பத்தொன்பதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் மாறி மாறி எழுப்புகிறாள்.
குத்து விளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!வாய்திறவாய்,
மைத் தடங்கண்ணினாய்!நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்
நிலைவிளக்கு எரிய, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலிலே மெத்தென்ற பஞ்சினாலான படுக்கையின் மீது ஏறி,
கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்கள் மேலே தன் அகன்ற திருமார்பை வைத்துக் கொண்டு சயனித்திருப்பவனே!
வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு. மையால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற கண்களை உடையவளே!
நீ உன்னுடைய கேள்வனான எம்பெருமானை ஒரு கணமும் துயிலெழ அனுமதிக்க மாட்டேன் என்கிறாய்.
நீ அவனைவிட்டு சிறிது நேரமும் பிரிந்திருக்கமாட்டாயன்றோ? இப்படி அவனை எங்களிடத்தில் வரவிடாமல் தடுப்பது உன் ஸ்வரூபத்துக்கும் சேராது ஸ்வபாவத்துக்கும் சேராது.
மார்கழி மாதம் பத்தொன்பதாம் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ,
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர், கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில் ....
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
No comments:
Post a Comment