15 . "ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே"
கொல்லி நாட்டைத் திடவிரதன் என்ற சேர மன்னன் ஆண்டு வந்தான். அந்த அரசனுக்கு மகனாகப் பிறந்தார் குலசேகரர். சிறுவயது முதலே புராணங்கள், சாஸ்திரங்கள், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களையும் நன்கு கற்றார்.
ராமாயணத்தை மிகவும் விரும்பிக் கேட்பார். ராமரிடம் அளவு கடந்த பக்தியும் அன்பும் அவருக்கு. நம்மாழ்வாரின் பாசுரங்களிலால் திருவரங்கன் மீதும், அவன் அடியார்களிடம் மிகுந்த பற்று ஏற்பட்டது.
சாஸ்திரங்கள் மட்டுமில்லாமல், அரச குலத்துக்கு உண்டான வாள் வீச்சு, வில்வித்தை போன்ற பயிற்சிகளிலும் கற்றுத் தேர்ந்தார். தன் தந்தைக்குப் பின் அவர் அரசனாக நல்லாட்சி செய்தார். ஆனால் அரசாட்சியில் அவருக்கு அதிக நாட்டம் இல்லை. காரணம் ராமாயணம் அதிகம் கேட்க முடியவில்லை. அரசனாகக் கிடைக்கும் சமயங்களில் அடியார்களை அழைத்து ராமாயணக் கதையைச் சொல்லச் சொல்லி அனுபவிப்பார்.
ஒரு முறை ராமாயணக் கதையைக் கேட்கும்போது 14000 அரக்கர்கள் பெரும் படையுடன் ராமருடன் மாயப் போர் புரிய வந்தனர் என்பதை கதை சொல்பவர் விரிவாகச் சொன்னார்.
அதைக் கேட்டவுடன், ஐயோ பாவம், ராமர் ஒருவனாக எப்படி இந்த அரக்கர்களைச் சமாளிக்கப் போகிறார் என்ற பதட்டத்தோடு எழுந்தார். இது கதையில் வரும் நிகழ்ச்சி என்பதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு நான் ராமரை காப்பாற்ற முன்னே செல்கிறேன். நீங்கள் படையுடன் என் பின்னே வாருங்கள் என்று மந்திரிகளுக்குக் கட்டளையிட்டு வில்லுடன் ராமரைக் காக்க ஓடினார்.
அமைச்சர்கள் அவர் பின் ஓடிச்சென்று ”அரசே போர் முடிந்தது... அதோ பாருங்கள் ராமர் சீதையை அணைத்துக்கொண்டு வருகிறார்” என்று பொய் சொல்லக் குலசேகர ஆழ்வாருக்கு நிகமாகவே வானில் ராமர் சீதையுடன் காட்சி கொடுத்தார்.
அமைச்சர்களுக்கு இன்னொரு பிரச்சனை வந்தது. அரசர் அடிக்கடி “நான் திருவரங்கம் செல்கிறேன்” என்று கிளம்பிவிடுவார். இவர் சென்றுவிட்டால் நாட்டை யார் ஆளுவது, எதிரிகளை யார் சமாளிப்பது என்று மந்திரிகளும், அரசு அதிகாரிகளும் குழம்பினார்கள்.
மன்னனின் பயணத்தை நிறுத்த என்ன செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் போட்டார்கள். மன்னனுக்கு வைணவ அடியார்களிடம் மிகுந்த பற்று என்பதை அறிந்தவர்கள் மன்னன் கிளம்பும்போது சில வைணவ அடியார்களை அரண்மனைக்கு அனுப்புவார்கள்.
உடனே மன்னன் அவர்களை வரவேற்று உபசரிப்பர் பின் அவர்களுடன் திவ்ய தேசம் பற்றியும், திருமாலைப் பற்றியும் பேசுவார். ...
இப்படி சில நாட்கள் அவர்களுடன் கழித்த பின் மன்னன் மீண்டும் திருவரங்கம் புறப்படுவார். மந்திரிகள் மேலும் சில அடியார்களை அனுப்புவார்கள். இப்படி தினமும் புதுப்புது அடியார்களை அனுப்பி அவருடைய திருவரங்க பயணத்தைத் தள்ளிப் போட்டார்கள். ஆனால் இதுவே நாளடைவில் அவர்களுக்கு வேறு ஒரு பிரச்சனையாக மாறியது.
அரண்மனை முழுவதும் வைணவ அடியார்களாக நிறைந்துவிட்டது.
அரசன் அவர்களுடனே இருந்தால் அரசாட்சியைச் சரிவரக் கவனிக்க முடியவில்லை. இந்த அடியார்களை எப்படி விரட்டி அடிப்பது என்று மந்திரிகளும், அரண்மனை அதிகாரிகளும் யோசித்தார்கள்.
அந்தச் சமயம் ராமநவமி உற்சவம் வந்தது.
அரண்மனையில் அமைந்த ராமர் கோயிலில் விசேஷமாகத் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
திருமஞ்சனம் நடைபெறும்போது களைந்து வைத்திருந்த நகைகளில் விலை மதிக்க முடியாத ஒரு முத்துமாலையை மந்திரிகள் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துவிட்டார்கள்.
திருமஞ்சனம் முடிந்து அர்ச்சகர்கள் முத்து மாலையைக் காணோம் என்று மன்னனிடம் புகார் அளித்தார்கள். குலசேகரர் மந்திரிகளைக் கூப்பிட்டு “களவு போனது ராமருடைய முத்து மாலை, கள்வனை விரைவில் கண்டுபிடியுங்கள்” என்று கட்டளை இட்டார்.
மந்திரிகளும் இது தான் சரியான சரியான சமயம் என்று அரசனிடம் “அரண்மனையில் எங்கும் எந்தத் தடையுமின்றி திரியும் ஏதோ ஒரு வைணவர் தான் எடுத்திருக்க வேண்டும்” என்று பழி சுமத்தினர்.
இதைக் கேட்ட குலசேகரர் மனம் நொந்து தன் இரு கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு “வைணவ அடியார்கள் ஒருபோதும் இப்படிச் செய்யமாட்டார்கள்! நானே இந்தச் சபையில் இதைச் சபதம் செய்து காட்டுவேன்” என்று கூறி நல்ல பாம்பு அடைக்கப்பட்ட குடத்தை வரவழைத்து ”வைணவர்கள் எவரேனும் இந்தச் செயலைச் செய்திருந்தால், இப்பாம்பு என்னைத் தீண்டிக் கொல்லட்டும்” என்று கையைக் குடத்துக்குள் விட்டார்.
குடத்திலிருந்த பாம்பு குலசேகரர் கையைத் தீண்டாததைக் கண்ட அமைச்சர்கள் பதறிப் போய்த் தாங்கள் செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டு மன்னிப்பு வேண்டினார்கள்.
குலசேகரர் அப்படியும் மனம் ஆறவில்லை.
வைணவ அடியார்களுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்குத் தானே காரணம் என்று கருதி, இதற்குப் பரிகாரம் அந்த அடியார்களுக்குப் பணிவிடை செய்வது என்று முடிவு செய்தார்.
வைணவ அடியார்களுக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த அரச பதவியே வேண்டாம் என்று மகனுக்கு முடி சூட்டிவிட்டு, திவ்ய தேச யாத்திரைக்கு புறப்பட்டார்.
அவர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட திருவரங்கம் சென்றார் அங்கே அவருடைய மகள் சேரகுல வல்லியை அழகியமணவாளனுக்கு மணம் முடித்துத் திருவரங்கத்தில் மூன்றாவது வீதி ஒன்றை ஏற்படுத்திக் கோயிலுக்குப் பல தொண்டுகள் செய்தார்.
பிறகு மற்ற திவ்ய தேசங்களுக்கு யாத்திரையாகப் புறப்பட்டர். திருப்பதி சென்றபோது அவருக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. திருவேங்கடவனை தரிசித்தார். ஆனால் அவர் முகம் வாடியிருந்தது.
பக்கத்திலிருந்தவர்கள் “அரசே வரவேற்பில் ஏதாவது குறையா ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறீர்கள் ?” என்று கேட்க அதற்குக் குலசேகரர் வேங்கடவனைச் சேவித்தபின் ஏக்கமாக இருக்கிறது!” என்றார்.
பக்கத்தில் இருந்தவர்களுக்குப் புரியவில்லை
“அரசே என்ன ஏக்கம் ?” என்று கேட்க ஆதற்குக் குலசேகர ஆழ்வார்
திருமலையில் நுழையும்போது ஏரியில் ஒரு நாரையைப் பார்த்தேன் நான் நாரையாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்தது.
பிறகு அந்த ஏரியில் மீன்கள் ஓடியது. அந்த ஏரியில் மீனாகப் பிறக்க முடியவில்லையே என்று ஏக்கப்பட்டேன். இதோ பெருமாள் முன் இந்தப் பொன்னாலான பாத்திரம் இருக்கிறது. பாத்திரமாக இருந்திருக்கலாம் என்று ஏக்கம் வருகிறது.
இதோ பெருமாள் செண்பக மலர்கள் சூடிக்கொண்டு இருக்கிறான்.
இந்த மலர்களைக் கொடுக்கும் மரமாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம்.
கருவறை முன்னால் இந்த வாசல் படியாக இருந்தால் மலையப்பன் முகத்தையும் அவன் பவள வாயையும், வடிவழகையும் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தப் படியாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் வருகிறது... இவை எதுவும் வேண்டாம் பெருமாள் விருப்பபடி இந்தப் பொன்மலைமேல் எதுவானாலும் சரி, ஏதாவது ஒன்றாக ஆக விருப்பம், ஆனால் முடியவில்லையே என்ற ஏக்கம்... என்று கண்ணீர் விட்டார் ஆழ்வார்.
”சாமி ஆழ்வார் திருமலையில் படியாகக் கிடக்கிறேன் என்று விருப்பட்டார், இதனால்
தான் பெருமாள் கோயில் வாசற்படி ’குலசேகரப்படி’ என்கிறார்கள் என்றாள் அந்தப் பெண்..
”ஆழ்வார் மாதிரி நான் ஏதேனும் ஒன்றாக ஆக ஆசைப்படவில்லையே அதனால் நான் கிளம்புகிறேன்!” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய் மொழி -முதற் பத்து
1 - 2. வீடுமின் முற்றவும்
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
No comments:
Post a Comment