14 March 2020

ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் - " திருவடி தொழல் "

நம்பெருமாள் அழகு  7 -ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் - "திருவடி தொழல்"

முந்தைய பதிவுகள் .. 


5.நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்

6.நம்பெருமாள் அழகு  6 - திருக்கைத்தல சேவை மற்றும்  வேடுபறி உற்சவம்






இராப்பத்து - 10ம் நாள்

இன்று நம்பெருமாள் பாண்டியன்
கொண்டையுடன்,
கெளஸ்துபமணி ஒளிர காலை  புறப்பட்டு, பரமபத வாசல் வழியாக சந்திர புஷ்கரிணி க்கு எழுந்தருளுவார்.
பின் தீர்த்தவாரி கண்டருள்வார்.












நம்பெருமாள்  திருமஞ்சன சேவை















 நம்மாழ்வார் மோக்ஷம் - " திருவடி தொழல் "






அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. 
எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். 
இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, 
திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார். 


இராப்பத்துத் திருநாளில் (கடைசி நாளில்)   ஒவ்வொரு  ஆண்டும்,  நம்மாழ்வார் எப்படி மோட்சத்தை அடைந்தார் என்று  
நடத்திகாட்டப் படுகிறது.

அன்று நம்மாழ்வார் பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் முக்தன் வேடத்தில் இருப்பார்.
கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், 
பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளையாடை உடுத்தி, 
பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளிப்பார்.


11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணிமுகில்’ (10-9-1) எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, 

அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, 
எழுந்தருளச் செய்வார்கள். 

இந்த பத்து பாசுரங்களில் நம்மாழ்வார் மோட்சத்திற்கு  செல்லும் வழியில் என்ன நடக்கிறது என்றும், 
யார் யார் வந்து எதிர்கொள்ளுகிறார்கள் என்றும் சொல்லுகிறார். 

அப்போது, ‘முனியே..!  நான்முகனே..’ (10-10-1) என்கிற கடைசி திருவாய்மொழியை,

 அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, 

ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள். 


‘அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி, 
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்சடகோபன் சொன்ன, 
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், முடிந்த 
அவாவிலந்தாதிஇப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!’  (10-10-11) 

என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி திருவாய்மொழியின் கடைசி பாசுரத்தை,
 அரையர்கள் தாளத்தோடு பாடுவார்கள். 

ரங்கன் தான் சாற்றிக் கொண்டிருந்த  மாலையைக் களைந்து 
ஆழ்வாருக்குச் சாற்றி,  
தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, 
ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புவார். 
இதன்மூலம், பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.











குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி * 
வடதிசைபின்புகாட்டித் தென்திசை இலங்கை நோக்கி * 
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு * 
உடலெனக்குஉருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே! (2)

திருமாலை -19 890


பாயும்நீரரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட * 
மாயனார்திருநன்மார்பும் மரகதவுருவும்தோளும் * 
தூய தாமரைக்கண்களும் துவரிதழ்பவளவாயும் * 
ஆயசீர்முடியும்தேசும் அடியரோர்க்குஅகலலாமே?

திருமாலை -20 891


பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு * 
துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் * 
அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் * 
மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?

திருமாலை -21 892



ஓம் நமோ நாராயண ....முக நூலில் தினமும் இப்படங்களை தரிசிக்கும் போது  ஒரு சேமிப்பாக இங்கு பதியும் ஆசை வந்தது ,அதனாலே அரங்கனின் அருளால் முடிந்த அளவு திருஅத்யயன  பெருவிழாவின் பகல்பத்து மற்றும் இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின்  அழகிய அலங்கார படங்களை இங்கு பகிர்ந்தேன் .....  

இப்படி தினமும் மகிழ்வுடன் தரிசித்தால், எங்களுக்கும் எதிர்பாராமல் நம்பெருமாள் தரிசனம்  கடைசி நாள் அன்று கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி, அன்று எடுத்த படங்கள் மற்றுமொரு பதிவில் ..

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...



அன்புடன் 
அனுபிரேம் 

6 comments:

  1. அழகிய படங்கள்.  சுக தரிசனம்.

    ReplyDelete
  2. சிறப்பான தரிசனம். நன்றி.

    படங்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகிய அரங்கனின் தரிசனம் காலையில் தரிசிக்கும் பேறு பெற்றேன். படங்கள் மிக மிக அழகு. நம்மாழ்வார் முக்தி அடைந்த விபரங்கள் தெரிந்து கொண்டேன். அழகிய படங்களை பகிர்ந்து என்னையும் ஆனந்தமாக தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. திருவரங்கத்தில் இதனைக் காணும் பேறு வாய்க்குமா?.... தெரியவில்லை.

    சிறப்பா எழுதியிருக்கீங்க. திருமாலைக்குப் பதிலா கடைசிப் பத்திலிருந்தே சிலவற்றைப் பகிர்ந்திருக்கலாம்

    ReplyDelete
  5. மனங்குளிர தரிசனம்.

    ReplyDelete
  6. அரங்கனின் தரிசனம் அருமை.
    ந்ம்மாழ்வார் வரலாறு அருமை.
    நம் பெருமாள் திருமஞ்சன சேவை பார்க்க பேறு பெற்று இருக்க வேண்டும்.

    ReplyDelete