24 July 2019

அத்தி வரதர் வைபவம்

வாழ்க வளமுடன் 





வரதர்  வர­லாறு 

பேரருளாளன் , தேவாதிராஜன், தேவப்பெருமாள் என்றெல்லாம்  அழைக்கப்படும் வரதராஜர்

கிருதயுகத்தில் பிரம்மன்,
துவாரகயுகத்தில்  பிரகஸ்பதி,
திரேதாயுகத்தில்  கஜேந்திரன்,
கலியுகத்தில் ஆதிசேஷனால்   பூஜிக்கப்பட்டவர் .


2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இத்திருக்கோயில்.


ஒருமுறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார்.

பிரம்மாவின் பக்தியினால் திருப்தியுற்ற  விஷ்ணு அவருக்காக ஒரு புஷ்கரணியின் வடிவில் தோன்றினார். ஆயினும், திருப்தியடையாத பிரம்மா தமது தவத்தைத் தொடர,  விஷ்ணு ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்குத் தோன்றினார்.

 அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.

அச்சமயத்தில்,  நாராயணரை நான்கு கரங்களுடன் தரிசிக்க நூறு அஸ்வமேத யாகங்களைப் புரிய வேண்டும் என்று அசரீரி உரைத்தது.

நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதன் சிரமத்தை எண்ணி பிரம்மதேவர் வருந்தியபோது, காஞ்சியில் செய்யப்படும் ஓர் அஸ்வமேத யாகம் நூறு அஸ்வமேத யாகத்திற்கு சமமானது என்பதை அறிந்து, காஞ்சியில் யாகத்தை நிகழ்த்தினார்.

அச்சமயம்  அவ­ரு­டைய பத்­தி­னி­யா­கிய சரஸ்­வ­தியை விடுத்து மற்ற இரு மனை­வி­ய­ரா­கிய சாவித்­திரி, காயத்ரி ஆகி­யோ­ரு­டன் இருந்து யாகம் செய்­யத் தொடங்­கி­னார்.

அதனை அறிந்த சரஸ்­வதி மிக­வும் கோபம் கொண்டு வேக­வதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்­தாள்.


அதனால்   பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி  ,
ஒவ்வொரு  கோலம் எடுத்து  திருமால் ( பவளவண்ணன் , யதோத்காரி, அஸ்டபுயகரத்தான், தீபப்பிரகாசர், நரசிம்மன்) சரஸ்வதியிடம் இருந்து பிரம்மனின் யாகம் பூர்த்தியாக துணை இருந்தார் .



 பிரம்­மா­வின் யாகம் பூர்த்­தி­யான உடனே யாக குண்­டத்­தி­லி­ருந்து புண்­ணி­ய­ கோடி விமா­னத்­து­டன் பெரு­மாள் தோன்­றி­னார்.

 வேண்­டும் வரம் தரு­ப­வர் என்­ப­தால் இவர், ‘வர­த­ரா­ஜர்’ எனப் பெயர் பெற்­றார்.

மூலவரான வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.  வேகவதி ஆறு, அனந்த புஷ்கரணி ஆகியவை தீர்த்தங்களாக உள்ளன.

  இந்த அனந்த புஷ்கரணியில் தான் அத்திவரதர் சயனித்தபடி அருள்பாலிக்கிறார்.

24 நான்கு படி­கள் ஏறி அத்­தி­கி­ரியை அடைய வேண்­டும்.



 அத்தி வரதர்வரலாறு 

கிருத யுகத்தில் பிரம்மா தரிசித்த  நாராயணரை பிரம்மாவினுடைய அறிவுறுத்தலின் பேரில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா அத்தி மரத்தைக் கொண்டு ஒரு திருவிக்ரஹமாக வடித்தார். அவரே இக்கோயிலில் மூல விக்ரஹமாக 16ஆம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்டு வந்தார்.







இஸ்லாமிய ஆக்கிரமிப்பின்போது வரதரை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, கோயிலுக்குள் இருந்த புஷ்கரணிக்கு உள்ளே வரதர் மறைத்து வைக்கப்பட்டார். வரதர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை கோயிலின் தர்மகர்த்தா குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.

நாற்பது வருடங்கள் கோயிலில் விக்ரஹம் இல்லாமல், பூஜை ஏதும் நிகழாமல் கழிந்தன.

தர்மகர்த்தா சகோதரர்களும் மரணமடைய, அவரது மகன்கள் 40 வருடங்களுக்கும் மேலாக விக்ரஹத்தை எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும், வரதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.




உற்சவ மூர்த்திகள் மட்டும் உடையர் பாளையம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர்.

ஆயினும், அத்தி வரதரைக் காண முடியவில்லை என்பதால், காஞ்சிக்கு அருகிலுள்ள (30 கிலோ மீட்டர்) பழைய சீவரத்திலிருந்து தேவராஜ ஸ்வாமியினை காஞ்சிக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.

இருவரது தோற்றமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, தேவராஜர் காஞ்சிபுரத்திற்கு வந்து மூலவராக அமர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்.

1709இல் ஏதோ காரணத்திற்காக, கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றிய தருணத்தில், அங்கு அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிக்கொணர்ந்து 48 நாள்கள் மட்டும் பூஜை செய்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, அத்தி வரதர் இன்றும் நாற்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் தருகிறார்.

அவர் நீருக்குள் சென்றதற்கு வெளிப்புறமாக சில நிகழ்வுகள் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் அவர் தமது சுய விருப்பத்தினாலேயே நீருக்கடியில் உள்ளார்.

வரதராஜப் பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்திற்கு அருகிலுள்ள நீராழி மண்டபத்துக்கு கீழே மற்றொரு மண்டபத்தில் அத்தி வரதர் சயனக்கோலத்தில் நாகர்கள் சூழ வைக்கப்பட்டுள்ளார்.

பிரம்மா மேற்கொண்ட அக்னிகுண்டத்தில் எழுந்தருளிய பெருமாள் உஷ்ணம் காரணமாக ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறார்.









அத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளிவந்து, சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் 48 நாள்கள் தரிசனம் தருகிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்தி வரதரை தரிசிக்க இயலும் என்பதால் எங்கும்  இவரை பற்றிய தகவல்களே ...




இத்தகு சிறப்பு மிக பெருமாளை காண வேண்டும் ஆசை அனைவரையும் போல எங்களுக்கும் வந்தது ...அவர் அருளால் தரிசனமும் கிடைத்தது ...அந்த அனுபவங்கள் அடுத்த பதிவில் ...


2276

என்னெஞ்சமேயான் என்சென்னியான் * தானவனை 
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் * -முன்னம்சேய் 
ஊழியான் ஊழிபெயர்த்தான் * உலகேத்தும் 
ஆழியான் அத்தியூரான்.


2277
அத்தியூரான் புள்ளையூர்வான் * அணிமணியின் 
துத்திசேர் நாகத்தின்மேல்துயில்வான் * - மூத்தீ 
மறையாவான் மாகடல்நஞ்சுண்டான்தனக்கும் 
இறையாவான் எங்கள்பிரான். 



தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. தங்களுக்கு அத்தி வரதரின் அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. அத்திவதரை தரிசனம் செய்து வந்து விட்டீர்களா?
    மகிழ்ச்சி.
    அனுபவங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    இந்த பதிவும் அருமை. அத்தி வரதர் வரலாறு, படங்கள் எல்லாம் மிக நனறாக இருக்கிறது.

    ReplyDelete
  3. படங்களும் விவரணங்களும் நல்லாருக்கு அனு

    கீதா

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அத்தி வரதரை தரிசனம் செய்த தாங்கள் கொடுத்து வைத்தவர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அழகான படங்களுடன், நல்ல விவரமான கதையுடன் அத்தி வரதரின் வரலாறு படிக்க நன்றாக உள்ளது. இதன் அடுத்த பகுதியையும் அன்போடும், ஆவலோடும் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. அத்தி வரதர் வரலாறு - உங்கள் தளத்திலும் படித்து மகிழ்ச்சி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete