22 July 2022

சத்தியகிரீஸ்வரர் ஆலயம், திருமெய்யம்.

சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் - 


புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ. தூரத்தில் உள்ளது திருமெய்யம் திருத்தலம். இங்கு சத்தியகிரீஸ்வரர் ஆலயம் கொண்டுள்ளார். 






சத்தியமூர்த்தி, மெய்யப்பன், சத்திய கிரீஸ்வரர், சத்திய தீர்த்தம், சத்திய விமானம், சத்தியகிரி என அனைத்தும் சத்தியமே. ஊரும் திருமெய்யம் (சத்தியம்-மெய்).

 இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள்  காலத்தில் கட்டப்பட்ட கோவில்.  மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.  இக்கோவில்  மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில். 

மூலவர்  -  சத்தியகிரீஸ்வரர்

அம்மன்   - வேணுவனேஸ்வரி

தல விருட்சம்  - மூங்கில்மரம்

தீர்த்தம் - சந்திரபுஷ்கரணி

பழமை  -      1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்   - திருமயம்


ஸ்தல விருட்சம் மூங்கில், இதனால்  இப்பகுதி வேணுவனம் என அழைக்கபடுகிறது.  அம்பாள் பெயர் வேணுவனேஸ்வரி ஆகும்.   

சத்யபுஷ்கரணி எனும் தீர்தத குளம் உள்ளது.  சந்திரன் பூஜை பண்ணியதால் சந்திரபுஷ்கரணி  என்றும் கூறப்படுகிறது. 







 ஆதியில், சந்திரன் தீராத நோய் ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான். பல்வேறு தலங்களுக்குச் சென்று வேண்டியும் நோய் தீர்ந்தபாடில்லை. இறுதியாக இத்தலத்திற்கு வந்து, திருக்கோயில் குளத்தில் நீராடி, சத்தியகிரீஸ்வரரை வணங்கிய பின், அவனது நோய் முழுமையாக நீங்கி நலமடைந்தான் என்கிறது தலபுராணம்.

இந்த குடவரைக் கோயிலில் சிவபெருமான்  "சத்யகிரீஸ்வரர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில், சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.

அப்பொழுது இந்த இடம் வேணுவனமாக, அதாவது மூங்கில் காடாக இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். 

சத்தியகிரீஸ்வரர் அழகிய இலிங்க ரூபமாகக் காட்சி அளிக்கிறார். சத்திய மகரிஷி பூஜை செய்த தலம்.




இக்கோயில் தெற்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. பாண்டியர் கால மூன்று நிலைகளுடன் ராஜகோபுரம் முன் நிற்கிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடப்பக்கமாக விநாயகர் சன்னதி உள்ளது. இதன் பின்பக்கத்தில் ஆவுடையார் வடிவில் தெப்பக்குளம் எழிலாக அமைந்துள்ளது.

மகாமண்டபத்தை ஒட்டி கிழக்குப் பார்த்த வண்ணம் பானு உமாபதீஸ்வரர் சன்னதி காணப்படுகிறது. எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி அமைந்துள்ளன. 

தெற்குப் பார்த்த வண்ணம் ராஜராஜேஸ்வரி அம்மன், பைரவர் சந்நதிகள் உள்ளன. நவகிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார தேவதைகளும் அமைந்துள்ளன. இவையனைத்தும் கீழைக்கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.



இக்கோயில்களுக்கு சற்று உயரே வேணுவனேஸ்வரி அம்மன் சன்னதி உள்ளது. வேணுவனேஸ்வரி என்றால் மூங்கில் காட்டு அரசி என்று பொருள்படும். 

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் காடுகள் அதிகம் இருந்ததால், அதனை ஒட்டி அம்மனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம். இது கி.பி. 12-13ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு பின்னர் புதுப்பிக்கப்பட்டது.

வேணுவனேஸ்வரி அம்மன் சன்னதியை அடுத்து குகைக்கோயில் உள்ளது. 

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் மூலவராக லிங்க வடிவில் காட்சியளிக்கிறார் சத்தியகிரீஸ்வரர். 

இவரை வழிபட்டால் உடல், மனபிணிகள் தீரும் என்பது நம்பிக்கை. கருவறை வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் கலை நுட்பத்துடன் காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவருகின்றன.

எதிரே பெரிய அளவிலான நந்தி உருவம் உள்ளது. கிழக்குச் சுவரில் லிங்கோத்பவர் வடிவம் புடைப்புச் சிற்பமாக ஆளுயரத்தில் அமைந்துள்ளது. குடைவரைக் கோயில் என்பதால் பிராகாரம் அமையவில்லை.











பாறையுடன் இணைந்த கோவில் 





 சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் , சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. 

திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.  மற்றோரு பதிவில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலின் சிறப்புகளையும், பெருமைகளையும்  காணலாம் ...





எட்டாம் திருமுறை


மாணிக்கவாசக சுவாமிகள்  அருளிய  திருவாசகம்

1. சிவபுராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை)

திருப்பெருந்துறையில் அருளியது

(கலிவெண்பா)


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10



திருச்சிற்றம்பலம்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!


அன்புடன்,
அனுபிரேம் 💜💜💜

No comments:

Post a Comment