25 January 2023

திருநாங்கூர் கருட சேவை ...

நேற்றைய பதிவில்  தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை கண்டோம் ...

இன்று இன்னும் சில தகவல்களுடன்.... திருநாங்கூர் கருட சேவை ...





 திருநாங்கூர் திவ்ய தேசங்கள்:

1. திருமணிமாடக் கோயில் - நாராயணப்பெருமாள்  -  பத்ரிகாச்ரமம்.

2. திருஅரிமேய விண்ணகரம் -  குடமாடு கூத்தர் - கோவர்த்தன கிரி - வியாதிகளை நீக்கும்/நீண்ட ஆயுள் தரும் பெருமாள்.

3. திருசெம்பொன் செய்கோயில்-  அழகியமணவாளன்-  உறையூர்

4. திருத்தெற்றியம்பலம் - ரங்கநாதர் -  ஸ்ரீரங்கம் -  அரசாளும் வல்லமை/அரசு பதவிகளை அருள்பவர்.

5.  திருவெள்ளக்குளம் -  அண்ணன்பெருமாள் -  திருமலை - ஆயுள்விருத்தி அருள்பவர். சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி ஆகியவற்றை  இந்தப் பெருமாள் கோவிலில் செய்து கொள்கிறார்கள்.

6. திருவண்புருடோத்தமம் - வண்புருக்ஷோத்தமப் பெருமாள் - அயோத்தி ராமர் - பெண்களுக்குத் திருமண/சந்தான பாக்யம் அருளும் பெருமாள்; தீராத வழக்குகளும் தீர்த்து வைக்கும் பெருமாள்.

7. திருமணிக்கூடம் - வரதராஜர் -  காஞ்சிபுரம் -  தீராதவியாதி தீர்க்கும் நிவாரணர் , சந்திர தோஷம் தீர்ப்பவர்.

8. திருவைகுந்த விண்ணகரம் -  வைகுந்தநாதர் -  பரமபதம் -  பெண்களுக்கு விவாகப் பிராப்தி அளிப்பவர். வைகுந்தப் பிராப்தி அருளும் பெருமாள்.

9.  திருத்தேவனார்தொகை -  தெய்வநாயகன் -  திருவிடந்தை -  விவாகப்பிராப்தி நல்கும் பெருமாள்.

10. திருப்பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி -  குருஷேத்ரம்.

11. திருக்காவளாம்பாடி -  கண்ணன் -  துவாரகை  -  விவாகப்பிராப்தி/சந்தானப்பிராப்தி/நோய்நிவாரணம் அருளும் பெருமாள்.

திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர், அவர் நித்யமும் ஆயிரம் பேருக்குத் ததீயாராத னை செய்த மங்கைமடம், கல்யாணரங்கநாதப்பெருமாளிடம் வேடுபறி செய்து, வாள்வலியால் மந்திரம் கொண்ட திருமணங்கொல்லை-திருநகரி, ஞானசம்பந்தரை வாதத்தால் வென்று வேல் கொண்ட காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) முதலான திருத்தலங்களும் இந்தத் திருநாங்கூரைச் சுற்றி உள்ளன.


திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி திருமஞ்சனம் --

திருமஞ்சன வைபவப் புராணம்--

திருமங்கை ஆழ்வார் கார்த்திகையில் கார்த்திகை நாள் அன்று, நம்பெருமாள் திருமுன்பே பரமபக்தி தலையெடுத்து, கேட்கவே மிகவும் இனிமையான, "திருநெடுந்தாண்டகம்"என்னும் பிரபந்தத்தை பாடியருளி, தயங்கி நின்றார்.

பெருமாளும் இதை அறிந்து "என்ன ஆழ்வீர் தயங்கி நிற்கீறீர், என்ன வேண்டுமோ கேளும் என்று கூற, 

ஆழ்வாரும் பெருமாளிடம் "தேவரீர், நம்மாழ்வார் பாடியருளிய திருவாய்மொழி-- வேதத்துக்குச் சமம் என்று அங்கீகரித்து, மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் வேதகோஷம் கேட்கும்பொழுது, திருவாய் மொழியையும் கேட்டருள வேண்டும்" என்று பிரார்த்திக்க, பெருமாளும் சரி அப்படியே ஆகட்டும் என்று இசைந்தார்.


உடனே,நம்பெருமாள்,  நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் வந்து தம்முடைய திருஅத்யயன உற்சவத்தை நடத்தி வைக்குமாறு, ஒரு ஸ்ரீமுகம் (ஓலைச் சுவடிக் கடிதம்) அனுப்பி வைத்தார். 

திருமங்கை ஆழ்வாரும்,பெருமாளின், ஸ்ரீபாதம் தாங்கிகளும்,ஆழ்வார் திருநகரி சென்று ஆழ்வாரிடம் பெருமாளின் ஸ்ரீமுகத்தைச் சமர்ப்பித்து, ஆழ்வாரை எழச்செய்து, அழைத்து வந்தார்கள்.

 நம்மாழ்வார் எழுந்தருளி பத்து நாள் அத்யயன உற்சவமும் முடிந்து, ஆழ்வாரை மறுபடியும் ஆழ்வார் திருநகரி வரை எழக் கொண்டு விட்டு,அங்கிருந்து ஸ்ரீபாதம் தாங்குவோரும் திருமங்கை ஆழ்வாரும் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த நாள் "தை அமாவாசை".


அன்று நம்பெருமாள், திருமஞ்சனக் காவேரியில், 

(அம்மாமண்டபம் செல்லும் வழியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அருகில்) மஞ்சள்குளி உற்சவம் கண்டருளினார். இன்று வரை, தை அமாவாசையன்று நம்பெருமாள் கண்டருளும் மஞ்சள் குளி விழா பிரசித்தம்.

அத்யயன உற்சவத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த, திருமங்கை ஆழ்வாருக்கும் நம்பெருமாள் மஞ்சள்குளி திருமஞ்சனம் செய்ய நியமித்தார். ஆழ்வாரிடமும் "நீர் உம்மூரிலும், இந்த உற்சவத்தை உற்றார் உறவினரோடு சந்தோஷமாக கொண்டாடிக் கொள்ளும் " என்று பகுமானம் கொடுத்தருளினார். 

நம்பெருமாளின் ஆணைப்படியே ஆழ்வாரும் தாம் இருந்த காலம் வரை, இந்த உற்சவத்தை ஸ்ரீரங்கம் காவேரிக் கரையில் கொண்டாடி மகிழ்ந்தார். அவர் காலத்துக்குப் பின்,அவர் அர்ச்சாவதரமாக எழுந்தருளியிருக்கும் திருநகரி திவ்யதேசத்திற்கு அருகில், நாங்கூர் தெற்கு எல்லையில் பெருகும் காவேரியின், பிரிவான மணிகர்ணிகையில் இவ்வுற்சவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.











ஆழ்வார் திருநகரி ஆஸ்தானம் எழுந்தருள்தல் !

 எம்பெருமான்கள் மங்களாசாசனம், கருட சேவை வைபவங்கள் இனிதே நடந்து முடிந்த பின், திருமங்கை ஆழ்வார் அடுத்த நாள்  காலை மீண்டும் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் திருப்பாவை சாற்றுமறை முடிந்து திருகரிக்குப் புறப்பட்டார்.

செல்லும் வழியில், திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள், (ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரைக் கண்டு,கைத்தலம் பற்றிய திவ்ய தேசம்) திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்,திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் ஆகியோரை அவர்களது திவ்ய தேசங்களில்,மங்களாசாசனம் செய்துவிட்டு, இரவு தம் ஆஸ்தானமான திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலைச் சென்றடைந்தார்.

ஆழ்வார் தனது ஆருயிரும், சிந்தை தன்னில் நீங்காதிருக்கும் திருவுக்கும் திருவாகிய சிந்தனைக்கு இனியானான, வேதராஜன் ஶ்ரீவயலாலிமணவாளனை  கடந்த மூன்று தினங்களாய் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட தாபத்தை தீர்த்துக் கொள்ளும்படியாய் பசுவைத்தேடி ஓடிவரும் கன்றைப் போல் அதிவேகமாய்  --ஓட்டமும் நடையுமாய் -திருநகரிக்கு எழுந்தருளினார்.


ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள், கோயில் திருமுற்றம் வரை தெய்வப் புள்ளேறி வந்து, தம்மைக் கொள்ளை கொண்ட கள்வன்,தாம் கள்வனாய் --"கள்வன் கொல்? யானறியேன், கரியான் ஒரு காளை வந்து"--கொள்ளை கொண்ட பரகாலனை வரவேற்று அழைத்துச் சென்றார்.

திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளும், ஆழ்வாருக்கு கருடசேவை தந்து அருளினார். 

இந்த இரண்டு கருட சேவையும் சேர்த்தால் 13 கருடசேவை. 

திருநகரிக்கு மீண்டும் எழுந்தருளிய தங்கள் ஆழ்வாரை, அவ்வூர் மக்கள் கொண்டாடி வாணவேடிக்கை நடத்தி,மங்கள வாத்தியங்கள் முழக்கி வரவேற்றார்கள். 

மூன்று நாள் திருநாங்கூர் கருட சேவை உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.






இன்னும் சில திருநாங்கூர் கருட சேவை காட்சிகள் ... இவை இந்த வருடம் தரிசனத்தில்  அப்பா எடுத்த படங்கள் ....  























பெரிய திருமொழி - மூன்றாம் பத்து 
ஐந்தாம் திருமொழி – வந்து உனது அடியேன் 


1188

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன் பின், வணங்கும் என்* 
சிந்தனைக்கு இனியாய்!*  திருவே! என் ஆர் உயிரே* 
அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  


1189

நீலத் தட வரை*  மா மணி நிகழக் கிடந்தது போல்*
அரவு அணை வேலைத் தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடமாட*  மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!


1190

நென்னல் போய், வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 


1191   
மின்னில்  மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்து வந்து*
நின் மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!


1192  
நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுது ஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 



திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக!!


அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

2 comments:

  1. சிறப்பான செய்திகளுடன் பக்தி மணம் கமழும் பதிவு..

    ஓம் நமோ நாராயணாய..

    ReplyDelete
  2. தை அமாவாசை அன்று திருநாங்கூர் கருட சேவை பார்த்து வந்து பதிவு போட்டது நினைவுகளில்.

    அருமையான தரிசனம். அப்பா எடுத்த படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete