14 January 2023

30. திருப்பாவை - வங்கக் கடல் கடைந்த மாதவனைக்

 முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். 

அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். 




அதாவது – ஆண்டாளின் கருணையினால் – கண்ணன் வ்ருந்தாவனத்தில் இருந்த காலத்தில் அவனிடம் பேரன்பு பூண்டு அங்கிருந்த கோபிகைகளுக்கும், அதே பாவத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்ட ஆண்டாளுக்கும், வேறு யவரேனும் இப்பாசுரங்களை கற்று, பாடுபவர்களுக்கும் ஒரே பலன் கிடைக்கும்.

 பட்டர் “வைக்கோலால் செய்யப்பட்ட தோல் கன்றைக் கண்டும் ஒரு தாய்ப் பசு பால் கொடுக்குமது போலே, யவரேனும் எம்பெருமானுக்கு பிரியமானவளால் பாடப்பட்ட இப்பாசுரங்களைப் பாடினால், அவருக்கும் அப்படி எம்பெருமானின் அன்பைப் பெற்றவர்கள் பெறும் பலன் கிடைக்கும்” என்று அருளிச்செய்வார். 

ஆண்டாள் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த சரித்ரத்தைச் சொல்லி முடிக்கிறாள். 

ஏனெனில், கோபிகைகள் எம்பெருமானை அடைய விரும்பினார்கள். எம்பெருமானை அடைய பிராட்டியின் புருஷகாரம் தேவை. எம்பெருமான் பிராட்டியை வெளிக்கொணர்ந்து மணம் புரியவே கடலைக் கடைந்தான். ஆகையால் ஆண்டாளும் இச்சரித்ரத்தைப் பாடி ப்ரபந்தத்தை முடிக்கிறாள். ஆண்டாள் ஆசார்ய அபிமான நிஷ்டையில் இருப்பவள் ஆகையாலே, தன்னைப் பட்டர்பிரான் கோதை என்று காட்டி, ப்ரபந்தத்தை முடிக்கிறாள்.












வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

     திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

     பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

     இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


கப்பல்களை உடைய திருப்பாற்கடலைக் கடைந்த ச்ரிய:பதியான கேசவனை, சந்த்ரனைப் போன்ற அழகிய முகத்தையும் சிறந்த ஆபரணங்களையுமுடைய இடைச்சிகள் சென்று வணங்கி, 

அந்தத் திருவாய்ப்பாடியிலே தங்கள் பலனைப் பெற்ற சரித்ரத்தை, 

அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த, 

புதியதான தாமரை மலர்களாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகாளான ஆண்டாள் அருளிச்செய்த, 

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய முப்பது பாசுரங்களால் ஆன தமிழ்ப் பாமாலையைத் தப்பாமல் இவ்வுலகில் இந்த முறையில் சொல்லக்கூடியவர்கள், 

பெரிய மலை போன்ற திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையுடைய திருமுகத்தை உடையவனும், செல்வத்தை உடையவனுமான திருமகள் கேள்வனாலே எல்லா இடத்திலும் அருளைப் பெற்று இன்பத்தை அடைவார்கள்.


ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவம் இரவு புறப்பாடு...





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment