11 July 2019

பெரியாழ்வார்

இன்று  (11/07/2019)  பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)








ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

பெரியாழ்வார் வைபவம் முந்தைய பதிவு இங்கே  






பிள்ளைத்தமிழ் இலக்கியமானது, தமிழில் (96) தொன்னூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று .


இதில் இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து அவர்கள் மேல் பாடல்களை  பாடுவது சிறப்பு .

குழந்தையும் அழகு, தமிழும் அழகு;

அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும் இந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம் பேரழகு மிக்கது. அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.


அப்படிப்பட்ட பிள்ளைத்தமிழில் பெரியாழ்வார் இயற்றியதே பெரியாழ்வார் திருமொழி.

பெரியாழ்வார் தன்னை யசோதையாகவும், இறைவனைக் குழந்தையாகவும் பாவித்துப் பாடிய பாடல்கள் தான் பெரியாழ்வார் திருமொழி!

கண்ணனைக் குழந்தையாக எண்ணி அளவிலா அன்புடன் குழந்தையின் எல்லாச் செயல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள பாசுரங்கள் இதயத்தை ஈர்க்கும் பாங்கின.

பெரியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல உயிர்களுக்கும் அருள் செய்யும் பகவானுக்கே தாயாகிறார். எத்தனை உயர்ந்த உள்ளம்!.


கண்ணனை ஒரு தாயின் நிலையிலிருந்து பாடுகிறார். தாய் நிலையைத் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், அப்பூச்சி காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை ஒட்டியே பாடியிருக்கிறார்.






பெரியாழ்வார் திருமொழி -முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்


23

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி 
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த 
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் 
பாதக்கமலங்கள் காணீரே 
பவளவாயீர்! வந்துகாணீரே. (2) 1. 


24

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் 
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும் 
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் 
ஒத்திட்டிருந்தவா காணீரே 
ஒண்ணுதலீர்! வந்துகாணீரே. 2. 


25

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை 
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை 
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும் 
கணைக்கால்இருந்தவாகாணீரே 
காரிகையீர்! வந்துகாணீரே. 3. 




26

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண 
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் 
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் 
முழந்தாள்இருந்தவாகாணீரே 
முகிழ்முலையீர்! வந்துகாணீரே. 4. 


27

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு 
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை 
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் 
குறங்குவளைவந்துகாணீரே 
குவிமுலையீர்! வந்துகாணீரே. 5. 


28

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை 
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் 
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் 
முத்தமிருந்தவாகாணீரே 
முகிழ்நகையீர்! வந்துகாணீரே. 6. 






29

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை 
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன் 
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் 
மருங்கும்இருந்தவாகாணீரே 
வாணுதலீர்! வந்துகாணீரே. 7. 


30

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து 
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் 
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய 
உந்திஇருந்தவாகாணீரே 
ஒளியிழையீர்! வந்துகாணீரே. 8. 



31

அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி 
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த 
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த 
உதரம்இருந்தவா காணீரே 
ஒளிவளையீர்! வந்துகாணீரே. 9. 




32

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு 
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை 
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் 
திருமார்புஇருந்தவாகாணீரே 
சேயிழையீர்! வந்துகாணீரே. 10. 


33

நாள்களோர்நாலைந்து திங்களளவிலே 
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் 
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் 
தோள்கள்இருந்தவாகாணீரே 
சுரிகுழலீர்! வந்துகாணீரே. 11. 


34

மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற 
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை 
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய 
கைத்தலங்கள்வந்துகாணீரே 
கனங்குழையீர்! வந்துகாணீரே. 12. 








ஓம் நமோ நாராயணாய நம!!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. அருமையான பதிவு.
    அழகர்கோவில் போக முடியவில்லை.
    பெரியாழ்வார் திருவரசு எப்போதும் மூடி இருக்கும்.
    இன்று திருஅவதார திருநட்சத்திர விழா சமயம் போனல் பார்க்கலாம்.
    ஆனால் வேறு வேலைகள் அதனால் போக முடியவில்லை.

    உங்கள் தளத்தில் தரிசனம் செய்து விட்டேன்.
    நன்றி அனு.

    ReplyDelete
  2. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    படங்கள், பாடல்கள் அருமை.

    ReplyDelete
  3. பெரியாழ்வார் திருநட்சத்திரத்துக்கான பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete