09 June 2023

9.மகாபோதி கோவில், புத்த கயா

வாழ்க வளமுடன்... 





முந்தைய பதிவுகள்  


 9.மகாபோதி கோவில்,புத்த கயா.. 

மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில் ஆகும்.  கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது.














கி.மு 530 ஆம் ஆண்டளவில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த கௌதம புத்தர், இந்தியாவிலுள்ள கயா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள பல்கு ஆற்றங்கரைக்கு வந்தார். அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் தியானம் செய்வதற்காக அமர்ந்தார். புத்த சமய நூல்களின்படி மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர் சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்று பல பிரச்சினைகள் தொடர்பில் அவர் தேடிய விடைகளை உணர்ந்து கொண்டார். இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காகவே மகாபோதி கோயில் அமைக்கப்பட்டது.


புத்தர் ஞானம் பெற்றபின் ஏழு வாரங்கள் தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில்,

முதல் வாரம்:  போதி மரத்தின் அடியிலிருந்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இரண்டாம் வாரம்:  போதி மரத்திற்கு மேற்கில் அனிமேசலோசனா (Animisalocana) என்ற இடத்திலிருந்து பரப்புரை செய்தார். அந்த இடத்தில் ஒரு ஸ்தூபி நடப்பட்டுள்ளது.

மூன்றாம் வாரம்:  போதி மரத்தில் வடக்கே உள்ள ஒரு வெளிச்சுற்று பாதை வரையில் நடந்துகொண்டே பிரசங்கம் செய்துள்ளார். அந்தப் பாதைக்கு ரத்னசர்க்கிரமா (Ratnachakrama)என்று பெயர். புத்தர் நடந்த பாதையில் கற்களால் தாமரை மலர் போன்ற அமைப்புகள் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

நான்காம் வாரம்:  போதி மரத்தில் தென் கிழக்கே உள்ள ரத்னகார் (Ratnaghar) என்ற பகுதியில் ஞான உரையை நிகழ்த்தினார். இன்று அங்கே ஒரு சைத்திய மடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வாரம்:  அஜபால நிக்ரோத் (Ajapala Nigrodh) மரத்தின் அடியில் உரையாற்றினார். இது போதி மரத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.

ஆறாவது வாரம்:  போதி மரத்தின் தெற்கே அமைந்துள்ள தாமரை குளத்தின் கரைகளிலிருந்து புத்தர் பேசினார்.

ஏழாவது வாரம்:  தென் கிழக்கே அமைந்துள்ள ராஜயதன மரத்தினடியில் (Rajyatana Tree) உரை மேற்கொண்டார்.

தோற்றம்...

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டளவில், பேரரசர் அசோகன் புத்த கயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவிமடத்தையும், கோயில் ஒன்றையும் நிறுவ எண்ணினார். கோயில் கட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்க வைரஇருக்கை (Vajrasana) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அசோகரே மகாபோதி கோயிலைக் கட்டியவராகக் கருதப்படுகிறார். தற்போதைய கோயில் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டது. குப்தர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த இக்கோயில், முழுமையாகச் செங்கல்லால் கட்டப்பட்டு, இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

கட்டிடக்கலைப் பாணி

இக்கோயில் இந்தியச் செங்கல் கட்டிடங்களுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுவதுடன், பிற்காலக் கட்டிடக்கலை மரபுகளில் செல்வாக்குச் செலுத்திய ஒரு கட்டிடமாகவும் கருதப்படுகிறது. யுனெஸ்கோ வெளியீட்டின் படி, குப்தர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் முழுதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டதும், கம்பீரமானதுமான மிகவும் பழைய கட்டிடங்களில் ஒன்றாகும். 

மகாபோதி கோயிலின் உயர்ந்த கோபுர அமைப்பு 55 மீட்டர்கள் உயரம் கொண்டது. இது, இதே பாணியில் அமைந்த நான்கு சிறிய கோபுர அமைப்புக்களால் சூழப்பட்டுள்ளது.

மகாபோதி கோயில் அதன் நாற்புறமும் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புக்கள் உள்ளன. இத்தடுப்புக்கள் இரண்டு கட்டிடப் பொருள் பயன்பாடு, பாணி என்பவை தொடர்பில் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.

 மணற்கல்லாலான பழைய அமைப்பு கி.மு 150 ஆம் ஆண்டளவைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. மினுக்கப்படாத கருங்கற்களால் கட்டப்பட்ட அடுத்த வகை, கி.பி 300 – 600 வரையான குப்தர் காலத்தைச் சேர்ந்தது. இத் தடுப்பு அமைப்புக்களில், இந்துக் கடவுளரான இரு புறமும் யானைகள் பூசை செய்யும் கஜலக்குமி, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிந்திய அமைப்பு வகையில், தூபிகளின் உருவங்கள், கருடன், தாமரை மலர்கள் என்பவை செதுக்கப்பட்டுள்ளன.

குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில், செங்கற்களை அடுக்கி அதன்மேல் ஸ்டூக்கோ(Stucco) எனப்படும் சுண்ணாம்பு, மணல் கலந்த சாந்தை பூசி அமைக்கப்பட்டுள்ளது.

 படிக்கட்டு அடுக்குகளைக் கொண்ட பிரமிடு வடிவ கோபுர அமைப்பைக் கொண்டுள்ள இது இன்றைய பாகிஸ்தான் பகுதியில் உள்ள காந்தாரம் என்ற இடத்தில் துவங்கப்பட்ட ஒரு கட்டிட முறையாகும். 

அதனோடு கிரேக்க-ரோமானிய கட்டட கலை நுட்பங்களையும் உள்ளெடுத்து இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபி 'ஜாலியன்' என்ற முறையில் அமைந்துள்ளது. அரைக்கோள வடிவத்தின் மீது இந்த ஸ்தூபி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்கள், புத்த கயாவை புனிதத் தலமாகப் போற்றி வழிபடுகின்றனர். கோயிலின் மேற்குத் திசையில் அமைந்துள்ளது புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்.





மிக அமைதியான இடம். நாங்கள் சென்ற பொழுது சிறிது  கூட்டம் இருந்தாலும் நன்றாக எல்லா இடத்தையும் காண முடிந்தது. என்ன இங்கு கோவிலின் உள்ளே கைபேசிக்கு இடம் இல்லை. அதனால் வெளிப்புறம் எடுத்த படங்களை மட்டும் பகிர்ந்தேன். 

உள்ளே சென்று புத்தரை  கண்டோம் அமைதியாக அனைவரையும் கண்டு கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சிலர்  மிக உருக்கமாக கைபேசியில் படம் எடுத்து கொண்டிருந்தனர், அவர்கள் அங்கு ஏதோ டொனேஷன் கொடுத்தவர்கள் போல, மற்றவர்களுக்கு உள்ளயே அனுமதி இல்லா கைப்பேசி இவர்களுக்கு ...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


அடுத்து கோவிலை சுற்றி வரும் பொழுது பெரிய மரமும் அதன் அடியில் பல விளக்குகளும் என மனதிற்கு மிக அமைதி அளித்த இடம். பல புத்த பிட்சுக்கள் அங்கு அமர்ந்து தியானத்தில் இருந்தனர். நாங்களும் ரசித்து பார்த்து சிறிது நேரம் அமர்ந்து ரசித்து  வந்தோம்.

சுற்றிலும் புற்களை கொண்டு நல்ல பராமரிப்பில் இந்த இடம் உள்ளது. அடுத்து வெளிய வரும் வழியில் பல மணிகள் கட்டி இருந்தார்கள். நாங்கள் அனைத்தையும் மெதுவாக தட்டிக் கொண்டே வந்தது மிகவும் பிடித்து இருந்தது. 


வெங்கட் சார் தளத்தில் இந்த இடத்தின் அழகிய காட்சிகளை பகிர்ந்து உள்ளார். அங்கு சென்று இன்னும் ரசித்து பார்க்கலாம் .... . venkatnagaraj


அடுத்து எங்கு சென்றோம்.. அடுத்த பதிவில் தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼




5 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புத்த கயா பற்றிய விபரங்களும், அத்தனைப் படங்களும் அருமையாக உள்ளது. புத்தர் ஞானம் பெற்ற இடத்தை தரிசித்து கொண்டேன். அவர் ஒவ்வொரு வாரம் தாம் பெற்ற ஞான மார்க்கத்தை உபதேசித்த இடங்கள் பற்றிய விவரணத்திற்கும் நன்றி. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. என் கமெண்ட் என்னாச்சுன்னு தெரியலை. அந்த மெத்தை விழுந்து விழுந்து சேவித்து. பிறகு மெத்தையை இன்னும் தள்ளி இன்னும் ஒரு முறை சேவித்து... என்று கோவிலை வலம் வருவார்கள். இது தவிர தியானத்துக்கும் உபயோகிப்பார்கள். அந்த போதி மரம், அசோகரின் மகள் இலங்கையில் நட்ட மரத்தின் கிளையிலிருந்து உருவாக்கப்பட்டது. ஒரிஜினல் போதிமரம் போய்விட்டது.

    ReplyDelete
  3. அங்கு கர்பக்ரஹத்தில் செல்போன் வைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள், சில காவலர்கள், சிலருக்காக. அவங்கள்லாம் privileged நம்மை மாதிரி சாதாரணர்கள் அல்லர். என்ன பண்ணறது?

    ReplyDelete
  4. புத்தகயா பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டேன் அனு. படங்கள் காணொளிகள் எல்லாம் சூப்பர். சென்ற பதிவும் பார்த்துவிட்டேன். ஆமாம் வெங்கட்ஜி தளத்திலும் வாசித்த நினைவு இருக்கு

    கீதா

    ReplyDelete
  5. புத்த கயா குறித்த பதிவு நன்று. எனது பதிவையும் இங்கே குறிப்பிட்டு இருந்ததில் மகிழ்ச்சி. நன்றியும்.

    அலைபேசிக்கு அனுமதி இல்லை என்றாலும் கேமராவிற்கு அனுமதி உண்டு. சிலர் எடுத்து வரும் அலைபேசிகள் - Privileged ones..... :(

    ReplyDelete