10 January 2023

26. திருப்பாவை - மாலே ! மணிவண்ணா!

 இருபத்தாறாம் பாசுரம் -  இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். 

முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். 

நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.





மாலே ! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

     மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

     பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

     சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே, கொடியே, விதானமே

     ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய்


அடியார்களிடத்தில் அன்புடையவனே! 

நீல ரத்னம் போன்ற வடிவையுடையவனே! 

ப்ரளய காலத்தில் ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்தவனே! 

இந்த மார்கழி நீராட்டத்தின் அங்கங்களாக முன்னோர்கள் செய்யும் செயல்களுக்கு வேண்டும் உபகரணங்கள் என்னவென்று கேட்டாயாகில், நாங்கள் அவற்றைச் சொல்லுகிறோம்.

 உலகத்தை எல்லாம் நடுங்கும்படி முழங்கக்கூடிய பால் போன்ற வெண்ணிறத்தில் உள்ள உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம் போன்ற சங்கங்களையும், 

மிகவும் இடமுடையனவாய், பெரியதான பறை வாத்தியங்களையும், 

திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், அழகிய விளக்குகளையும், த்வஜங்களையும், மேற்கட்டிகளையும் எங்களுக்கு அளித்தருள வேண்டும்.


மார்கழி மாதம்   இருபத்தி ஆறாம்  நாள் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ,

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர், உற்சவர் மணிவண்ணன் (ஆலினிலையாய்) சிறப்பு அலங்காரத்தில் .... 







ஸ்ரீவில்லிபுத்தூரில்  இராப்பத்து பத்து நாட்களும்  நடுநாயகியாக ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் வலதுபுறம் ஸ்தலாதிபதி வடபெரும்கோவிலுடையாணும், இடது புறம் ஸ்ரீ கோதாபதி ஸ்ரீ ரங்க மன்னனும் வீற்றிருக்கும் அழகிய காட்சிகள்...


இராப்பத்து முதல் திருநாள்


இராப்பத்து 2-வது திருநாள்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment