28 January 2023

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே.

 (32) கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே.





வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மொத்தம் இரண்டு திருவடிகள். பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன் எனப்படும் கருடாழ்வார். இரண்டாவது திருவடி இராமாயணமான இராமகதையில் வரும் ஹனுமன்.


முன்பு ஒரு காலத்தில் காசியப முனிவர் இருந்தார். அவருக்குக் கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள். வினதைக்கு அருணன் கருடன் என்று இரண்டு மகன்கள் பிறந்தார்கள். கத்ருவுக்கு ஆயிரம் பாம்புகள் மகன்களாகப் பிறந்தனர்.


வினதைக்கும் கத்ருவுக்கும் இடையே பொறாமை. அதனால் அவர்களுக்குள் எப்போதும் சண்டை.. ஒரு நாள் குதிரையில் வந்து இந்திரன் சற்று தூரத்தில் நின்றான். வினதை “ஆஹா ! மிக அழகிய வெள்ளைக் குதிரை” என்றாள். பக்கத்திலிருந்த கத்ரு “வெள்ளைக் குதிரை ஆனால் வால் மட்டும் கருப்பு” என்றாள். 

வினதை “குதிரை முழுவதும் வெண்மை தான், சரியாகப் பார்” என்றாள். 

“நாளைக்கு நாம் அருகில் சென்று பார்க்கலாம் அப்போது யார் சொல்லுவது உண்மை என்று புரியும்” என்றாள் கத்ரு. வினதை விடவில்லை”எனப் பந்தயம்?” என்றாள். 

”நீ ஜெயித்தால் நான் உனக்கு அடிமை, இல்லை நீ எனக்கு அடிமை” என்றாள் கத்ரு.

அன்று இரவு கத்ருவின் மகன்களான கார்க்கோடகனும் மற்ற கறுத்த பாம்புகளும் குதிரையின் வாலை சுற்றிக்கொண்டன. அதனால் மறுநாள் குதிரையின் வால் கறுத்த நிறமாக இருந்தது. வினதை கத்ருவிற்கு அடிமையானாள். 

கத்ருவின் குழந்தைகளான பாம்புகள் ”எங்களுக்கு அமுதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், நீ அடிமையாக இருக்கத் தேவையில்லை” என்று நிபந்தனை விதித்தார்கள். 

வினதையின் மகனான கருடன் தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும் வழியில் திருமாலைக் கண்டார். ”என்ன கருடா இந்தப் பக்கம் ?” என்று பெருமாள் கேட்க.

 கருடன் தன் கதையைச் சொல்லியது.

கருடனின் கதையைக் கேட்ட திருமால், ”கருடா உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்றார். அதற்குக் கருடன் “நான் எப்போதும் உங்களுக்கு மேலே இருக்க வேண்டும்” என்றது. திருமாலும் அந்த வரத்தைக் கொடுத்தார். அதனால் தான் கோயில்களில் கருடன் கருடக் கொடியாக எப்போதும் உயரத்தில் இருக்கிறார்.


கருடன் பெருமாளிடம் வரம் வாங்கிக்கொண்டு “பெருமாளே ! நானும் ஒரு வரன் தருகிறேன் கேளுங்கள்” என்றார்.

பெருமாள் “நீ எனக்குக் கீழே இருக்க வேண்டும் என் வாகனமாக !” என்றார்.

கருடனும் சந்தோஷமாக “சரி” என்றார். அதனால் தான் கருடக் கொடியாகப் பெருமாள் மேல் பறந்துகொண்டும், கருட வாகனமாகப் பெருமாளைத் தாங்கிக்கொண்டும் இருக்கிறார் கருடாழ்வான்!”

பெருமாள் யானையைக் காக்கக் கருடனில் வந்தார்; பெரியாழ்வாருக்குக் காட்சி தந்த போதும் கருடனின் வந்தார். நரகாசுரனை வதம் செய்யக் கண்ணன் கருடனில் சென்றார். இப்படி எப்போதும் கருடன் தான் பெருமாளின் வாகனம். அதனால் தான் கோயில்களில் கருட வாகனம் விசேஷம்.

 “எல்லா காலங்களிலும் பெருமாளுக்கு வாகனமாக இருப்பதால் கருடருக்கு  பெரிய திருவடி என்று பெயர். ஆனால் ராமாவதாரத்தில் மட்டும் அனுமார் தான் ராமரை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார் அதனால் அவரும் திருவடி தான்” 

“அனுமார் சுக்ரீவன் மலை உச்சியில் ஒளிந்துகொண்டு இருக்கிறான் என் தோளில் ஏறிக்கொள்ளுங்கள் என்று ராம, லக்ஷ்மணர்களை தோளிலேற்றிக்கொண்டு குதித்தெழுந்து, நொடிப்பொழுதில் மலை உச்சியில் சுக்ரீவன் இருக்கும் இடத்துக்குச் சென்றார். 

அதற்குப் பிறகு ராமரிடம் கணையாழி பெற்றுக்கொண்டு மலையில் ஏறிச் சமுத்திரத்தைத் தாண்டினார், சீதையைக் கண்டார் நல்ல செய்தி சொல்லிவிட்டு சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்டு அதை ராமரிடம் கொடுத்தார். 

அணை கட்டிய பிறகு அதில் ராமர் நடக்கவில்லை. 

அனுமார் ராம லக்ஷ்மனர்களை தன் தோள்களில் ஏற்றிப் பாலத்தில் நடந்தார். 

போரில் மூலிகை மலையைக் கொண்டு வந்தார். யுத்தம் செய்யும்போது ராம லக்ஷ்மணர்களை தோளில் தூக்கிக்கொண்டார். 

யுத்தம் முடிந்த பின் சீதையைப் பார்த்து ராமர் வென்ற விஷயத்தைச் சொன்னார். 

பரதனிடம் சென்று ராமர் வரும் விஷயத்தைச் சொல்லிப் பரதனைக் காப்பாற்றினார்.


கருடன் தனது தோள்களில் எம்பெருமானை சுமந்து கொண்டு திரிந்ததைப் போல, ஹனுமன் பெரும் நேசத்துடன் பகவானை சுமந்தது போல, இந்தத் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளுக்கு தான் எந்தவித கைங்கரியமும் செய்யவில்லை. எனவே தான் அந்த திவ்ய தேசத்தை விட்டுச் செல்வதாகக் கூறி அந்தப் பெண்பிள்ளை கிளம்பினாளாம்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1 - 6 பரிவது இல் 

ஆராதனைக்கு எளியவன் 


ஈடும் எடுப்பும் இல் ஈசன்* 

மாடு விடாது என் மனனே*

பாடும் என் நா அவன் பாடல்* 

 ஆடும் என் அங்கம் அணங்கே. 3

2956


அணங்கு என ஆடும் என் அங்கம்* 

 வணங்கி வழிபடும் ஈசன்*

பிணங்கி அமரர் பிதற்றும்* 

 குணங்கெழு கொள்கையினானே* 4

2957






33. திருவைகுந்தவிண்ணகரம்

ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ வைகுந்தநாதாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

2 comments:

  1. திருவடிகளே போற்றி போற்றி.

    ReplyDelete
  2. திருவடிகள் விவரம் மிக அருமை. படங்கள் அனைத்தும் அருமை.
    திருவடிகள் போற்றி போற்றி!

    ReplyDelete