08 October 2022

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் 

சிவகங்கையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது .  

 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம்.




மூலவர் : ஸ்ரீ உரகமெல்லணையான்

உற்சவர்  : சௌமியநாராயணர்

தாயார் :  திருமாமகள் நாச்சியார்

தீர்த்தம் : தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கோட்டியூர்


 

தல சிறப்பு -

       இங்கு மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. சுவாமி ராமானுஜர் அனைவரும்  நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.  

 

தல வரலாறு -

       பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். 

ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். 

இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. 


மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி  வேண்டினர். 

சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது 




தலபெருமை: 

      

சவுமிய நாராயணர் சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி 

மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, 

கதம்ப மகரிஷி, 

பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

 அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். 

இவருக்கு "பிரார்த்தனை கண்ணன்' என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.


மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.


பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.










சுவாமி ராமானுஜருக்கு உபதேசம்: 

இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, "யார்?' என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,'' என்றார். 

நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, "நான் செத்து வா!' என்றார். 

புரியாத சுவாமி ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை சுவாமி ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற சுவாமி ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். 
அவரை அழைத்த நம்பி,  "ஓம் நமோநாராயணாய' என்ற மந்திர உபதேசம் செய்தார். 

மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆனால், சுவாமி ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார்.

 கோபம் கொண்ட நம்பி, சுவாமி ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் சுவாமி  ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். 

மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்' என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார். சுவாமி ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. 

இந்த வீடு "கல்திருமாளிகை' என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, சுவாமி ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.








தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர்.

 "ஓம்', "நமோ', "நாராயணாய' 

எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), 

முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), 

இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),

 மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.


 சவுமியநாராயணர்  சயன கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.  ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க,  பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார்.

     பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திரு மால் பெயர் கொள்கிறார். 

பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது

     அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடியும்.

     





 திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். 

பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர்.









பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோவில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.







மகாமக கிணறு: 

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.




அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.







கோவிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன்-சீதை – லட்சுமணன்-அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள்.

அடுத்து, சக்கரத்தாழ்வார் அருள் தரிசனம் நல்குகிறார்.

 சற்றுப் பக்கத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகுற காட்சியளிக்கிறார். இதே தோற்றத்தையும், கிருஷ்ணனின் இன்னும் பல அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். 

இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். 








13.   

வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்* 

கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 

கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)


   

14.   

ஓடுவார், விழுவார்*  உகந்து, ஆலிப்பார்*

நாடுவார், நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*

ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே



15.   

பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*

காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-

வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே







எங்கள் எம் இறை 

1838

எங்கள் எம் இறை, எம் பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-

தங்கள் தம் மனத்துப்*  பிரியாது அருள் புரிவான்,*

பொங்கு தண்அருவி, புதம், செய்ய*  பொன்களே சிதற இலங்கு ஒளி,*

செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   



1839   

எவ்வ நோய் தவிர்ப்பான்*  எமக்கு இறை, இன் நகைத் துவர் வாய்,*  நிலமகள்--

செவ்வி தோய வல்லான்*  திரு மா மகட்கு இனியான்,*

மௌவல் மாலை வண்டு ஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-

தெய்வம் நாற வரும்*  திருக்கோட்டியூரானே. 


 

1840  

வெள்ளியான், கரியான்*  மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை,*  எமக்கு-

ஒள்ளியான், உயர்ந்தான்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

துள்ளு நீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 

தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.


ஸ்ரீ சௌமியநாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்...

அன்புடன்
அனுபிரேம்💖💖💖

7 comments:

  1. நிறைய விவரங்களோடு கூடிய, படங்களுடன் கூடிய பதிவு. இந்த யாத்திரை போயிருந்தீங்களா?

    ராமானுஜர், ரஹஸ்ய அர்த்தங்களைத்தான் பெற்றுக்கொண்டு, தன்னுடைய சிஷ்யர்களுக்கு, நரசிம்ஹர் சன்னிதியில் வைத்து விளக்கினார். ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம்கூட அவருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? என்று அவரது வரலாறு புத்தகத்திலும், பிற பெரியவர்கள் சொல்லியதிலும் நான் அறிந்துகொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போன தீபாவளிக்கு ஊருக்கு சென்ற பொழுது திருமெய்யம் , பிள்ளையார்பட்டி , திருக்கோஷ்டியூர் காணும் பாக்கியம் கிடைத்தது ...

      புது வருஷ பிறப்புக்கு சென்னை சென்ற பொழுது பார்த்தசாரதி பெருமாள் , திருவிடந்தை சென்றோம் ...



      வாய்ப்பு கிடைக்கும் போது அங்கு அங்கு செல்வது தான் ..மகன் இந்த ஆண்டு 11ம் வகுப்பு அதனால் விடுமுறை என்பது அரிதிலும் அரிது ..

      Delete
    2. தற்பொழுதும் தசரா விடுமுறைக்கு திருச்சி சென்றதால் தான் மிக தாமதமான மறுமொழி ..

      ஆனால் இந்த முறை ஸ்ரீரங்கம் சென்றோம் அதுவும் தாயார் திருவடி சேவை கிடைத்தது பரவச நேரம் ...

      Delete
  2. ரஹஸ்யார்த்தங்களுக்காக இராமானுசரை 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடக்க வைத்த திருக்கோஷ்டியூர் நம்பி, இராமானுஜருக்கு கொள்ளிடக்கரையில் ஒரு நன்மை செய்தார். என்னவென்று தெரியுமா?

    ReplyDelete
    Replies


    1. இது தீர்மானம். கேவலம் இந்த உடலம் இருப்பதும் இயங்குவதும் அல்லவா அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்கிறது? இயக்குபவன் அரங்கனே என்பதை எண்ணிப் பாராதிருந்து விட்டார்கள். செய்வது அனைத்தும் அவனுக்குத்தான். செய்ய வைப்பதும் அவனேதான். எனில் கலந்த விஷம் யாரைச் சென்று தாக்கும்?அரங்கப் பெருமானே, அவர்கள் தெரியாமல் பிழை புரிந்து விட்டார்கள். தண்டித்து விடாமல் இரு. பிராயச்சித்தமாக நான் இருக்கிறேன் உபவாசம்.

      அது மழை மேகம் நிகர்த்த பெருங்கருணையின் மௌன வெளிப்பாடு. யார் என்ன சொன்னாலும் கேளாத திட சித்தத்தின் தீவிரம் அன்று அவர்களுக்குப் புரிந்தது.'இல்லை. இப்படியே விட்டால் உடையவர் நமக்கு இல்லாமல் போய்விடுவார். உபவாசம் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பருக்கைச் சோறு கூட உள்ளே போகவில்லை. இது ஆபத்து. பெரிய ஆபத்து. ஏதாவது செய்தாக வேண்டும்!' என்றார் பெரிய நம்பி.


      'ஒரு மாதம் கடந்து விட்டதா! எம்பெருமானே, இதென்ன விபரீதம்?' என்று அங்கே திருக்கோட்டியூரில் துடித்து எழுந்தார் குருகேசப் பிரான்.'இதற்குமேல் பொறுத்திருக்க இயலாது. கிளம்புங்கள்!' என்று தமது சீடர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு அந்தக்கணமே வெளியே பாய்ந்து விட்டார்.
      ராமானுஜரைப் பார்க்க திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டிருக்கிறார் என்னும் தகவல் அவர் வந்து சேருமுன் திருவரங்கத்தை எட்டிவிட்டது.

      'நம்பிகள் மிகவும் வயதானவர். அவர் எதற்கு என்னைக் காண வர வேண்டும்? அபசாரம்!' என்று ராமானுஜர் துடித்துப் போனார். ஆனால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.'வரட்டும். அவர் சொன்னாலாவது கேட்கிறாரா பார்ப்போம்!' என்று முதலியாண்டான் உள்ளிட்ட சீடர் குழாம் அமைதியாக இருந்தது.ராமானுஜரால் அப்போது எழக்கூட முடியவில்லை. உடல் முற்றிலும் துவண்டு ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தார். கண்கள் இருண்டு, நரம்புகள் தளர்ந்து விட்டிருந்தன.

      பேச்சில்லை. செயல் இல்லை. அசைவும் இல்லை. மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்தார். எந்தக் கணத்திலும் அது நின்று போகலாம் என்னும் அபாயம் அரங்க நகர் முழுதும் அறிவிக்கப்பட்டிருந்தது.என்ன நிகழப் போகிறதோ என்று அத்தனை பேரும் மனத்துக்குள் அலறிக் கொண்டிருந்தபோது யாரோ ஓடி வந்து சொன்னார்கள், 'திருக்கோட்டியூர் நம்பி ஆற்றைக் கடந்து விட்டார்.

      காவிரிக் கரையோரம் அவரது கோஷ்டி வந்து கொண்டிருக்கிறது.'எங்கிருந்துதான் அந்த பலம் அவருக்கு வந்ததோ. சட்டென்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார் ராமானுஜர். 'புறப்படுங்கள். ஆசாரியரை நாம் எதிர்கொண்டு வரவேற்க வேண்டும்!'சீடர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, காவிரி மணல் படுகையில் திருக்கோட்டியூர் நம்பியை ராமானுஜர் பார்த்துவிட்டார்.

      'சுவாமி…!' என்று ஓடோடிச் சென்று தடாரென்று அப்படியே அவர் காலில் விழுந்தார்.அது உச்சிப் பொழுது. வெயில் அடித்து வீழ்த்திக் கொண்டிருந்த சமயம். வெறுங்காலுடன் ஆற்று மணல் வெளியில் ஓடிய ராமானுஜர் தமது மெலிந்த தேகத்தை அப்படியே சுடுமணலில் கிடத்தி சேவித்துக் கொண்டிருந்தார்.எழுந்திரு என்று ஆசாரியர் சொல்லாமல் எழுந்திருக்க முடியாது.

      அது மரியாதை இல்லை. ஆனால் இந்தத் திருக்கோட்டியூர் நம்பி ஏன் வாய் திறக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார்?சீடர்கள் துடித்தார்கள். என்ன வெயில், எப்பேர்ப்பட்ட சூடு! ஆற்று மணலில் ஒரு மனிதர் விழுந்து கிடக்கிறார். எழுந்திரு என்று ஏன் இவர் இன்னும் சொல்லவில்லை? ஐயோ ஐயோ என்று அவர்கள் மனத்துக்குள் அலறிக் கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் கேட்டது.

      'இது தகாது நம்பிகளே! உபவாசத்தால் அவர் ஏற்கெனவே மெலிந்து கருகி விட்டிருக்கிறார். நீங்கள் இப்படி வெயிலில் இட்டு வாட்டிக் கொண்டிருப்பது அராஜகம்!' என்று கூவியபடி சட்டென்று ராமானுஜருக்கு அருகே தான் படுத்துக்கொண்டு அவரை அப்படியே துாக்கித் தன்மீது போட்டுக் கொண்டான் அவன்.அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். யார், யார் என்று கூட்டம் முண்டியடித்து எட்டிப் பார்த்தது.அவன் கிடாம்பி ஆச் சான். பெரிய திருமலை நம்பியின் துாரத்து உறவினன்.

      அவர்தான் ஆச்சானை ராமானுஜரிடம் சென்று சேரச் சொல்லி அனுப்பி வைத்தவர்.செயல் சரியானதுதான். ஆனால் கோபக்காரப் பெரியவரான திருக்கோட்டியூர் நம்பி இதனை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்?திகிலுடன் அவர்கள் நம்பியைப் பார்த்தபோது அவர் முகத்தில் மிகச் சிறிதாக ஒரு புன்னகை விரிந்தது.

      'வாரும் கிடாம்பி ஆச்சான்! உம்மைப் போல் ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். இந்தப் பெருங்கூட்டத்தில் உடையவரின் திருமேனி மீது யாருக்கு அதிகப் பரிவு உள்ளதென்று சோதித்துப் பார்க்க விரும்பித்தான் அவரை எழச் சொல்லத் தாமதித்திருந்தேன். உமது அன்பும் குரு பக்தியும் ஒப்பற்றதென இப்போது விளங்கிவிட்டது. உடையவருக்கு உணவிட நீரே சரியான நபர்!' என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்னதும் திடுக்கிட்டுப் பார்த்தார் ராமானுஜர்.

      Delete
  3. அந்தக் காலத்தில் குரு என்பவர், அவ்வளவு கடுமையாக இருந்திருக்கிறார், சிஷ்யர்களிடத்தில், அன்பு மனதில் இருந்தபோதும்

    ReplyDelete
  4. தல வரலாறும் படங்களும் மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete