ஓம் சரவணபவ
முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
சூரபத்மனின் -- ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.
சூரபத்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது.
அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.
கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர்
செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2
ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே, தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக் கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான், திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..
அருள்மிகு கந்தசுவாமி (முத்துக்குமாரசுவாமி) திருக்கோயில் ,கந்தகோட்டம், சென்னை....
சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 3
சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட), நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய, புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி, ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்) கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த, குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பெண்ணுக்கு. ..
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்
முருகா சரணம் !
கந்தா சரணம் !
வடிவேலா சரணம் !
அன்புடன்,
அனுபிரேம் 💞💞💞💞
No comments:
Post a Comment