23 June 2018

பெரியாழ்வார்இன்று  (23.6.2018)  பெரியாழ்வார்    அவதார தினம் .....

 (ஆனியில் – ஸ்வாதி)........


ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


பெரியாழ்வார்


பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

தந்தை   : முகுந்தர்

தாய்      : பதுமவல்லி

பிறந்த நாள்  : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்

நட்சத்திரம்  : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)

கிழமை   : திங்கள்

எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி

பாடிய பாடல் : 473

சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர் . ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர்.அக்காலத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வருகையில் ஒரு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு புதியவனைக் கண்டான்.

அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.

அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன்.கங்கையில் நீராடி வருகிறேன்“ என்றான்.

மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும் உண்டாகில் சொல்“ என்று கேட்டான்.

அவனும் “மழைக்காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில், 
முதுமையின் தேவையை இளமையில், 
மறுமையின் தேவையை இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான்.

மன்னன் மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை  சொல்லி “நமக்கு இப்போது குறையொன்றுமில்லை.

மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை வைப்போம்.

சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான்.

மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட ஆணையிட்டான்.ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான் கிழியை அறுத்து வாவென்றார்.

அது வேதாந்த பரமான சான்றோருக்கு நானோ ஏதும் அறியாதவன் என்ற ஆழ்வாரின் வாதத்தை பரமன் ஏற்க
மறுத்தான்.

 விழித்தெழுந்து அது விடியற் போது என்றுணர்ந்த ஆழ்வார்
இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர்.


அங்கிருந்த மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன் வரவேற்பதா?  என்று சலசலத்தனர். என்றாலும் அபிமான துங்கனான செல்வநம்பி மறுமைக்குத் தேவையான மார்க்க தரிசனம் காட்ட ஆழ்வாரை வேண்டினான்.

 ஆழ்வாரும் ஸ்ரீமன் நாராயணனே பரமேட்டி
என்று ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால்
விளக்கினார்.
அப்போது அரசன் வைத்த பொற்கிழி அறுந்து விஷ்ணுசித்தரிடம் தானே வீழ்ந்தது. இது கண்ட அந்த வித்வான்கள்  சத்ர சாமரங்களோடு அவரைக் கொண்டாடினர். எங்கும் விஜயகோஷம் எழுந்தது.

வித்வான்கள், அரசன் மற்றும் அனைவரும் மிக மகிழ்ந்து ஆழ்வாரை வணங்கினர்.வேதாந்த விழுப்பொருளைத் தெளிவாக எடுத்துரைத்ததால் பெரியாழ்வாரை மிகவும் கொண்டாடி, அவரை ஆனை மேலேற்றி, சத்ர சாமரங்களுடனும் வாத்யங்களுடனும், நகர்வலம் வருவதற்கு ஏற்பாடு செய்தனர் வித்வான்கள்.

“வேதாந்த விழுப்பொருளை உணர்த்தியவர் வருகிறார்” என்று கோஷமிட்டனர்.

பட்டர்களான வேதாந்திகளுக்கு பேருபகாரம் செய்ததால் அரசன் ஆழ்வாருக்கு "பட்டர்பிரான்" என்ற பிருதத்தைச் சாற்றினார்.

தன் மகன் பெரும் சிறப்பைத் தந்தை பெருமிதத்தோடு காணுமாபோலே, எம்பெருமான் பட்டர்பிரானின் வெற்றியைக் காணத் தம் நாச்சிமாரோடு  தோன்றினார்.

சக்கரமும் சங்கமும் ஏந்தி எம்பெருமான் தேஜோமயமாய் அழகு பொழிய வரவும், ஐயோ இந்த அழகுக்கு என்ன ஆபத்து வருமோ என்றஞ்சி, அரச மரியாதையோடு ஆனை மீதிருந்த விஷ்ணுசித்தர், ஆனையின் மணிகளையே தாளமாகக்கொண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனமாகத் திருப்பல்லாண்டு பாடி, அவன் அழகுக்கு பாமாலை பாடி சமர்ப்பித்தார்.

மனமகிழ்ந்து பணிந்த மன்னனை வாழ்த்தினார். அவன் தந்த பரிசில்களை  ஏற்று வில்லிபுத்தூர் திரும்பினார்.

பொற்கிழியையும் பரிசில்களையும் வட பெருங் கோயிலுடையானுக்குக் கொடுத்து விட்டு எப்போதும் போல்
மாலை கட்டி சாத்தும் தன் தொண்டைத் தொடர்ந்தார்.


தன் மனத்துக்கினிய அவதாரமான கண்ண பிரானின் பிறப்பு, வளர்ப்பு,   ஆனிரை மேய்த்தல்,   தீராத விளையாட்டுக்கள் மற்றும் பக்தர்களைக் காக்கும் அவன் பேரருட்குணங்களை பெரியாழ்வார் திருமொழி எனும் திவ்ய பிரபந்தமாக உலகம் உய்யப் பாடி அருளினார்.


திருப்பல்லாண்டு

(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்விதிருக் காப்பு(2)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே


(3)
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்

கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை

பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே(4)
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து

கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று

பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே

ஓம் நமோ நாராயணாய நம!!


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்

அனுபிரேம்


8 comments:

 1. மாமணிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வாசிக்கும் போது மனம் நெகிழ்கிறது. நன்றி.

  ReplyDelete
 2. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

  ReplyDelete
 3. ஆகா... அருமை...

  ஆண்டாளை வளர்த்தெடுத்த ஐயன் அல்லவா!..
  ஆழ்வார் திருவடிகள் போற்றி...

  ReplyDelete
 4. ஆண்டாள் வளர்த்த ஆழ்வாரின் பெருமையினை அறிந்தேன். அருமை.

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு. அவர் வணங்கிய அரங்கனின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  ReplyDelete
 6. ஸ்ரீ பெரியாழ்வாரின் செங்க்கீரை பருவ பாடல் பகிர்வு அருமை.
  படங்கள் எல்லாம் அழகு.
  மறுமையின் தேவையை சொன்ன பெரியாழ்வார் திருவடி சரணம்.

  ReplyDelete
 7. ஆழ்வார் வைபவம் படங்கள் அருமை,எம்பெருமான் அருள் தர வேண்டுகிறேன் நன்று

  ReplyDelete