24 January 2023

தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

 தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

தைமாதம் 8ஆம் தேதி (22-01-2023) ஞாயிற்றுக்கிழமை.. தை‌ அமாவாசை திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை உத்ஸவம் நடைப்பெற்றது. 



தை அமாவாசை(21/01/2023) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ) 11 எம்பெருமான்களின் கருட சேவை  நடைபெறுகிறது. திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

இத்தனை திவ்ய தேச எம்பெருமான்கள் ஒருசேர கருட சேவை உலகத்தில் இங்கு மட்டுமே. 

திருமங்கை ஆழ்வார்  தை அமாவாசை  அதிகாலை திருநகரி ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ கல்யாண ரெங்கநாதன் திருக்கோயிலிருந்து ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் கோலகலத்துடன் புறப்பட்டு, நடுவில் உள்ள 

1. திருக்குறையலூர்

2. திருமங்கைமடம்

3. திருக்காவலம்பாடி

4. திருமணிக்கூடம்

5. திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஸ்தலங்களில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்வார், பின்பு அங்கிருந்து புறப்பட்டு பகலில் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி பின்பு 

1. திருநறையூர் 

2. திருவரங்கம்

ஆகிய எம்பெருமான் மங்களாசாசனம் பாசுரம் கோஷ்டியினர் சேவிக்கப் பெற்றும் பிறகு திருப்பாவை சாத்துமறை முடிந்து அங்கிருந்து கீழ்வரும் திருநாங்கூர் 6 திவ்ய தேச எம்பெருமான்கள் சன்னதியில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்வார். 

1. மணிமாடக்கோயில்

2. வண்புருடோத்தமம்

3. வைகுந்த விண்ணகரம்

4. செம்பொன் செய்கோயில்

5. திருத்தெற்றியம்பளம். 

6. அரிமேயவிண்ணகரம்.

ஆகிய எம்பெருமான்கள் சன்னதியில் மங்களாசாசனம் முடிந்து மணிமாட கோயிலில் அர்த்தஜாம பூஜை நடைபெறும். இத்துடன் சனிக்கிழமை அமாவாசை உற்சவம் முடிகிறது. 















மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பாவை சாத்துமறை முடிந்து மதியம் கீழ்க்கண்ட வரிசையில் எம்பெருமான்களை  ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார். 

1. ஸ்ரீ நாராயண பெருமாள், மணிமாடகோயில்.

2. ஸ்ரீ குடமாடு கூத்தர், அரிமேய விண்ணகரம், 

3. ஸ்ரீ செம்பொண்ணரங்கன், செம்பொண்செய்கோயில்,

4. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், திருத்தெற்றியம்பளம்

5. ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்

6. ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், திருவண்புருடோத்தமம்,

7. ஸ்ரீ வரதராஜன், திருமணிக்கூடம்

8. ஸ்ரீ வைகுந்த நாதன், வைகுந்த விண்ணகரம்,

9. ஸ்ரீ மாதவ பெருமாள், திருதேவனார்தொகை,

10. ஸ்ரீ பார்த்தசாரதி, திருப்பார்த்தன்பள்ளி,

11. ஸ்ரீ கோபாலன் , திருக்காவலம்பாடி,

ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார். 


கருட சேவை

   ஆழ்வாரும், குமுதவல்லி நாச்சியாரும் ஹம்ச வாகனத்தில். மாமுனிகள் அவருடைய ஆஸ்தான சேஷவாகனத்தில் ..கோவிலுக்குள் இருந்து, முதலில்  பந்தலுக்கு வந்து பந்தலின் கிழக்கில் முகப்புக்கு எதிரில் சற்று இடது புறமாக நிற்பார். தொடர்ந்து ஆழ்வார், முகவாயிலுக்கு நேர் எதிரில் மாமுனிகளுக்குப் பக்கத்தில்,ஹம்சவாகனத்தில்.

ஆழ்வாரைத் தொடர்ந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெருவில், வரிசையாகச் வந்து நிற்பார்கள். ஒவ்வொரு பெருமாளும் வெளியே வந்து கோவில் வாயிலில் நிற்பார். அவருக்கு கும்பதீபாராதனை ஆகி,அதே கும்பதீபம் ஆழ்வாருக்கும்,மாமுனிகளுக்கும் காட்டப் படும்.

11 ஆவது பெருமாள் (காவளம்பாடி ராஜகோபாலன்- ) வந்தவுடன் மாமுனிகள் விரைவாகச் சென்று,சந்நிதித் தெருவில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்களைத் தாண்டிச் சென்று முதல்வராக, எம்பிரான்களை நோக்கிய திசையில் கூப்பிய கரங்களுடன் நிற்பார். ஆழ்வாரும் விரைந்து சென்று வரிசையில்,முதல் பெருமாளுக்கு முன்பாக, மாமுனிகளை நோக்கி நிற்பார்.

இப்போது கருடசேவை மெதுவாக ஆரம்பித்து ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவர்.













பெரும்பாலான வீடுகளில் ஆழ்வாருக்கும், பெருமாளுக்கும் மாலைகள்,வஸ்த்ரம்,பழங்கள் சமர்ப்பிப்பர். அத்யாபகர்கள்,ஆழ்வார் திருநாங்கூர் திவ்ய தேசங்களைப் பாடிய பெரிய திருமொழி பாசுரங்களைச் சேவித்துக் கொண்டு வந்து, மாமுனிகளும் ஆழ்வாரும், பந்தலுக்கு எழுந்தருளியதும்,முடிப்பார்கள். வீதிப்புறப்பாடு முடிந்து அதிகாலை  பந்தலுக்குத் திரும்பினர். பின் அனைவரும் மங்கள ஆரத்தி கண்டு அவரவர் குறுமண்டபங்களுக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு உபயதாரர்கள் மரியாதை ஆகி,

பெருமாள் அலங்காரம் கலைந்து,

மெல்லிய பட்டுப் போர்வை சாற்றி, அவரவர் ஆஸ்தானத்துக்கு (திவ்ய தேசகோவில்களுக்குப்) 

புறப்படுவார்கள்.

ஆழ்வார் இன்று மீண்டும் திருமஞ்சனம் கண்டருள்வார். 

பின்னர் திருப்பாவை சாற்றுமறை முடிந்து திருகரிக்குப் புறப்படுவார்.

செல்லும் வழியில், திருவெள்ளக்குளம்அண்ணன்பெருமாள்,திருத்தேவனார்தொகை-மாதவப்பெருமாள்,திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் ஆகியோரை அவர்களது திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துவிட்டு, இரவு 10 மணியளவில்,தம் ஆஸ்தானமான திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலைச் சென்றடைவார்.


மேற்படி இரவு அந்த அந்த திவ்யதேச எம்பெருமான்கள் கருட வாகனத்தில் எழுந்தருள ஸ்ரீ திருமங்கையாழ்வார் ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி மங்களாசாசன உற்சவம் நடைபெறும், ஸ்ரீ மணவாள மாமுனிகள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ திருமங்கையாழ்வாரை  மங்களாசாசனம் செய்வார். அதனை தொடர்ந்து அந்த அந்த திவ்யதேச எம்பெருமான்களின் விடைபெற்றுக்கொண்டு அவரவர் சன்னதி திரும்புவார். 









பெரிய திருமொழி - மூன்றாம் பத்து
எட்டாம் திருமொழி – நந்தாவிளக்கே - 


1218
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! 
நர நாரணனே! கரு மா முகில் போல் 
எந்தாய்! * எமக்கே அருளாய் என நின்று 
இமையோர் பரவும் இடம் * எத்திசையும் 
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே 
களி வண்டு மிழற்ற, நிழல் துதைந்து * 
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் 
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே! (2)


1219
முதலைத் தனிமா முரண் தீர அன்று 
முது நீர்த் தடத்துச் செங் கண் வேழம் உய்ய * 
விதலைத்தலைச் சென்று, அதற்கே உதவி 
வினை தீர்த்த அம்மான் இடம் * விண் அணவும் 
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப் 
பவளக் கொழுங் கால பைங்கால் புறவம் * 
மதலைத் தலை மென் பெடை கூடு நாங்கூர் 
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! 


1220
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய, அன்று, 
கொடு மா முதலைக்கு இடர் செய்து * கொங்கு ஆர் 
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
அணைந்திட்ட அம்மான் இடம் * ஆள் அரியால் 
அலைப்புண்ட யானை மருப்பும், அகிலும் 
அணி முத்தும் ,வெண் சாமரையோடு * பொன்னி 
மலைப் பண்டம் அண்டத் திரை உந்தும்  நாங்கூர் 
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!



தொடரும் ...
ஓம் நமோ நாராயணாய நம!!


அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. சிறப்பான பதிவு..
    திருநாங்கூர் கருடசேவையை சேவித்த புண்ணியம்..

    ஹரி ஓம் நமோ நாராயணாய..

    ReplyDelete