பதினெட்டாம் பாசுரம் - எப்படி எழுப்பியும் எம்பெருமான் எழுந்திருக்காமல் இருக்க, நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எழுப்பினால், கண்ணன் எம்பெருமானை எழுப்பலாம் என்றெண்ணி அவ்வாறே செய்கிறாள்.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்
மத்த கஜத்தைப்போலே பலம் உடையவராய், போரில் புறமுதுகிட்டு ஓடவேண்டாதபடியான தோள்வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபருடைய மருமகளே!
நப்பின்னைப் பிராட்டியே! நறுமணம் மிகுந்த கூந்தலை உடையவளே! வாயிலைத் திற.
கோழிகள் எல்லாப் பக்கங்களிலும் வந்து கூவுவதைப் பார்!
குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்மேல் இருக்கும் குயில் கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கூவுவதைப் பார்! பந்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் விரல்களை உடையவளே!
உன் நாதனான கண்ணன் எம்பெருமானுடைய திருநாமங்களை நாங்கள் பாடும்படியாக, உன்னுடைய அழகு பொருந்திய வளையல்கள் ஒலிக்கும்படி வந்து, உன்னுடைய சிவந்த தாமரை போன்ற திருக்கையால் மகிழ்ச்சியுடன் கதவைத் திற.
மார்கழி மாதம் பதினெட்டாம் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ,
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர், திருப்பாவை ஜீயர் (உடையவர்) திருக்கோலத்தில் ....
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய..
ReplyDelete