22 June 2023

12. காசியில் துண்டி விநாயகர் கோவில் ...

  வாழ்க வளமுடன் 











முந்தைய பதிவில் காசி மடத்திற்கு வந்து சேர்ந்தோம் என கூறி இருந்தேன். அடுத்து ....

 அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள்  காசியில் தான் தங்கும் எண்ணம். அதனால் அடுத்த நாள் கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணியிருந்தோம்.

ஆயினும்  காலை 9 மணிக்கு ஒருமுறை அங்கு வரை நடந்து வரலாம் என எண்ணி கோவிலுக்கு அருகில் சென்றோம். அப்பொழுது அங்கு எங்கு திரும்பினாலும் ஒரே கூட்டமாக இருந்தது.

 சரி பரவாயில்லை இன்றே நாம் தரிசனம் செய்துவிடலாம் என நிமிடத்தில் முடிவு எடுத்து   அந்த வரிசையில் நாங்களும் நின்று விட்டோம். 

பிறகு தான் தெரிந்தது அன்று அங்கு தேவ்  தீபாவளி என்றும், அடுத்த நாள்   கார்த்திகை பௌர்ணமி  அன்று  இன்னும் இன்னும் கூட்டம் வரும் என்றும். 

 விஸ்வநாதனின் மீது நம்பிக்கை கொண்டு நாங்களும் வரிசையில்  நின்று விட்டோம் பத்து மணிக்கு ஆரம்பித்த வரிசை மெதுவாக நகர்ந்தது. ஆனாலும் எங்கும் தள்ளுமுள்ளு ஏதும் கிடையாது.  வரிசை நேராக, அமைதியாக  சென்றது. ஆனால் அங்கங்கு கோவில் பாண்டாகள்  என்று சிலர் நாங்கள் விரைவில் தரிசனம் செய்ய அழைத்து  போகிறோம், 1500 ரூபாய் தாருங்கள் என்று பேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அப்படி  செல்லலாம் என்று எங்களுக்கும் சில நேரம் எண்ணம் வந்தது. ஆனாலும் நமக்கு இப்பொழுது அவசர காரியம் ஏதுமில்லை, ஆகவே  பொறுமையாகவே பார்க்கலாம் என்று எங்கள் வரிசையில் நாங்கள் தொடர்ந்தோம்.

அங்கு முதலில்  நாங்கள் தரிசனம் செய்தது  துண்டி கணபதியை  வரிசையில் செல்லும் பொழுதே  அவரின் தரிசனம் கிடைக்கும்.



துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு

கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே

எந்த ஒரு வேலையும் தொடங்குமுன்னர் முழு முதர்க்கடௌவலான விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. 




துண்டி விநாயகர்  விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். 

மிக சிறிய சன்னதி. 

சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

 செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். 

துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். 

காசிக்கு செல்பவர்கள் துண்டி விநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

 இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டி விநாயகர் காட்சி தருகிறார். 

வேழமுகத்தானின் படைவீடுகளில் ஐந்தாவதாக இருப்பது காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி சந்நிதி.

காசிக்கு வருபவர்கள் இந்த கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரை விட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. ஞானத்தின் உருவான இவர் தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். 







இக்கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள். 


முதல் திருமுறை

068 திருக்கயிலாயம்

பாடல் எண் : 2


புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை

தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்

பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த

கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

 

பொழிப்புரை:

பெரிய களிற்றியானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமைமங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.


துண்டி கணபதி தரிசனம் பெற்று அடுத்து எங்கு சென்றோம் அடுத்த பதிவில் ...



தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼

4 comments:

  1. நீங்கள் படம் எடுக்கவில்லையா? நான் காசியில் பல இடங்களில் படங்கள் எடுத்தேன். விஸ்வநாதர் ஆலயத்தின் உள் மாத்திரம் மொபைல் அனுமதிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இல்ல சார், காசி விஸ்வநாதர் கோவில் தரிசன வரிசையில் ஆரம்பத்தில் நிற்கும் பொழுதே மொபைலை லாக்கரில் வைத்துவிட்டோம்.

      அதனால் இங்கு, அன்னப்பூரணி, விசாலாட்சி கோவில் என எங்கும் படம் எடுக்கவில்லை.

      Delete
  2. படங்களும் தகவல்களும் நன்று. காசியில் பண்டாக்களின் தொல்லை இப்போது சற்று குறைவு. முன்பு இன்னும் அதிகமாக இருந்தது. பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  3. படங்களும் தகவல்களும் அருமை.. எங்களுக்கும் ஒரு விண்ணப்பம் உண்டு..

    ஓம் நம சிவாய..

    ReplyDelete