01 October 2022

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை.

 அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில்

 சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ளது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது

கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.

ஆண்டு முழுவதும் “கல்யாண” கோலத்தில் காட்சி தருபவர்  “திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள்”.

 
மூலவர் -  நித்ய கல்யாணர், லட்சுமிவராகப்பெருமாள்

 உற்சவர் - நித்யகல்யாணப்பெருமாள்

 அம்மன்/தாயார் - கோமளவல்லித்தாயார்

 தல விருட்சம் - புன்னை, ஆனை

 தீர்த்தம் - வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

  புராண பெயர் - வராகபுரி, திருவிடவெந்தை


ஸ்ரீ ஆதிவராகர்

ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று.

இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார்.

பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேஷன் உள்ளார்.

திருவிடந்தை ஸ்தல வரலாறு

   

  திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். 

பலி மறுத்து விட்டான். 

இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். 

அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். 

இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.


சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள்.

ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், நீ திருமணமாகதாவள், எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி, அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள்.

இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார்.

அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள்.

தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. 

ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான். 

அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். 

கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். 

திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.  
 
  இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் கல்யாண விமானம். இப்பெருமாளை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.

தலபெருமை:

     இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

நித்யகல்யாண பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தல பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது. திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு. 

360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது. 360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர்.

இங்கு தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று திருநாமம். அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம். 

இங்குள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லி தாயாரை இடது தொடையில் தாங்கி கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. 


1108.   

திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*

நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 

உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   1109.   

துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 

குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 

இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!1110.   

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*

என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.ஸ்ரீ நித்ய கல்யாணபெருமாள் திருவடிகளே சரணம்...

அன்புடன்
அனுபிரேம்💖💖💖

1 comment:

  1. இந்தக் கோவிலுக்கு மூன்று வருடத்திற்கு முன்பு சென்றிருக்கிறேன். அப்போது மூலவரை தரிசனம் செய்யமுடியவில்லை (பாலாலயம்). இரண்டு அனுபவங்கள். கோவிலில் இருந்த அர்ச்சகர், நாங்கள் திரும்பும்போது ஓஎம்.ஆர் ரோடில் ஒரு உணவகத்தில் சாப்பிட உட்கார்ந்தபோது, தன் குடும்பத்துடன் அங்கு அவர் சாப்பிட வந்திருந்தது. இரண்டாவது, கோவிலின் வெளியே, குறவர் இனத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி 'குறி சொல்றேன்' என்று சொன்னபோது, அவளின் ஏழ்மையை நினைத்து, குறிலாம் வேண்டாம் என்று 300 ரூபாய் கொடுத்தேன். அவளோ, ஏதோ குறி சொல்லிவிட்டு, நரிக்கொம்பு வாங்கிக்கோங்க என்று ரொம்பவே ப்ரெஷர் பண்ணி சீன் போட்டுவிட்டாள். ஏண்டா இரக்கப்பட்டோம் என்று ஆகிவிட்டது.

    பதிவில் உள்ள ப்ரபந்தம், சமீபத்தில் எனக்கு சந்தை ஆனது.

    ReplyDelete