15 October 2022

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்.

 திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 95 திவ்ய தேசம். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.

 



மூலவர் : சத்தியமூர்த்தி

 உற்சவர் : அழகியமெய்யர்

 தாயார் : உஜ்ஜிவனதாயார்

 தல விருட்சம் : ஆல மரம்

 தீர்த்தம் : சத்ய புஷ்கரணி

   திருமயம் மலைச் சரிவில்  குடைவரைக் கோயில்களாக, இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. 






தலபெருமை:

     இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துடன்  நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சத்தியமூர்த்தி பெருமாள் பெயரால் இத்தலம் சத்ய சேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள் திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.

 இத்திரு உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.

பெருமாளின் பங்கையற் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார்.

சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லபுரச் சிற்பங்கள் போல் மலையை குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும் கலையுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. 7ம் நூற்றாண்டுக் குடவரைக்கோயில் சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.  

     





  தல வரலாறு:

     ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.

அது கண்டு அஞ்சி பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.

பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷ ஜவாலையை கக்கி விரட்டி விடுகிறார். பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில், பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு.

இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.  











 

ஆதிரங்கம்,  சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

 இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன.  சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.


சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.






தாயார் உஜ்ஜீவனத்தாயார்

இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. 

       



சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.

 கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.




தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.

இத்திருக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில். 

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 95 திவ்ய தேசம். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று.






1660.   

அருவி சோர் வேங்கடம்*  நீர் மலை என்று வாய்- 

வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

பெருகு சீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 

உருகினாள்*  உள் மெலிந்தாள் இது என் கொலோ!  (2)



1852.   

சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*

நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-

உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கி, உண்*

விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.



2016.   

மை ஆர் கடலும்*  மணி வரையும், மா முகிலும்,* 

கொய் ஆர் குவளையும், காயாவும்*  போன்று இருண்ட*

மெய்யானை மெய்ய மலையானை*  சங்கு ஏந்தும் 

கையானை கை தொழா*  கை அல்ல கண்டாமே.














ஸ்ரீ சத்திய மூர்த்தி பெருமாள் திருவடிகளே சரணம்...


அன்புடன்

அனுபிரேம்💖💖💖

4 comments:

  1. நீங்கள் இங்கு சென்றிருக்கிறீர்களா? இதுபற்றி ஒரு சிற்பப் பதிவு விரைவில் போடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போன தீபாவளி சமயத்தில் சென்றோம்

      Delete
  2. நிறைய தடவைகள் தஞ்சையிலிருந்து திருமயம் வழியே புதுக்கோட்டை செல்லும்போதெல்லாம் மலையைப்பார்த்தவாறே சென்றதுண்டு. ஆனால் கோவிலுக்குச் சென்றதில்லை.
    இன்று தான் இந்தக்கோவில் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறீர்கள். புகைப்படங்கள் எல்லாம் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. முடியும் போது இங்கு சென்று வாருங்கள் அக்கா ...அருமையான இடமும் , கோவிலும் இன்னும் மலை மேல் கோட்டை உள்ளது ...நாங்கள் அங்கு செல்லவில்லை அங்கு சென்றால் திருக்கோஷ்டியூர் செல்ல முடியாது என்பதால் கோவிலுடன் வந்துவிட்டோம்

      Delete