03 March 2023

ஸ்ரீ குலசேகராழ்வார்

இன்று ஸ்ரீ  குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்

'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய 'சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.






குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம்   தன்னில் வாழ வந்தோன் வாழியே
மாசிதனில்  புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே
அஞ்சலெனக்   குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே







குலசேகராழ்வார்

பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம்   - திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம்  - மாசி

திருநட்சத்திரம் - புனர்பூசம்

வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம் -  திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்




குலசேகரர் தம் அரசவையில், தினமும் ஶ்ரீராமாயணம் படிக்கவும்/வியாக்யானம் செய்யச் சொல்லியும் கேட்பார். இதிகாசத்தில் ஶ்ரீ ராமரை எதிர்த்துப் போரிட, 14000 கர தூஷணர்கள் வந்த செய்தி கேட்ட ஆழ்வார், நெஞ்சம் பதைத்துவிட்டார்.

ராமருக்கு உதவ தம் படைகளைத் திரட்டி உடனே புறப்பட வேண்டும் என்று தம் படைத்தளபதிக்கு உத்தரவிட்டார். கதைசொன்னவர்/அமைச்சர்கள் எல்லோரும் அவரிடம் 'இது நடந்து முடிந்த கதையே. பல லட்சம் ஆண்டுகளுக்கே முன்னர் நடந்த இந்தப் போரை ராமர் அநாயாசமாக வென்றுவிட்டார். 'அவருக்கு எந்தத் துன்பமும் இல்லை' என்று சமாதானப் படுத்தினார்கள். பக்தி பாவத்தில் தன்னை மறந்து இராமாயண காலத்துக்கே சென்று விட்டார். அரங்கன் பக்தியில் தம்மை ஒரு 'பேயன்' பித்தன்' உன்மத்தன்' என்று பெருமாள் திருமொழி, மூன்றாம் பத்து முழுவதும் சொல்கிறார்.


ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழிக்கு, சுவாமி ராமாநுஜர் இயற்றிய தனியன்.

இன்னமுதும்  ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே !
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்-பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள், சேரலர்கோன் எங்கள்
குலசேகரன், என்றே கூறு


பச்சைக் கிளியே! உனக்கு இனிமையானதோர் அமிர்தம் உண்ணத் தருகிறேன்; அருகில் வா! தென் திருவரங்கத்தின் மீது, இனிமையான பாசுரங்களைப் பாடவல்ல, கல்யாண குணசாலியான பெருமாள் என்று போற்றப்படும், (விரும்புதற்குரிய வில் போன்ற புருவத்தையுடைய மாதர்கள் மனம் விரும்பும்) சேரர்களின் மன்னர், எங்கள் பிரபந்த குலத் திலகமான குலசேகராழ்வார், என்று இதையே நீ சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.






பெருமாள் திருமொழி
5. தரு துயரம் 
வித்துவக்கோட்டு  அம்மானிடம்  சரண் அடைதல் 


தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 
அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)    1

688

          

கண்டார் இகழ்வனவே*  காதலன் தான் செய்திடினும்*
கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*
விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே 2

689

         
மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*
  என்-பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*
தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே  3

690
        

வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*
மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*
மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே 4

691 

          
வெங்கண்-திண் களிறு அடர்த்தாய்*  வித்துவக்கோட்டு அம்மானே*
எங்குப் போய் உய்கேன்?*  உன் இணையடியே அடையல் அல்லால்*
எங்கும் போய்க் கரை காணாது*  எறிகடல்வாய் மீண்டு ஏயும்*
வங்கத்தின் கூம்பு ஏறும்*  மாப் பறவை போன்றேனே 5

692 

        
செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்
அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*
வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே 6

693

         
எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*
மைத்து எழுந்த மாமுகிலே*  பார்த்திருக்கும் மற்று அவைபோல்*
மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்
சித்தம் மிக உன் பாலே*  வைப்பன் அடியேனே 7

694  

          
தொக்கு இலங்கி யாறெல்லாம்*  பரந்து ஓடித்* தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க*  மாட்டாத மற்று அவை போல்*
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
புக்கு இலங்கு சீர் அல்லால்*  புக்கிலன் காண் புண்ணியனே  8

695   

          
நின்னையே தான் வேண்டி*  நீள் செல்வம் வேண்டாதான்*
தன்னையே தான் வேண்டும்*  செல்வம் போல் மாயத்தால்*
மின்னையே சேர் திகிரி*  வித்துவக்கோட்டு அம்மா*
நின்னையே தான் வேண்டி*  நிற்பன் அடியேனே  9

696

          
வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்* 
மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்த*
கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன* 
நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2) 10

697



 


ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த நாள் பாசுரம்
(உபதேசரத்தினமாலை)


மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்
தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்












முந்தைய பதிவுகள்...
 


ஸ்ரீ குலசேகராழ்வார்  திருவடிகளே சரணம்....




அன்புடன்
அனுபிரேம் 💖💖💖



No comments:

Post a Comment