இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி !
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல் போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி !
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி !
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி !
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்
போற்றி என்பது பல்லாண்டு வாழ்க என்று சொல்வதாக, மங்களாசாஸனத்தைக் குறிக்கும்.
முற்காலத்தில் தேவர்களுக்காக இந்த உலகங்களை அளந்தருளியவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி.
ராவணின் இருப்பிடமான அழகிய இலங்கையைச் சென்றடைந்து அதை அழித்தவனே! உன்னுடைய பலம் போற்றி.
வண்டிச் சக்கரத்தில் இருந்த சகடாஸுரன் அழியும்படி உதைத்தவனே! உன்னுடைய புகழ் போற்றி.
கன்றின் வடிவில் வந்த அஸுரனை எறிதடியாகக் கொண்டு எறிந்து, விளாம்பழ வடிவில் இருந்த அஸுரனை வீழ்த்தியவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி.
கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்தவனே! உன்னுடைய கல்யாண குணங்கள் போற்றி.
எதிரிகளை ஜயித்து அந்தப் பகைவர்களை அழிக்கும் உன் கையில் இருக்கும் வேல் போற்றி.
இப்படிப் பலமுறை மங்களாசாஸனம் செய்து கொண்டு, உன்னுடைய வீரத்தையே புகழ்ந்து, கைங்கர்யத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இங்கே வந்துள்ளோம். நீ க்ருபை பண்ண வேண்டும்.
மார்கழி மாதம் இருபத்தி நான்காம் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ,
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் ....
ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி மாதம் பகல் பத்து 7-வது திருநாள் |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
No comments:
Post a Comment