28 October 2022

குமார வயலூர்....

திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். 

இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு'  'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன.


வயலூர் என்பது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் அற்புதமான திருத்தலம். முருகப்பெருமான் தன் வேலினால் தடாகம் உண்டாக்கிய தலம். அந்தத் தடாக நீரை எடுத்து அம்மையப்பனுக்கு அபிஷேகித்து பூஜைகள் செய்து சிவ பார்வதியின் அருளைப் பெற்ற திருத்தலம். எனவே இந்தத் தலத்தின் தீர்த்தம் ரொம்பவே விசேஷமானது என்கிறது ஸ்தல புராணம்.

இந்தத் தலத்து முருகப் பெருமான் கொள்ளை அழகு. இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் தந்தருள்வார் முருகப் பெருமான்.



முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.


மூலவர் –  சுப்பிரமணிய சுவாமி, ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)

அம்மன் – வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி)

தல விருட்சம் வன்னிமரம்

 இந்தத் தலத்தில், சக்தி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சர்ப்ப தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. 




திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் “முத்தைத் திரு” பாடிய பின்பு, “வயலூருக்கு வா” என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதி தான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று சொல்லப்படுகிறது. 

இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு.

அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று.

 இந்த வயலூர் முருகப்பெருமானை எண்ணி திருவாவினன்குடியிலும் பாடி இருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 அருணகிரியார்  “பொய்யா கணபதி”  போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. 

ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். 

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்தத் தலத்தின் சாந்தித்தியத்தை உணர்ந்து சிலிர்த்திருக்கிறார். கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.







முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான்.

 அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. 

இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.


ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன. 

இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். 

இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. 








மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது.

 ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு. 

வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். 

சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். 

இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். 

சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால்,செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும்.

கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். 

வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். 

தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர்.


வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இது  நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு “சதுரதாண்டவ நடராஜர்” என்று பெயர். 

எண்ணினாலும் தரிசித்தாலும் எண்ணிலடங்காப் பேறுகளை அள்ளித்தரும் வயலூர் முருகப்பெருமானை முடிந்தவர்கள் நேரில் தரிசிக்க நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.




முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். 

அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். 

அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், “ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?” என்று கேட்டார். 

வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். 

அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

 எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள்.

வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார்.

நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத்திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.








தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான

......... பாடல் .........

அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
     றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்

அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
     றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை

பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
     பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்

பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
     பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்

கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
     கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்

கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
     களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
     குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
     குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.




திருமாலின் மருமகனே போற்றி என்றும், 
முடிவு என்பது அற்றவனே போற்றி என்றும், 
ஆறுமுகக் கடவுளே போற்றி என்றும், 
உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும்,
 தேவர்களின் செல்வமே போற்றி என்றும்,
 செந்நிறத்துச் சொரூபனே போற்றி என்றும், 
பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது. 

வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே, 
தேவேந்திரன் பெற்ற மகள் தேவயானையின் நாதனே, 
பாம்பின் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே, 
ஒரு நாளேனும் நினைத்துச் சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி சிறிதளவு கூட எதுவும் அறியாத ஏழை நான் உன் திருவாயால் பதி, பசு, பாசம்* 
ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும். 

கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே, 
முன்னொரு நாள், 
கடல் போலப் பேரோலியும் கொடிய கள்ளைக் குடித்தலும் உடைய துர்க்கை ஆடவும், யானையை (ஐராவதம்) வாகனமாகக் கொண்ட 
இந்திரனும் ஜெய ஜெய சேனாபதியே என்று ஆரவாரம் செய்யவும், 
போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால் பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும்,
நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் 
அவனது குடலைக் கீறித் தின்னவும்,
 சண்டை செய்த பல தோள்களை உடையவனே,
 மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம் போன்று பரவி வரும்
 காவேரி ஆறு சூழ்ந்த குளிர்ந்த வயலூரில்* 
உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.









முருகா சரணம் !
கந்தா சரணம் !
வடிவேலா சரணம் !





அன்புடன்,
அனுபிரேம்

1 comment:

  1. அரி மரு - பாடலைப் படிப்பதற்குள் நாக்கு சுளுக்கிக்கொள்ளும் போலிருக்கிறதே

    பதிவு அருமை. வயலூர் முருகன் கோவிலைப் பற்றி நிறைய அறிந்துகொண்டேன்

    ReplyDelete