30 March 2023

திவ்ய பிரபந்த பாசுர ராமாயணம்....

ஸ்ரீ சென்ன கேசவபெருமாள் திருக்கோயில்,சென்னை 

ஸ்ரீ ராமநவமி உத்ஸவம்-- ஸ்ரீ பெருமாள் திருமஞ்சன ஸேவை..










நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து சொற்றொடர்களைத் தொகுத்து சுவாமி பெரியவாச்சான் பிள்ளை இயற்றியது இந்த  திவ்ய பிரபந்த பாசுர ராமாயணம்.


பாசுர ராமாயணம்


பால காண்டம்


திரு மடந்தை, மண் மடந்தை இரு பாலும் திகழ,

நலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில்,

அந்தமில் பேரின்பத்து அடியரொடு,

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்,

அயர்வரும் அமரர்கள் அதிபதியான,

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்,

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்,

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்,

நல் அமரர் துயர் தீர,

வல்லரக்கர் வாழ் இலங்கை பாழ் படுக்க எண்ணி,

மண் உலகத்தோர் உய்ய,

அயோத்தி எனும் அணி நகரத்து,

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்,

கௌசலை தன் குல மதலையாய்,

தயரதன் தன் மகனாய்த் தோன்றி,

குணம் திகழ் கொண்டலாய்,

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து வந்து,

தனை எதிர்த்த தாடகை தன் உரம் கீண்டு,

வல்லரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கி,

காரார் திண் சிலை இருத்து,

மைதிலியை மணம் புணர்ந்து,

இருபத்து ஒரு கால் அரசு களை கட்ட,

மழுவாளி வெவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு,

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி,

அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க,


அயோத்யா காண்டம்

கொங்கைவன் கூனி சொல் கொண்ட

கொடிய கைகேயி வரம் வேண்ட,

அக்கடிய சொல் கேட்டு

மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய

‘குலக்குமரா காடுறையப்போ’ என்று விடை கொடுப்ப,

இந்நிலத்தை வேண்டாது

ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து,

மைவாய களிறொழிந்து மா ஒழிந்து தேரொழிந்து,

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மானமரும் மென் நோக்கி வைதேவியின் துணையா

இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல,

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,

பக்தி உடைக் குகன்கடத்த கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு காயோடு நீடு கனி உண்டு

வியன் கான மரத்தின் நீழல்

கல் அணைமேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப, தயரதன் தான்

‘நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என் பெற்றாய் கைகேசி?

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்’

என்று வான் ஏற,

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள்

அணி கொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன் பரத நம்பி பணிய

தம்பிக்கு மரவடியை வான்பணயம் வைத்துக் குவலயத்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து

திருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய் தண்டகாரண்யம் புகுந்து


ஆரண்ய காண்டம்

மறை முனிவருக்கு ‘அஞ்சேல்மின்!’ என்று அருள் கொடுத்து

வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்து

வந்தமிழ் மாமுனி  கொடுத்த வரிவில் வாங்கி

புலர்த்தெழுந்த காமத்தால்

சுடுசினத்துச் சூர்ப்பனகா 

பொன்னிறம் கொண்ட 

  சீதைக்கு நேர் ஆவன் என்றுவரக் ,

கொடி மூக்கும் காதிரண்டும்

கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து,

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்க,

அவள் கதறித் தலையில் அங்கை வைத்து

மலை இலங்கை ஓடிப்புக,

கொடுமையின் கடுவிசை அரக்கன்

அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்

ஓருருவாய மானை அமைத்து

செங்கல் பொடிக்கூரை சிற்றெயிற்று

முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து

இலைக்குரம்பில் தனி இருப்பில்

கனிவாய்த் திருவினைப் பிரித்து

நீள்கடல் சூழ் இலங்கையில்

அரக்குர் குலத்துக்கு நஞ்சாகக் கொண்டுபோய்

வம்பு உலாம் கடிகாவில் சிறையாய் வைக்க

அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று

அலைமலி வேற் கண்ணாளை அகன்று தளர்வெய்தி

சடாயுவை வைகுந்தத்தேற்றிக்

கங்குலும் பகலும் கண்துயில் இல்லா

கானகம் படி உலாவி உலாவி

கணை ஒன்றினால் கவந்தனை மடித்து

சவரி தந்த கனி உவந்து


கிஷ்கிந்தா காண்டம்

வனமருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு

மராமரம் ஏழ் எய்தி

உருத்து எழு வாலி மார்பில்

ஒரு கணை உருவ ஓட்டிக்

கருத்துடைத் தம்பிக்கு

இன்பக் கதிர் முடி அரசளித்து

வானரக்கோனுடனிருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைகருமம் திருத்தி,

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூதுரைத்தல் செப்ப!


சுந்தரகாண்டம்

சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி

மும்மதில் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்

வாராருமுலை மடவாள் வைதேவி தனைக்கண்டு

‘நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!

அயோத்திதனில் ஓர் இடவகையில்

எல்லிஅம் போது இனிது இருக்க 

மல்லிகைமாமலை கொண்டாங்கார்த்ததும்

கலக்கிய மாமனத்தினளாய்க் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மாமனத்தவனாய் மன்னவனும் மறாதொழிய

குலக்குமரா காடுறையப்போ என்று விடைகொடுப்ப

இலக்குமணன் தன்னோடங்கேகியதும்

கங்கை தன்னில்

கூரணிந்த வேல்வலவன் குகனோடு

சீரணிந்த தோழமை கொண்டதுவும்,

சித்திரகூடத்திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்,

சிறுகாக்கை முலைதீண்டி மூவலகும் திரிந்தோடி

வித்தகனே! ராமா ஓ!  நின்னபயம்!

என்ன அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்

பொன்னொத்த மானொன்று புகிந்தினிது விளையாட

நின்னன்பின் வழி நின்று சிலைபிடித்தேம்பிரான் ஏக

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்

ஈதவன் கை மோதிரமே என்றடையாளம் தெரிந்துரைக்க

மலர்க்குழலாள் சீதையும்

வில்லிறுத்தான் மோதிரம் கண்டு

அனுமன் அடையாளம் ஒக்கும் என்று

உச்சிமேல் வைத்துகக்க

திறல் விளங்கு மாருதியும்

இலங்கையர்கோன் மாக்கடிகாவையிறுத்து

காதல் மக்களும் சுற்றமும் கொன்று

கடி இலங்கை மலங்க எரித்து

அரக்கர்கோன் சினமழித்து மீண்டு

அன்பினால் அயோத்தியர்கோன்

தளிர்புரையும் அடியிணை பணிய


யுத்தகாண்டம்

கானஎண்கும் குரங்கும் முசுவும்

படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று

அலையார் கடற்கரை வீற்றிருந்து

செல்வ விபீடணர்க்கு நல்லனாய்

விரிநீர் இலங்கை அருளி,

சரண்புக்க குரை கடலை அடலம்பால் மறுக எய்து

கொல்லைவிலங்கு பணிசெய்ய

மலையால் அணைகட்டி மறுகரை ஏறி

இலங்கை பொடியாக,

சிலைமலி செஞ்சரங்கள் செல உய்த்துக்

கும்பனொடு நிகும்பனும் பட

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட

அரக்கர் ஆவி மாள, அரக்கர்

கூத்தர் போலக் குழமணி தூரமாட

இலங்கை மன்னன் முடி ஒருபதும்

தோள் இருபதும் போயுதிர,

சிலைவளைத்து சரமழை பொழிந்து

கரந்துணித்து வென்றி கொண்ட செருக்களத்துக்

கடிக்கமல நான்முகனும், கண்மூன்றத்தானும்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்

மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து

மணிமுடி பணிதர அடி இணை வணங்க

கோலத்திருமாமகளொடு

செல்வவீ டணன் வானரக்கோனுடன்

இலகுமணி நெடுந்தேர் ஏறி, சீரணிந்த குகனோடு கூடி

அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி எய்தி,

நன்னீராடிப் பொங்கிளவாடை யரையில் சாத்தித்

திருச்செய்ய முடியும் ஆரமும் குழையா

முதலா மேதகு பல்கலணிந்து

சூட்டு நன்மாலைகளணிந்து

பரதனும் தம்பி சத்துருக்கனனும்

இலக்குமணனும் இரவும் நண்பகலும் ஆட்செய்ய

வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை

மலர்க்குழலாள் சீதையும் தானும்

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்

தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.


ஸ்ரீராமஜெயம்






 பெரிய திருமொழி
10 -3. ஏத்துகின்றோம் 
இராமாவதார ஈடுபாடு 



வென்றி தந்தோம்; மானம் வேண்டோம்*  தானம் எமக்காக*

இன்று தம்மின் எங்கள் வாழ் நாள்*  எம் பெருமான் தமர்காள்*

நின்று காணீர் கண்கள் ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*

குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே       5

1872





கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-

அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*

வெல்லகில்லாது அஞ்சினோம் காண்*  வெம் கதிரோன் சிறுவா,* 

கொல்ல வேண்டா; ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  6

1873

























ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



அன்புடன் 
அனுபிரேம் 💖💖

No comments:

Post a Comment