05 March 2020

குலசேகராழ்வார்

இன்று    குலசேகராழ்வார்    அவதார திருநட்சத்திரம் ..........

மாசி -புனர்பூசம்



குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே!
அணியரங்கர் மணத்தூணை அடைந்துஉய்ந்தோன் வாழியே!
வஞ்சிநகரந்  தன்னில் வாழவந்தோன் வாழியே!
மாசிதனில்  புனர்பூசம் வந்துஉதித்தான் வாழியே!
அஞ்சலெனக்   குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே!
அநவரதம் ராம கதை அருளுமவன் வாழியே!
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே!
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே






குலசேகராழ்வார்

பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம்   - திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம்  - மாசி

திருநட்சத்திரம் - புனர்பூசம்

வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம் -  திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்





குலசேகராழ்வார், எம்பெருமானுடைய அனந்த கல்யாண குணங்களாகிய பெருங்கடலில் ஆழ்ந்து நெஞ்சுருகி  ஈடுபட்டார்,

எம்பெருமானுடைய  ஸ்ரீ ராமாவதாரம் , கிருஷ்ணாவதாரங்களிலும் , அர்ச்சாவதாரங்களில் - திருவரங்கம், திருவேங்கடம், திருக்கண்ணபுரம், திருச்சித்திரகூடம், திருவித்துவக்கோடு முதலிய திவ்ய தேசத்து  எம்பெருமான்களிடத்தும்  ஆராத  காதல் கொண்டவராய்,

 ஸ்ரீ ராமாயண காலக்ஷேபத்தையே எப்பொழுதும் பொழுதுபோக்காகப்  பெற்றவராய்,

 ஸ்ரீவைஷ்ணவர்களைக்  கண்டால் எதிர்கொண்டழைத்து வந்து, விசேஷமாய் உபசரிக்கும் பாகவத நிஷ்ட்டையை  உடையவராய், அரச போகங்களில் பற்றற்று வாழ்ந்து வந்தார்.


 இவர் ஒருநாள் ஸ்ரீ ராமாயண காலஷேபம்  கேட்டு வருகையில்,

ஆரண்ய காண்டத்தில் "மூக்கறுந்த  சூர்ப்பணகையால் தூண்டப்பட்ட பதினாலாயிரம்  ராக்ஷஸர்கள் ஒருபுறமும் ,
ஒரு துணையுமில்லாத இராமபிரான் ஒருபுறமுமாகப்  போர்  தொடங்கிற்று" என்று ஸ்ரீராமாயணம் வாசிப்பவர் சொல்லக் கேட்டவுடன்,

ஸ்ரீராமாயணத்தில் தமக்குள்ள  அதிகமான ஈடுபாட்டாலே,

வெகுகாலத்திற்கு முன்பு நடந்த அந்த  சரித்திரத்தை அன்று தான் நடக்கின்றதாக  நினைத்து,
"இப்படி பெருமாள் பேராபத்திலே சிக்கியிருக்கும் போது, நாம் நம்மால் இயன்ற உதவியை செய்யவேணும்" என்று துணிந்து,

தமது சேனைகளையெல்லாம் போருக்கு  சித்தமாய் முன் செல்லும்படி நியமித்துத்  தாமும்  ஜன ஸ்தானத்தை நோக்கி புறப்பட்டார்.

அதுகண்ட  அனைவரும்  என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கையில், அதிநிபுணரான ஸ்ரீராமாயண பண்டிதர் , " ஸ்ரீராமபிரான் தாம் தனிவீரராக நின்று பதினாலாயிரம் அரக்கர்களையும் அழித்துப் பர்ணசாலைக்கு மீண்டு வர , அவரை  சீதாபிராட்டி களிப்புடன் வரவேற்றார்" எனும் செய்தியை எடுத்துக் கூற,

அதுகேட்ட ஆழ்வாரும்  பேரானந்தமடைந்து சேனையை திருப்பிக்கொண்டு, தாமும் பிரயாணத்தை நிறுத்தினார்.


அதுமுதல் ,ஸ்ரீ ராமாயண பண்டிதர் ராமனுடைய  வெற்றியைக் கூறும் ஸ்ரீராமயாண  பாகங்களையே  விரித்துரைத்தும்,  அவனுக்கு ஆபத்துவருமிடங்களில் சுருக்கியும்  உரைத்தார் .


ஒருநாள் அப்பண்டிதருக்கு  வேறொரு  காரியம் இருந்த படியால்,  ஸ்ரீ ராமாயணம் சொல்லத்  தான் வராமல் தமது குமாரரை  அனுப்பினார்.

அவர் குலசேகரருடைய   இயல்பினை அறியாமல் ராவணன் சீதையை எடுத்துப்  போன செய்தியை விரிவாக விளக்கினார்.

 அது செவிப்பட்டவுடன் குலசேகரர் மனம் கொதித்தது,

"நான் இப்பொழுதே விரைவில் சென்று கடல்கடந்து ராவணனை சுற்றத்தோடும், நண்பர்களோடும் போரில் தொலைத்து அன்னையை மீட்டு வருவேன்" என்று கூறி,

 தனது சேனையோடு இலங்கையை  நோக்கிப்  பயணமானார்.

 அப்போது விண்ணவரும் மண்ணவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கையில்,

ஆழ்வார் கடலளவும் சென்று கடலை நீந்திக்  கடப்பதற்காக இறங்கியவுடன்,

இவரது  அன்பு கண்டு உகந்த ஸ்ரீராமபிரான் ,

தாமே இலக்குவனோடும், மைதிலியோடும்   காட்சி தந்து,

அரக்கரை அழித்ததையும்  தேவியை மீட்டு வந்ததையும் கூறி, அவரைக்  கரையேற்றி  தலைநகருக்கு அனுப்பி மறைந்தருளினார்.





தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்
குழாம்குழுமித் திருப்புகழ்கள்பலவும்பாடி *
ஆராதமனக்களிப்போடு அழுதகண்ணீர்
மழைசோர நினைந்துருகியேத்தி நாளும் *
சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *
போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்
பூதலத்தில் என்றுகொலோபுரளும்நாளே?

9 655



வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய *
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழும்தொண்டர்வாழ *
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து * அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்
இசைந்துஉடனேஎன்றுகொலோஇருக்கும்  நாளே? (2)

10 656



திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *
கடல்விளங்குகருமேனியம்மான்தன்னைக்
கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால் *
குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்
கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த *
நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

11 657






ஓம் நமோ நாராயணாய நம!!
 குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம்...

5 comments:

  1. குலசேகராழ்வாரைப் பற்றிய வரலாற்றையும், பாடல் அடிகளையும் கண்டேன். அருமை.

    ReplyDelete
  2. படங்களும் தகவல்களும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  4. குலசேகர ஆழவார் ப்பற்றிய வரலாறு அற்புதம் பாடல்கள் பகிர்வு, படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  5. வரலாறும் படங்களும் நன்று.

    ReplyDelete