05 December 2022

திருவண்ணாமலையில் ....

 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

முதல் நாள்  - வெள்ளி அதிகார நந்தி வாகனம்..... 


வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருள்மிகு அண்ணாமலையார்



உண்ணாமுலையம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் 






முதலாம் நாள் நிகழ்ச்சியாக அதிகார நந்தி வாகனத்தில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருவீதி  உலா வரும் நிகழ்ச்சி ....

தீபப்பெருவிழாவில் முதல் நாள் இரவு நடைபெறும்  இந்த அதிகாரநந்திக் காட்சி  வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ரிஷபத்தின் முகமும்  (காளையின் முகம்) சிவபெருமானின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். 

இவரை ஏன் 'அதிகார நந்தி' என்று அழைக்கிறார்கள்? இவர் எல்லோரையும் அதிகாரம் செய்பவரா? அதுதானில்லை... அகிலத்தையே காக்கும் ஈஸ்வரனை தானே சுமக்கும் அதிகாரம் பெற்றவர் என்பதே இதன் பொருள். 

சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

சிவாலயங்களில் கருவறைக்கு எதிரே இருக்கின்ற நந்தி பகவானை 'தர்ம விடை' என்றே  அழைக்கிறார்கள். அழிவே இல்லாமல் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நின்றது. 

ஈசன் சுவாசிக்கும் மூச்சுக்காற்று நந்தி தேவனுடையது. தர்மம்தான் இறையனாரின் சுவாசம். சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.  

நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.  


 

பாடல் எண் : 1

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே

ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே

நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.


4.  063. 1


பார்வதிபாகனே! மேம்பட்ட சோதியே! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே! மழுப்படையை ஏந்தியவனே! ஆதியே! தேவர்கட்குத்தலைவனே! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றிநினையேன்.



இரண்டாம் நாள் ---  அருணாசலேஸ்வரர்  வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளல்!









ஸ்ரீ  உண்ணாமலை அம்மன் உடனாய   அண்ணாமலையார் இந்திர விமானத்திலும்,

 ஸ்ரீ பராசக்தி அம்மன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீ  சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி  விமானங்களில் எழுந்தருளினர்.

இந்திரவிமானம் பற்றி மதுரைத் தலபுராணம் கூறுவது ---

விண்ணிழி விமானம்!  [இந்திர விமானம்]

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும்.  இது ஒரு “விண்கல்“.  விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.  ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை.  இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன்.  இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.   வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.  இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலைக் கட்டினான்.  தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.  எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.  இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.

இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.  அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை. மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.  இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.  

அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.  மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.  

சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும்.  எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்.  திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

இத்தகு சிறப்பு வாய்ந்த இந்திர விமானம் பல தலங்களில் செய்யப்பட்டு எம்பெருமான் எழுந்தருளும் வகையில் பெருவிழாக்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.








பாடல் எண் : 2

பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.

4.063.2

பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே! நீலகண்டனே! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே! தேவனே! தேவர்கள் தலைவனே! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன்.




தொடரும் ....

அண்ணாமலையார் திருவடிகளே சரணம் !!!

அன்புடன் 
அனுபிரேம் 🌸🌸🌸

1 comment:

  1. அழகிய படங்களோடு நிறைய தகவல்களுடன் எழுதப்பட்ட பதிவு. ரசித்தேன்

    ReplyDelete