03 December 2022

30 ."கடித்து பெற்றேனோ திருமங்கையாரைப் போலே"

  30 ."கடித்து பெற்றேனோ திருமங்கையாரைப் போலே"





சோழ நாட்டில் திருவெள்ளக்குளம் என்ற ஊரில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் தேவலோகத்திலிருந்து சில பெண்கள் தினமும் இரவு குளத்தில் நீராடிவிட்டு விடியற்காலை தேவலோகத்துக்குச் சென்றுவிடுவார்கள். 

ஒரு நாள் பெண்களில் ஒருத்தி அங்கே தங்கிவிட்டாள்.

விடியற்காலை வைசியன் ஒருவன் அந்தப் பக்கம் வந்தபோது ஒரு பெண் குமுத மலரோடு இருந்தாள். அந்த வைசியனுக்குக் குழந்தை கிடையாது. அந்தப் பெண்ணை ‘குமுதவல்லி’ என்று பெயர் சூட்டி மகிழ்ச்சியுடன் அந்தக் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று பரிவுடன் வளர்த்தான். 


குமுதவல்லி வாழ்ந்த திருவெள்ளக் குளம் அருகிலிருந்த திருக்குறையலூரில் கள்ளர் குலத்தில் பிறந்தார் திருமங்கை ஆழ்வார். இவருடைய தாய் தந்தை இவருக்கு நீலன் என்று பெயர் வைத்தார்கள். சிறுவயது முதல் சிறந்த வீரராக இருந்தார். இவருடைய வீரத்தைப் பார்த்த அந்தத் தேசத்துச் சோழ அரசன் இவரைத் தன் சேனாதிபதியாக நியமித்தான். போரில் இவருடைய திறமையைக் கண்டு அதற்குப் பரிசாக மங்கை நாட்டுக்குக் குறுநில மன்னனாகவும் நியமித்தார். மங்கை நாட்டுக்கு மன்னன் அதனால் இவரை நாம் திரு மங்கை மன்னன் என்று கூப்பிடுகிறோம்.


திருமங்கை மன்னனுக்கு நான்கு உதவியாளர்கள். 

நீர்மேல் நடப்பான். 

நிழலில் ஒதுங்குவான். 

தாளூதுவான். 

தோலாவழக்கன் ....


இது அவர்களுடைய திறமைக்கு ஏற்றப் பெயர்கள். நீர்மேல் நடப்பான் என்பவன் நீரில் நடக்கும் திறமை பெற்றவன். நிழலில் ஒதுங்குபவன் யாருக்கும் தெரியாது மறைந்துகொள்பவன். தாளூதுவான் எந்த மாதிரி பூட்டையும் திறந்துவிடுவான். தோலாவழக்கன் என்பவன் எந்த வழக்கில் மாட்டிக்கொண்டாலும், ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துத் தப்பித்துவிடுவான்!


ஒரு நாள் ஆழ்வார் குமுதவல்லியைப் பார்த்தார். 

அழகில் மயங்கினார். 

ஆழ்வார் குமுதவல்லியிடம் “என்னைத் திருமணம் செய்துகொள்” என்றார். 

அதற்கு அந்தப் பெண் “நான் ஒரு வைணவரைத் தான் திருமணம் செய்துகொள்வேன்” என்றாள். திருமங்கை மன்னன் “நான் ஒரு வைணவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார்.


“ஓர் நல்ல வைணவ குருவிடம் இரண்டு தோள்களில் சங்கு சக்கரம் முத்திரை பெற்றுக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்ச சமஸ்காரம் என்பார்கள்” என்று பதில் கூறினாள்.

“ உடனே செய்துகொள்கிறேன்” என்றார் திருமங்கை மன்னன் புறப்பட்டார்.

மங்கை மன்னன் ஊரில் அலைந்து தேடினார். ஆனால் அவர்மீது இருந்த பயம் காரணமாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க யாரும் முன்வரவில்லை. மன்னன் திருநறையூர் கோயிலுக்குச் சென்றார் அங்கே பெருமாளிடம் “குமுதவல்லியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். உடனே பஞ்ச சமஸ்காரம் செய்துவை என்று மிரட்டினார். பெருமாளும் அவருக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்துவைத்தார்.


மங்கை மன்னன் நேராகக் குமுதவல்லியின் முன் வந்து நின்றார். தன் இரண்டு தோள்களையும் காட்டி பஞ்ச சமஸ்காரம் ஆகிவிட்டது திருமணம் செய்துகொள் என்றார். ஆனால் குமுதவல்லியோ “இன்னொரு நிபந்தனையும் இருக்கிறது” என்றாள்.

திருமங்கை மன்னன் “இன்னொரு நிபந்தனையா ? அது என்ன ?” என்றார்.

”ஓராண்டுக்கு, 1008 வைணவர்களுக்குத் தினமும் உணவு அளிக்க வேண்டும்!” என்றாள்.

அதற்கு  கலியன் “அதற்கு என்ன செய்தால் போச்சு” என்று கிளம்பினார்.


தினமும் ஆயிரத்தெட்டு திருமால் அடியார்களுக்கு உணவளிக்க ஆரம்பித்தார். அவருடைய செல்வம் அனைத்தும் செலவழிந்தது. அரண்மனை கஜானாவில் செல்வத்தை உபயோகித்தார். நிதிநிலை சரிந்தது. அடுத்து சோழ மன்னனுக்குக் கப்பங்கட்ட வைத்திருந்த செல்வத்தைச் செலவு செய்தார். சோழமன்னனுக்கு இது தெரியவந்தது. கோபம் கொண்டு படையை அனுப்பினான். அவர்களை எல்லாம் மங்கை மன்னன் விரட்டி அடித்தார்.


சோழ மன்னன் ஆழ்வாரைப் பேச்சு வார்த்தைக்கு வா என்று அழைத்து நயவஞ்சமகாகச் சிறையில் அடைத்தான். சிறையில் மங்கை மன்னனுக்குக் காஞ்சி வரதராஜ பெருமாள் கனவில் தோன்றி “சோழ அரசனை நமது இடத்துக்கு அழைத்து வா அவருக்கு வேண்டிய செல்வத்தை நான் தருகிறேன்” என்றார்.


மங்கை மன்னனும் சோழ மன்னனிடம் அனுமதிப் பெற்று காஞ்சீபுரம் சென்றார். அங்கே பெருமாள் கூறிய இடத்தில் தோண்ட பெரும் புதையல் கிடைத்தது. அப்புதையலை வைத்துக் கப்பம் கட்டியது போக மீதியை உணவு படைக்க எடுத்துக்கொண்டார். இந்த விஷயத்தை அறிந்த சோழ மன்னன் ஆழ்வாரிடம் ஓடி வந்து வணங்கிச் செல்வத்தைத் திருப்பிக் கொடுத்து அமுது படைக்கவைத்துக்கொள் எனக் கூறினார்.


புதையல் பணத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அடியார்களுக்கு உணவு படைக்க ஆரம்பித்தார் மங்கை மன்னன். விரைவில் அதுவும் தீர்ந்தது. 

மங்கை மன்னனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

வழிப்பறி கொள்ளையில் இறங்கினார். தன் உதவியாளர்களை வைத்து வழியில் யார் வருகிறார்கள் என்று வேவு பார்க்கச் சொல்லி, கொள்ளை அடித்து அடியார்களுக்கு உணவு அளித்துக்கொண்டிருந்தார்.


ஒரு நாள் உதவியாளர்கள் மங்கை மன்னனிடம் “இன்று ஊரில் திருமணம். திருமண கோஷ்டி இரவு இந்த வழியாக வரப் போகிறார்கள். வழிப்பறி செய்தால் நிறையச் செல்வமும் நகையும் கிடைக்கும்” என்று தகவல் கொடுத்தார்கள்.

அன்று இரவு நல்ல இருட்டு. மங்கை மன்னன் வழிப்பறி செய்வதற்காகச் சாலையில் புதர் ஒன்றில் பதுங்கிக் காத்துக்கொண்டு இருந்தார். புதுமணத் தம்பதிகள் பல்லக்கில் வர ஆழ்வார் வழிமறித்தார். கூட இருந்தவர்கள் எல்லாம் ஓடிவிடப் பல்லக்கில் புதுமணத் தம்பதிகள் மட்டும் மாட்டிக்கொண்டார்கள். 

உயர்ந்த ஆபரணங்கள் மின்னியது.

 அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பறித்து, துணியில் அவற்றைக் கட்டிக்கொண்டார். கிளம்பும் சமயம் மணமகன் விரலில் தங்க மெட்டி மின்னியது. இரண்டு சாப்பாட்டுக்கு உதவும் என்று அதையும் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்று பயந்துகொண்டு சொன்னான் அந்த மணமகன்.


ஆழ்வார் கழட்டினார் ஆனால் முடியவில்லை. 

குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மெட்டியை இழுத்து எடுத்தார். 

பையன் ”ஐயோ ! நீ எம் கலியனோ?” என்றான். 

கலியன் மெட்டியை மூட்டையில் சொருகிக்கொண்டு. தூக்கினார் ஆனால் மூட்டையை அசைக்க முடியவில்லை. “நீ ஏதோ மந்திரம் போட்டிருக்கிறீர் அது என்ன மந்திரம் என்று சொல்” என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பெருமானும்  “அருகே வா என்று அழைத்து அவர் ஆழ்வாரின் செவியில் எட்டெழுத்து மந்திரத்தை அவருக்குச் சொன்னார்”. மந்திரம் உபதேசம் பெற்ற பின் ஆழ்வாருக்குத் தம்பதிகள் மஹாலட்சியும், பெருமாளாகக் காட்சி கொடுத்தார்கள். 

ஆழ்வாரும் பேரானந்தத்துடன் பெருமாளையும், தாயாரையும் சேவித்தார்.


”பெருமாளை அதட்டி மிரட்டி விரலைக் கடித்து அவனிடம் செல்வத்தைப் பிடுங்க அவருக்குக் கிடைத்ததோ திருமந்திர உபதேசம் என்ற பெரும் செல்வம். நான் அப்படிப் பெறமுடியவில்லையே!, அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.







முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 5. வள ஏழ் உலகின்

எம்பெருமானின் சீலகுணம் 


 1 5 9


மாயோம்;  தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 

தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-

மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன், எவ் உயிர்க்கும்- 

தாயோன் தம்மான், என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே. 9

2951



சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 

தீர்ந்து, தன்பால் மனம் வைக்கத்  திருத்தி, வீடு திருத்துவான்*

ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 

நேர்ந்த உருவாய், அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே! 10

2952


மாலே! மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 

மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 

பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே. 11

2953








31. திருசெம்பொன் செய்கோயில்

ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார் ஸமேத ஸ்ரீ பேரருளாள ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment