11 March 2023

38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணர் போலே

38 . "அவன் மேனி ஆனேனோ திருப்பாணர் போலே"




கலிகாலம் பிறந்து 343வது வருடமான துர்மதி வருஷம், திருச்சி அருகே உள்ள நிசுளாபுரி எனும் உறையூரில் அயோனிஜராக திருப்பாணாழ்வார் தோன்றினார். வயலில் பயிர்களுக்கு நடுவே தோன்றிய திருப்பாணரை, பாணர் (பண்ணிசைத்து பாடுபவர்கள்) என்கிற குலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வளர்த்தால், இவர் ‘திருப்பாணர்’ ஆனார்.

சிறுவயது முதலே, பெருமாளிடம் ஞானத்தோடு கூடிய பக்தி இவருக்கு உண்டாயிற்று. தான் பாணர் குலத்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்லாமல், காவேரி தென்கரையில் நின்று கொண்டு வீணையை மீட்டி பாடி பெருமாளை அனுதினமும் மகிழ்வித்தார்.

திருப்பாணரை கோவிலுக்குள் அழைத்து வர விரும்பிய ஸ்ரீ ரங்கநாதன், அதற்கும் வழி செய்தான்.

 ஒரு நாள், என்றும் போல், திருப்பாணர் காவேரியாற்றின் கரையில் நின்று, தன்னிலை மறந்து, பெருமாளை எண்ணி பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக குடத்தை எடுத்துக்கொண்டு லோகசாரங்க மாமுனிவர் அங்கு வந்தார். 

இவரைக் கண்டவுடன் ‘தூரப்போ!’ என்றார். ஆனால், பக்தியில் தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த திருப்பாணருக்கு அம்முனிவர் சொன்ன சொல் காதில் விழவில்லை.

முனிவரும் கோபமுற்று ஒரு கல்லை எடுத்து திருப்பாணர் மேல் வீசினார். 

அந்தக் கல் இவர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. 

பின்னர் சற்று நேரம் கழித்து மெதுவாக திருப்பாணாழ்வார் கண்விழித்துப் பார்த்தார். நடந்ததை தெரிந்து கொண்டார். ஏதும் கூறாமல், வழி விட்டுச் செல்ல, திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு பெரிய பெருமாளின் சந்நதிக்குள் சென்றார் லோகசாரங்க மாமுனிவர்.

அங்கு பெருமாளின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு லோகசாரங்கர் அதிர்ந்தார்.

திகைத்து நின்ற மாமுனிவரைப் பார்த்து, ‘‘என் அருமை பக்தனை இப்படி கல்லால் அடிக்கலாமா? என்னைக் குறித்து கானம் செய்து பக்தியில் திளைத்த யாவருமே என் அடியார்கள் அல்லவா? அப்படிப்பட்ட திருப்பாணரை ஏன் கல்லால் அடித்தீர்?!’’ என்று கோபத்தோடு கேட்டார் பெருமாள்.

லோகசாரங்க முனிவர் மிகவும் வருந்தினார். 

பெருமாள் உடனே லோகசாரங்க மாமுனிவரிடம் பாணரைத் தம் சந்நதிக்கு அழைத்து வருமாறும், அவரை எப்படி அழைத்து வரவேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார்.

 மறுநாள் காலை, எம்பெருமானின் நியமனத்தை சிரமேற்கொண்டு முனிவர் முதலில் திருக்காவேரியில் நீராடினார். கைகளை கூப்பிக் கொண்டே, வீணையுடன் பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை நோக்கிச் சென்றார். 

நேற்று நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி நின்ற லோகசாரங்க மாமுனிவர், திருப்பாணரிடம், ‘‘நம்பெருமாள் தங்களை ஸ்ரீரங்கத்து கோவிலுக்குள் கொண்டு வரவேணும் என்று அடியேனை நியமித்திருக்கிறார்’’ என்று விண்ணப்பம் செய்தார்.

பதறிப்போன திருப்பாணாழ்வார், தன்னுடைய குலத்தைக் கருதி, "திருவரங்க பெருநகரை அடியேன் எப்படி மிதிப்பது?" என்று தயங்கி பின் வாங்கினார். 

லோகசாரங்க மாமுனிவர் உடனே, ‘‘அப்படியானால் அடியேனுடைய தோளின் மேல் எழுந்தருளும். நம்பெருமாளை தரிசிக்கலாம்! இது நம்பெருமாளின் கட்டளை!’’ என்றார்.


திருப்பாணாழ்வர் முடியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, லோகசாரங்கர் தனது தோளில் சுமந்து செல்ல ஆரம்பித்தார். தனது திருத்தோள்களில் திருப்பாணரை சுமந்து கொண்டு திருவரங்க கோயிலில் இருக்கும் அழகிய மணவாள திருமண்டபத்திற்குள்ளே புகுந்தார் முனிவர்.

 திருப்பாணாழ்வாருக்கு நம்பெருமாள் தன்னுடைய திவ்ய மங்கள சொரூபத்தைக் காட்டியருளினார். திருப்பாணாழ்வாரும் திருவடி முதல் திருமுடிவரை பெருமாளைக் கண்ணாரக் கண்டு அனுபவித்தார்.

உடனேயே, ‘அமலனாதி பிரான்’ எனும் திவ்ய பிரபந்தமாக பெருமாளின் அடிமுதல் முடிவரை, தான் அவரது அங்கலக்ஷணத்தை ரசித்த அனுபவத்தை உலகு உய்ய வெளியிட்டருளினார்.

பத்துப் பாசுரங்களை பாடி முடித்த திருப்பாணாழ்வார், கடைசிப் பாசுரத்தில் "அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே" என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தார். அரங்கனின் திருவக்ஷஸ்தலத்தில் மாலையாக மாறி ஜொலித்தார்.

“திருப்பாணாழ்வார் போல் பண்ணிசைத்து பெருமாளின் புகழ் பாடி, எம்பெருமானின் கருணைக்கு இலக்காகி அவன் பாதங்களில் ஒன்றென கலந்தேனா? இல்லையே, பிறகு ஏன் நான் இங்கிருக்க வேண்டும்? கிளம்புகிறேன்" என்று சொல்கிறாள் பெண்மணி.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1-7 பிறவித்துயர் அற 
ஆராதிப்பார்க்கு  மிக எளியவன் 

விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 

நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 

விடவே செய்து*  விழிக்கும் பிரானையே. 5

2969



பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 

விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*

மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 

இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?    6

2970






39. திருப்பார்த்தன்பள்ளி

ஸ்ரீ தாமரைநாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள்கேள்வன் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment