08 July 2022

ஸ்ரீபெரியாழ்வார் திருநட்சத்திரம்

 இன்று  ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)





ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனில்  சோதி வந்தான் வாழியே

தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும் தம் அப்பன் வாழியே

செல்வ நம்பிதனைப் போலச்   சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

தந்தை           : முகுந்தர்

தாய்              : பதுமவல்லி

பிறந்த நாள்  : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்

நட்சத்திரம்    : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)

கிழமை           : திங்கள்

எழுதிய நூல்   : பெரியாழ்வார் திருமொழி

பாடிய பாடல் : 473

சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் முதல் ஆயிரத்தில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளன.

இதில் பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் யசோதை பாவனையில் ஸ்ரீகண்ணபிரானின் குழந்தைப் பருவ வைபவங்களைப் பாடிய பாசுரங்கள் தனித்துவமாக விளங்குகின்றன.

இவை தமிழ் இலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தவை.

தமிழ் இலக்கியத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன.

அவற்றுக்கு எல்லாம் ஆதி பிள்ளைத்தமிழ் காவியமாகவும், சிகரம் வைத்தாற் போலப் பிரகாசிப்பதும்  பெரியாழ்வார் பாடிய கண்ணன் பிள்ளைத்தமிழ் ஆகும்.


முந்தைய  பதிவுகள் ...











பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து

ஆறாம் திருமொழி - மாணிக்கக் கிண்கிணி

கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்



மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி, பவளவாய் முத்து இலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழல் குட்டனே! சப்பாணி! 1
75


பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரைஆடத் தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர் தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
மாயவனே! கொட்டாய் சப்பாணி 2
76


பல் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன
என் மணிவண்ணன்! இலங்கு பொன் தோட்டின் மேல்
நின் மணிவாய் முத்து இலங்க, நின் அம்மை தன்
அம் மணிமேல் கொட்டாய் சப்பாணி,
ஆழியங் கையனே! சப்பாணி 3
77


தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவ, கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி 4
78


புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி, அகம் புக்கு, அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக்கன்றே! கொட்டாய் சப்பாணி,
பற்பனாபா! கொட்டாய்சப்பாணி 5
79




ஸ்ரீபெரியாழ்வார் கண்ணன் திருக்கோலத்தில்





தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப் 
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி,
தேவகி சிங்கமே! சப்பானி  6
80


பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி,
சார்ங்க விற் கையனே! சப்பாணி 7
81


குரக்கு  இனத்தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி, நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங் கையனே! சப்பாணி 8
82


அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி,
பேய்முலை உண்டானே! சப்பாணி 9
83


அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி,
கார்முகில் வண்ணனே! சப்பாணி 10
84


ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாட் கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினைபோமே. 11
85




 ஸ்ரீஆண்டாள் திருக்கோலத்தில் ஸ்ரீபெரியாழ்வார் 











ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்

16


உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

20




திருத்தேரில் ஸ்ரீபெரியாழ்வார்  வீதி உலா







    ஓம் நமோ நாராயணாய நம!!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!


அன்புடன் 
அனுபிரேம் 

No comments:

Post a Comment