(52) இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே !
ததி என்றால் தயிர் என்று பொருள். பாண்டம் என்றால் பானை.
தினமும் தலையில் பெரிய பானையில் தயிர் எடுத்துச் சென்று கோகுலத்தின் வீதிகளில் ’தயிர் வாங்கலையோ! கெட்டி தயிர் வாங்கலையோ!” என்று கூவி விற்பார். விற்று விட்டுக் காலி பானையுடன் வந்து தன் குடிசையில் உணவு அருந்திவிட்டு வாசலில் அந்தப் பெரிய பானையின் மீது தலை வைத்துச் சற்று தூங்குவார். அதனால் இவர் பெயரே 'ததிபாண்டன்’ என்று ஆகிவிட்டது.
இந்தச் சமயத்தில் கோகுலத்தில் கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்தான். வெண்ணெய்யைப் பார்த்தால் கண்ணனுக்குக் கொண்டாட்டம். ஆனால் யசோதைக்குத் திண்டாட்டம்.
ஒரு நாள் யசோதையின் மடியில் படுத்துக்கொண்டு இருந்தான் கண்ணன். அடுப்பில் பால் பொங்கிவிடப் போகிறதே என்று மெதுவாகக் கண்ணனைப் படுக்கையில் விட்டு விட்டு அடுப்படிக்குச் சென்றாள்.
யசோதை போனவுடன் கண்ணன் மெதுவாக எழுந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கும் வெண்ணெய், பால், தயிர், நெய் எதுவும் இல்லை. யசோதை எல்லாவற்றையும் கண்ணனுக்கு எட்டக் கூடாது என்று மேலே உறியில் வைத்திருந்தாள்.
கண்ணன் பக்கம் ஒரு உரல் இருந்தது.
அதை உருட்டினான். பிறகு கவிழ்த்தான், பிறகு அதன் மீது ஏறினான்.
அப்பவும் உறி எட்டவில்லை. ஒரு கல்லை எடுத்து அடித்தான்.
உறியில் இருந்த தயிர், வெண்ணெய் கீழே அருவிபோலக் கொட்டியது. தித்திக்கும் பாலை குடித்தான். வெண்ணெய்யைக் கொஞ்சம் சாப்பிட்டான். மீண்டும் பால், வெண்ணெய் என்று மாற்றி மாற்றிச் சாப்பிட்டான். அவனுடைய நண்பர்கள் அங்கே வர அவர்களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தான்.
சாப்பிட்ட பால், வெண்ணெய் ஜீரணம் ஆக வேண்டுமே என்று நெய் கொஞ்சம் சாப்பிடலாம் என்று ஒருவர் மீது ஒருவர் ஏறி நெய் குடத்தை எடுத்த தூக்கியபோது கையில் வெண்ணெய் பிசுக்கில் நெய்ப் பானை வழுக்கி அவன் முகத்தின் மீது கொட்டி பானை உடைந்தது.
சத்தம் கேட்ட யசோதை அடுப்படியிலிருந்து ஓடி வந்தாள். வீடே அல்லோலகல்லோலமாய் இருப்பதைப் பார்த்தாள். கண்ணனின் தோழர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். கண்ணன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான்.
யசோதை பக்கத்தில் இருந்த தாம்புக்கயிற்றை எடுத்தாள். கண்ணனை நோக்கி அடிக்க வந்தாள்.
கண்ணனைப் பிடித்தாள் ஆனால் கண்ணன் உடம்பு முழுக்க நெய்யும் வெண்ணெய்யும் பூசிக்கொண்டு இருந்தால் வழிக்கி கொண்டு நழுவினான்.
நழுவியவன் தெருவில் குடுகுடு என்று ஓட ஆரம்பித்தான்.
திரும்பிப் பார்த்தான். தூரத்தில் யசோதை கையில் தாம்புகயிறுருடன் தெரிந்தாள்.
சட்டென்று ததி பாண்டன் வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். பாதித் தூக்கத்தில் இருந்த ததி பாண்டன் அருகில் சென்று “தாதா தாதா” எழுப்பினான்.
ததி பாண்டனனிடம் கண்ணன் “அம்மா என்னை அடிக்க வருகிறாள். என்னை எங்காவது ஒளித்து வை!” என்றான். சுற்றி முற்றும் பார்த்தான் ததி பாண்டன்.
உடனே கண்ணனை எடுத்துப் பானைக்குள் போட்டான். உடல் முழுக்க வெண்ணெய்யும் தயிருமாக இருந்த கண்ணன் வழிக்கிகொண்டு உள்ளே சென்றான்.
பக்கத்தில் இருந்த மூடியை அதன் மீது கவிழ்த்தார்.
அங்கே வந்த யசோதை “என் பையன் கண்ணன் இங்கே வந்தானா ? இங்கே இந்த வீட்டுக்குள் வந்த மாதிரி இருந்தது” என்றாள்
“இங்குக் கண்ணன் இல்லையே! நான் அவனைப் பார்க்கவில்லையே” என்று பொய் சொன்னான் ததிபாண்டன்.
யசோதை போய்விடுகிறாள்.
அவள் போன பின்பும் அவன் தாழியின் மேலிருந்து இறங்கவில்லை. உள்ளே கிருஷ்ணனுக்கு மூச்சு முட்டுகிறது. தனது புல்லாங்குழலால் தட் தட் என்ற பானை மூடியில் தட்டி மூடியை திறக்க சொல்லுகிறான்.
"மூடியைத் திறந்து உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை!" என்கிறான் ததிபாண்டன்.
"என்ன நிபந்தனை?"
"நீ எனக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும்"
"இது ஏதடா வம்பாக போயிற்று" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சிரிக்கிறார்.
"நான் ஏதோ அறியாத பையன். ஆடு மாடு மேய்ப்பேன். குழலூதுவேன். அன்னையரிடமும் கோபியரிடமும் கொஞ்சம் கலாட்டா பண்ணுவேன். வேறு எனக்கு என்ன தெரியும்?" என்கிறான்.
"பூதனையைக் கொன்றவன் நீ.
சடகாசுரனைக் கொன்றவன் நீ.
கேசியை சம்ஹாரம் செய்தவன் நீ.
காளிங்க நர்த்தனம் ஆடி கோவர்தனத்தைக் குடையாக பிடித்தவன்.
உன்னை நான் அறிவேன் கண்ணா! மோக்ஷம் கொடுப்பேன் என்று உறுதியளித்தால்தான் வெளியில் விடுவேன்" என்கிறான் ததிபாண்டன் உறுதியாக.
கண்ணனை அறிதல் என்பது மிக முக்கியமல்லவா?
சரி என ஒப்புக்கொண்டான் கண்ணன்.
இருப்பினும், ததிபாண்டன் திருப்தி அடையவிலை.
"அப்படியே என் பானைக்கும் மோக்ஷம் வேண்டும்" என்கிறான்.
அதற்கிணங்கி கிருஷ்ணன் இருவருக்கும் மோக்ஷம் அளித்தான். அன்று ஆனைக்கு மோட்சம் அளித்தான். இன்று பானைக்கு மோட்சம் அளித்தான்.
நாராயணன் கிருபை யார்மீது விழும் என்றே சொல்லமுடியாது.
முந்தைய வார்த்தையில் 'இங்கும் உள்ளான்' என்ற பிரஹலாதனுக்கும் அதிர்ஷ்டம் கிட்டியது, இன்று 'இங்கு இல்லை' என்ற ததிபாண்டனுக்கும் மோக்ஷம் கிட்டியிருக்கிறது.
"ததிபாண்டனைப் போல கண்ணனை தாழிக்குள் மறைத்து வைத்து அவனுடைய நன்மைக்காக பொய்யுரைத்தேனே? இல்லையே. எனவே நான் இந்தத் திருக்கோளூரில் இருக்க தகுதியற்றவள் என்பதால் கிளம்புகிறேன்" என்று அந்தப்பெண் வெளியேறுகிறாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
1- 10 பொருமா நீள் படை
ஈஸ்வரன் செய்யும் உபகாரம்
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே. 10.3
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும் போதும்* விடாது தொடர் கண்டாய். 10.4
53. திருக்கார்வானம்
ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ கள்வன் ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment