23 July 2022

17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே

17 . "அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே"





பகவானின் அம்சமான ஸ்ரீராமர் நினைத்திருந்தால், ஒரே நாளில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டிருக்க முடியும். 

அப்படியெல்லாம் செய்யாமல் காடு, மலை, செடி, கொடிகளிடம் எல்லாம் "சீதையைக் கண்டீர்களா?" என புலம்பியிருக்க வேண்டியதில்லை. 

 செடி, கொடி, மரங்களிடமும் தன் சீதையைப் பற்றி விசாரித்தார்.

சீதையைத் தேடி இராம லட்சுமணர்கள் வந்த போது ஜடாயுவைப் பார்த்தனர்.

 ஜடாயு ராவணனால் வீழ்த்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 

இவர்களுக்காகவே காத்திருந்தாற் போல, சீதையை ராவணன் தூக்கிச்சென்ற வழியைக் காட்டிவிட்டுத் உயிரை இழந்தது. 

அதற்கான ஈமச்சடங்குகளை ஸ்ரீராமர் செய்தார். ஸ்ரீராமர் ஜடாயுவுக்கு உரிய இறுதி காரியங்களைத் தான் செய்யாமல் மற்றவர்களைச் செய்ய வைத்திருக்கலாம். 

ஆனால், தானே முன் நின்று அத்தனை இறுதி சடங்குகளையும் செய்து முடித்தார். ஜடாயு கூறிய வழியில் சீதையைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்.

ஜடாயு சொன்ன  வழியே சென்ற போது, இரு கைகள் இராமரையும் லட்சுமணனையும் பற்றிக்கொண்டது. 

சற்று நேரத்தில், அவர்கள் இருவரும் வாயைப்போல ஒரு குகைக்குள் அகப்படவிருப்பதை பார்த்து அந்த இருகைகளையும் வெட்டி வீழ்த்தினர்.

வந்திருப்பவர்கள் யார் என்பதை புரிந்துகொண்ட அந்த கைகளுக்கு சொந்தக்காரனான அரக்கன் தன் கதையை எடுத்துச் சொன்னான். 

என் பெயர் கபந்தன். ஒரு காலத்தில் நான் பேரழகனாக இருந்தேன். ஆனால் நான் விளையாட்டாகச் செய்த ஒரு செயல் என்னை இப்படி ஆக்கிவிட்டது என்றான்.

”அப்படி என்ன செய்தாய் ? இப்படி ஆக ?” என்று ராம, லக்ஷ்மணர்கள் கேட்க அதற்கு அந்த அரக்கன் மேலும் தன் கதையைச் சொன்னான்.

ஒரு நாள் விளையாட்டாகக் கோரமான உருவத்தை எடுத்துக்கொண்டு ஒரு முனிவர் முன் சென்று அவரைப் பயமுறுத்தினேன். 

உடனே அந்த முனிவருக்குக் கோபம் வந்து “நீ எப்போது இப்படியே கோர உருவத்துடன் இருப்பாயாக” என்று சபித்துவிட்டார். 

நான் உடனே அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டும் என்றேன்.

 முனிவர் இரக்கப்பட்டு சில காலம் நீ இப்படியே திரிந்துகொண்டு இரு . பிறகு ராம, லக்ஷ்மணர்கள் உன் கையை வெட்டி உன்னை எரிப்பார்கள். அப்போது உனக்குப் பழைய உருவம் வரும் என்றார். 

அந்தச் சமயம் இப்போது வந்துவிட்டது என்று நினைக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது என்னை எரித்து என் பழைய உருவத்தை அடைய வழி செய்ய வேண்டும். 

என் உருவம் திரும்பி வந்தவுடன் சீதையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு வழி சொல்லுவேன் என்றான்.

ராம லக்ஷ்மணர்கள் கட்டைகளை அடுக்கி வைத்து அரக்கனை எரித்தார்கள். 

அரக்கனுக்குப் பழைய உருவம் வந்தது. 

பிறகு ராமனை பார்த்து, "சூரியப் புத்திரனான சுக்ரீவன், தன் அண்ணன்  வாலியால் துரத்தப்பட்டு தற்போது ரிஷ்யமுக பர்வதத்தில் வாழ்கிறான். நற்குணாதிசயங்களைக் கொண்ட அவன் நிச்சயம் தமக்கு, தம் மனைவியை தேடும் பயணத்தில் உதவி புரிவான். அவனுடன் நட்பு பாராட்டி அவனுடைய உதவியின் மூலம் தாம் பிராட்டியை பெறுவீர்கள்." 

பின் எப்படி அவ்விடத்தை அடைந்து சுக்ரீவனை கண்டுகொள்வதென விளக்கி விட்டுச் சொர்க்கம் சென்றான்.

"அந்த கபந்தனைப் போல ஸ்ரீ ராமனுக்கு வழிகாட்டவில்லையே நான்?!" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

திருவாய்மொழி -முதற் பத்து

1 - 3. பத்து உடை அடியவர்க்கு 


அமைவு உடை அறனெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 

அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடைஅற  நிலம்  அது  ஆம்*

அமைவு உடை அமரரும்,*  யாவையும் யாவரும் தான் ஆம்* 

அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    

2923


யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 

யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*

பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 

பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை; இலது இல்லை, பிணக்கே.  

2924








18. திருக்கண்ணங்குடி

ஸ்ரீ அரவிந்தவல்லீ ஸமேத ஸ்ரீ சியாமளமேனி ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் பதிவுகளை அழகாக கோர்வையாக சொல்லி வருகிறீர்கள். இராமாயணத்தில் வரும் இன்றைய கபந்தன் கதையும் அருமையாக உள்ளது. தொடர்கிறேன். திருக்கண்ணங்குடி பெருமாளை வழிபட்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete