29 October 2022

26."அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே"

26 . "அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே"






கிருஷ்ணனும், சுதாமனும் (குசேலரின் பெயர்) சாந்திபனி முனிவரிடம் கல்வி பயின்று வந்தனர். கண்ணனும், குசேலனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சுதாமன் ஏழை பிராமணனாய் இருப்பினும் ஞானத்தில் சிரேஷ்டர் அதோடு கிருஷ்ணனின் உண்மை ரூபத்தையும் அவன் அறிவான். ஆதலால், கிருஷ்ணன் மீது பெரும் பக்தி உண்டு சுதாமனுக்கு.

குருகுலவாசத்தை முடித்தபின் சுதாமன் தன் கிராமத்திற்கு சென்று அங்கு சுஷீலை என்பவளை மணந்து கொண்டான். பிக்ஷை பெற்று ஏழையாகவே வாழ்ந்தான்.

சாலைகளில் அவரைக் கிழிந்த ஆடைகளுடன் பார்த்தவர்கள் அவரை  ‘குசேலன்’ என்று அழைப்பார்கள். அதுவே நாளடைவில் அவருடைய பெயராகிவிட்டது (குசேலன் என்றால் வடமொழியில் கிழிந்த ஆடையை உடையவன் என்று பொருள் ). 

இடைபட்ட காலத்தில் கம்சனை அழித்த பின்னர், கண்ணன் துவாரகையின் மன்னன் ஆனான். ஒரு நாள் சுஷீலை சுதாமானிடம் வந்து, "உங்கள் பால்ய சிநேகிதர், கிருஷ்ணன் இப்போது துவாரகையின் மன்னனாக இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள். நம் வறுமையை போக்க அவர் ஏதேனும் உதவி செய்வார்" என்றாள்.

தன் நண்பனாகவே இருந்தாலும், இப்போது ஒரு நாட்டை ஆளும் அரசன். அவனிடம் எப்படிச் சென்று இதைக் கேட்பது என்று சுதாமனுக்குத் தயக்கம். எதையும் கேட்க விருப்பமில்லை எனினும், அவனைக் காண ஒரு வாய்ப்பு கிட்டுமே என சம்மதித்தான். ஆனால், அங்கு வெறும் கையோடு செல்ல விரும்பவில்லை. சுஷீலை தன் தோழிகளிடமிருந்து அவல் பொரியை சேகரித்து அதை சுதாமானிடம் தந்தாள். இந்த சிறு பரிசோடு, அவன் கிருஷ்ணனை பார்க்கச் சென்றான்.

கிருஷ்ணன் சுதாமனை பெரும் மரியாதையுடன் ஆனந்தமாக தன் அரண்மனைக்கு வரவேற்றான். 

 கண்ணன் அமரும் பொன்னாசனம் இருந்தது. ’வா சுதாமா இதில் உட்கார்ந்துகொள்’ என்று அதில் அமரச் செய்தான். 

பார்த்தவர்கள் வியக்க, சுதாமாவிற்கு வியர்த்தது.

 உடனே விசிறி எடுத்து விசிறினான். 

’ரொம்ப தூரம் பாவம் நடந்து வந்திருக்கிறாய்’ என்று அவருடைய பாதங்களை வாசனை தண்ணீரால் கழுவினான். அதை தன் தலையில் தெளித்துக்கொண்டான்.

பிறகு அவருடைய உடம்புக்குச் சந்தனம் முதலியவற்றைப் பூசினான். 

அப்போது குசேலருடைய உடம்பெல்லாம் எலும்புக் கூடாகத் தெரிந்தது.

 அப்போது கண்ணன் அவர் இடுப்பிலிருந்த சின்ன மூட்டையைப் பார்த்து “சுதாமா இது என்ன? அண்ணி சுசீலை எனக்குச் சாப்பிடுவதற்குக் கொடுத்து அனுப்பியதா ?” என்று கேட்டான்.

 குசேலர் அந்த அவலைக் கொடுப்பதற்குக் கூச்சப்பட்டார். மௌனமாக இருந்தார். 

கண்ணன் புரிந்துகொண்டு அதை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கி திறந்து பார்த்து “அடடே அவலா ? எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். இரண்டாவது பிடியை எடுக்கும்போது ‘ஒரு பிடி அவலே போதுமானது.’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ருக்மிணி.

 குசேலர் அன்று இரவு அங்கே தூங்கிவிட்டு, மறுநாள் காலைப் புறப்பட்டார்.

தான் வந்த காரணம்பற்றி எதுவும் கூறவில்லை. திரும்பிப் போகும் வழி எல்லாம் கண்ணனின் கனிவை நினைத்து உருகினார். கண்ணன் என்னைக் கண்டதும் தழுவிக்கொண்டான் என்று தன் தோளைத் தொட்டுப்பார்த்தார். அவன் பூசிவிட்ட சந்தனத்தை முகர்ந்து பார்த்தார். கண்ணனின் வாசனையாக இருந்தது.. 

ஏழ்மை, வருமை இருந்ததால் தான் கண்ணனை நினைக்க முடிந்தது. ஒரு வேளை பணம் இருந்தால் கண்ணனை மறந்திருப்பேனோ என்று நினைத்தார். 

ஊர் வந்து சேர்ந்தார். அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.

அவருடைய குடிசையைக் காணவில்லை. குடிசை இருந்த இடத்தில் பெரிய அரண்மனை இருந்தது. பக்கத்தில் நீரோடைகளும், மயில்கள் நடனமாடிக்கொண்டும். நிறையப் பசுக்கள், பக்கத்தில் தன் குழந்தைகள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். 

குசேலரின் மனைவி அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள். பட்டுப்புடவையும், நகைகளும் அடையாளம் தெரியாமல் தவித்தார். பிறகு கண்ணனின் விளையாட்டைத் தெரிந்துகொண்ட குசேலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“நான் கேட்காமலே வேண்டியதைக் கொடுத்திருக்கிறான்” என்று அவன் கிருபையை நினைத்து உருகினார். 

"குசேலரைப் போல கிருஷ்ணனுக்கு மிகுந்த நேசத்துடன் அவல் கொண்டு தந்தேனா... நான் எதையும் கொடுக்கவில்லையே! எனக்கு இங்கே தங்கி இருக்க என்ன தகுதி உள்ளது?" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 5. வள ஏழ் உலகின்

எம்பெருமானின் சீலகுணம் 


வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 

களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 

தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 

இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே. 1

2943



நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 

புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்து ஆய், முதலில் சிதையாமே* 

மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே! 2

2944





27. திருகாவளம்பாடி

ஸ்ரீ மடவரல்மங்கை ஸமேத ஸ்ரீ கோபாலக்ருஷ்ணாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தெரிந்த கதை என்றாலும் எத்தனை முறை வேண்டுமானாலும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். கேட்க, கேட்க திகட்டாத கதை. கண்ணனின் கதைகளே என்றும் தித்திப்பான சுவை கொண்டதுதானே...! அருமையாக சொல்லியுள்ளீர்கள். தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete