27 January 2023

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

 பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக  நடைபெற்றது. அக்காட்சிகளின்  தொகுப்பு இன்று ...



முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். இங்கு 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை வெகு விமர்சையாக குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த 23ஆம் தேதி யாக சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. 90 யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜைகள் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றன.

நேற்று காலை அருள்மிகு தண்டாயுதபாணி உபக் கோயில்களான இடும்பன் கோயில், பாத விநாயகர், கிரிவல பாதையில் உள்ள ஐந்து மயில்கள் உட்பட 83 கோவில்களுக்கு நேற்று குடமுழுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மலைக்கோயில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கங்கை, காவிரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கடந்த நான்கு நாட்களாக யாக சாலைகளில் வைக்கப்பட்டிருந்தன.
























 108 சிவாச்சாரிகள், 108 ஓதுவார்கள் சேர்ந்து பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தன் அலங்காரம் என முருக கடவுளை தமிழில் பூஜை செய்து புனித நீரை கோபுரங்களிலும், தங்க விமானத்திலும் ஊற்றினர். பின்னர் பக்தர்கள் மீது ஊற்றப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் துவப்பட்டடன. பக்தர்கள் அரோகரா சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.






திருப்புகழ் 104 அகல்வினை (பழநி)

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
     மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார

அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
     வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன்

பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
     பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின்

பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
     ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே

புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
     பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப்

பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
     புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென்

றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
     யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........




அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவு இலி ...  பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு
சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு
இல்லாதவனும்,

வித்தாரத் தனம் அவிகார அகில் கமழ் கத்தூரித் தனி அணை
மிசை கைக் காசுக்கு அளவு ... பரந்த மார்பை உடைய, அழகிய
அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம்
கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி

அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் ... அன்பு
காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய
(புழுப்போன்ற) நான்.

பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய ...
பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர்
அடையும்

பரம மயச் சோதிச் சிவ மயமா(ய்) நின் பழநி தனில் போய் ...
பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது
பழனித் தலத்துக்குப் போய்,

உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி குரவு பயில்
நல்தாள் பற்றுவது ஒரு நாளே ... பிறவி என்கின்ற வினை நீங்க,
தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள
நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா?

புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ்
பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற ... சீகாழி என்னும்
தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக்
கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும்
திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை
வென்று, அவர்கள் கழுவில் ஏறவும்,

பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே ... வாதம் செய்து வெற்றி
பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை
உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில்
அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த
வேந்தனே,

இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே
சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் ...
மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே
சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட
திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே,

வென்று இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க
ஆரத்தினை ... வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள்,
இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை

எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. ... (ஞான சம்பந்தராகத்
தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே.






ஓம் முருகா சரணம் 
ஓம் சண்முகா சரணம்
 ஓம் கந்தா கடம்பா 
கதிர் வேலா போற்றி 
ஓம் செந்தில் வேலா போற்றி 
ஓம் முத்துக்குமரா போற்றி
 ஓம் மயில் வாகனத்தில் வருபவன் போற்றி 

அன்புடன் 
அனுபிரேம் 💞💞💞


1 comment:

  1. பழனி முருகன் கும்பாபிஷேகம் அரிய காட்சிகள் கண்டோம். அனைவரின் நலனுக்கும் அவனருளை வேண்டுகிறோம்.

    ReplyDelete