த இடம் நாடிச் சென்றான், அங்கே ஓர் அற்புதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. ஓர் அழகான ஏரி, அதன் கரையில் தெய்வ பூஜையில் ஈடுபட்டிருந்த தேவ கன்னிகைகள், வேத முழக்கம், இனிய சங்கீதம்.
அந்தச் சூழ்நிலையில், ஸ்படிக உடலுடன் ஓர் ஆண்மகன் ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் சடையில் பிறை. முகத்தில் ஒளிர்ந்த மூன்று கண்கள். அவன் உடல் முழுவதையும் ஆபரணங்களாக அலங்கரித்திருந்த நாகங்கள்.
அவனுக்கு அருகில், ரத்தினப் பல்லக்கு ஒன்றில் அலங்கார ரூபிணியாக ஓர் அன்னை அமர்ந்து, அந்த ஆனந்த நடனத்தை ஆர்வம் பொங்க ரசித்துக்கொண்டிருந்தாள்.
அந்தப்புரத்தில் நுழைந்து தன்வசமிழந்து நின்ற தனஞ்செயனை, பல்லக்கு நாயகி தன்னருகே வருமாறு கண்களால் கட்டளையிட்டாள். தனஞ்செயன் அந்த அம்பிகையின் காலடியில் வீழ்ந்தான்.
'தனஞ்செயா! எந்த அன்னபூரணியைத் தேடி அலைந்தாயோ, அந்த அன்னபூரணியே நான். ஈசனின் ருத்ரதாண்டவத்தைக் கண்டுகளிக்க, சக்தியாக இங்கே வீற்றிருக்கிறேன். உன் விரத மகிமையால் என்னைக் காணும் பேறு உனக்குக் கிட்டியிருக்கிறது' என்றாள்.
'அன்னையே! உங்கள் இருவரின் திவ்விய தரிசனத்தால் பிறவிப் பெருங்கடல் கடக்கும் பாக்கியம் பெற்றேன். உங்களை வணங்குகிறேன்' என்று, வார்த்தைகள் பிறழக் கதறினான் தனஞ்செயன்.
அன்னபூரணி புன்னகைத்தாள்.
'தனஞ்செயா! அன்னபூரணி விரதத்தை இனி யார் மேற்கொண்டாலும், அவர்களுக்கு அன்னத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது. அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும். எந்த வீட்டில் என்னை பூஜிக்கிறார்களோ அந்த வீட்டில் நான் வந்து வாசம் புரிவேன். திரும்பிச் செல். அன்னபூரணி விரதத்தை மறுபடி நேம நியமங்களுடன் தொடங்கி, முடி. உனக்கு அருள்பாலிக்கும் ஆசையுடன் நான் கங்கைக்கரை காசிக்கே வருகிறேன். என் ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பு. அங்கே நான் வந்தமர்ந்து வாசம் புரிகிறேன்' என்று அன்னபூரணி அருள் வாக்கு அளித்தாள்.
தனஞ்செயன் மீண்டும் காசிக்கு வந்தான்;
அன்னபூரணி விரதத்தை மேற்கொண்டான்.
அவனது இல்லத்தில் வறுமை தொலைந்தது. வாழ்வு வளம் பெற்றது. அன்னபூரணியின் ஆணைப்படி அவளுக்கு ஓர் ஆலயம் அமைத்தான். காசியின் ஆட்சிப்பீடத்தில் அன்னபூரணி வந்து அமர்ந்து அருள்பாலிக்கத் தொடங்கியது இவ்வாறுதான்!
'காசிபுராதீஸ்வரி’ என்று ஆதிசங்கரர் தமது அன்னபூர்ணாஷ்டகத்தில் வாய் இனிக்க, நெஞ்சம் குளிர விளிக்கும் அன்னபூரணி, காசிமாநகரின் தன்னிகரில்லா நாயகியாக, அப்புனிதத்தலத்தின் நடுநாயக தேவியாக ஞானச் செங்கோல் ஏந்தி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
இந்த அன்னையைத்தான் ஆதிசங்கரர் 'இடைவிடாது அன்னமளித்துக்கொண்டு இருப்பவள், மோட்சம் அளிப்பவள், எப்போதும் நமக்கு நன்மையைத் தருபவள், புவி மாந்தருக்கெல்லாம் தலைவியாய்த் திகழ்பவள், வெற்றியை அளிப்பவள், கருணைக் கடலாகத் திகழ்பவள்’ என்றெல்லாம் பலவாறாகத் துதித்துப் பரவசமெய்தியிருக்கிறார்.
நாங்கள் அன்னபூர்ணி தேவியின் சன்னதி செல்லும் பொழுது பையில் அரிசியும் எடுத்து சென்றிருந்தோம். அங்கு பொதுவாக தரிசனம் செய்பவர்களுக்கு கையில் சிறிது அரிசி கொடுத்து ஆசிர்வாதம் செய்வார்கள்.
சன்னதியில் உள்ள பாண்டாவிடம் கொடுத்து பார்க்கலாம் அவர்கள் வாங்கினால் கொடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணத்தில் கையில் அரிசியையும் எடுத்துக் கொண்டே சென்றிருந்தோம்.
அமைதியான வரிசையில் சென்றோம்... சன்னதிக்கு முன் வரை இலவச தரிசனம் பின் உள்ளே சென்று அம்பாளை அருகில் நின்று காண வேண்டும் என்றால் 100 ரூபாய் டோக்கன் அதையும் வாங்கிக்கொண்டு அம்பாளின் அருகே சென்று தரிசனம் செய்யும் பொழுது, நாங்கள் அரிசியை கொடுத்தோம், அதை அந்த பாண்டா அழகாக வாங்கி அங்கிருந்த அன்னபூரணி தாயின் திருவடியில் சேர்ப்பித்து விட்டார்.
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை எளிதாக தாயின் திருவடியில் எங்களின் காணிக்கை சென்றதில் பெரும் மகிழ்ச்சி.
இங்கு மிக விரைவான ஆனால் நேர்த்தியான, நிறைவான தரிசனம்.
இத்தனை அருகில் அன்னையை காண முடியும் என்று நாங்கள் எண்ணவில்லை அற்புத நிமிடங்கள். பிறகு இக்கோவிலின் பிற சன்னதிகளில் தரிசனம் பெற்று வெளியில் வந்து மீண்டும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கான வரிசையில் நின்றோம்.
காசி விஸ்வநாதர் கோயிலின் வரிசையில் நிற்கும் பொழுதே கைப்பேசியை லாக்கரில் வைத்துவிட்டதால் படங்கள் ஏதும் எடுக்க இயலவில்லை. இங்கு உள்ள அன்னப்பூரணி படங்கள் அனைத்தும் முக நூலில் காசி அன்னப்பூரணி கோவிலின் முக நூல் தளத்திலிருந்து கிடைத்தவை.
"அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ".
அன்னம் நிறைந்தவளே, என்றும் பூரணமாக இருப்பவளே,
சங்கரனின் பிராண நாயகியே, அன்னை பார்வதியே,
எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிக்ஷை இட்டு அருள்வாய்.
அனுபிரேம் 🌼🌼🌼
படங்களில் பல நீங்கள் எடுத்ததா இல்லை இணையம்/வாட்சப்பா? நன்றாக வந்திருக்கின்றன. நாங்கள் சென்றபோது கூட்டம். 100 ரூபாய் கொடுத்தால் அன்னபூரணி அருகில் செல்லமுடியும்.
ReplyDeleteநெல்லை அவங்க சொல்லிருக்காங்களே 100ரூ டோக்கன்னு...கடைசில பாருங்க அவங்க அனுபவங்கள் எழுதியிருக்காங்களே
Deleteகீதா
காசி அன்னப்பூரணி அன்னையின் படங்கள் எல்லாம் காசி அன்னபூரணி முகநூல் தளத்திலிருந்து கிடைத்தது சார் அதையும் மேலேயே குறிப்பிட்டுள்ளேன்.
Deleteநாங்களும் 100 ரூபாய் கொடுத்து அன்னையின் அருகில் சென்று தரிசனம் பெற்றோம்.
பட்ங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு அனு. கிட்டே சென்று பார்க்க 100 ரூ டோக்கன் இல்லையா...நோட்டட்.
ReplyDeleteகீதா
நன்றி கீதா அக்கா
Delete