24 March 2023

விஷ்ணு பாதம் கோவில்

வாழ்க வளமுடன் 



முந்தைய பதிவுகள்  

1. வாரணாசி ......

2. கயாவில் ....

கயாபுரி என்பது கயாவின் மற்றொரு பழமையான பெயராகும், இது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவால் மலையாக மாறிய கயாசுரன் என்ற அரக்கன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய கயாவைச் சுற்றியுள்ள மலைகள் கயாசுரன் என்ற அரக்கனின் உடல் உறுப்புகளாக மாறியதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். 

கயாவின் சிறப்பு -  பல்கு அல்லது நிரஞ்சனா என்ற நதிக்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் புராதன நகரங்களில் ஒன்று கயா.  இந்து, ஜைன மற்றும் பௌத்த மதங்களுக்கு முக்கியமான இந்நகர், மங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்கு நதியும்  சூழ அமைந்துள்ளது.

 கயாசுரன் என்ற அசுரனை விஷ்ணு கொன்றபோது, அவன் வேண்டுதலுக்கு இணங்க, அவனது உடலே இப்பகுதியாக மாறி, அதன் மீது பல தேவர்-தேவதைகளின் கோவில்கள் உருவானது.

 மக்கள் தொடர்ந்து இங்கு வந்து சிராத்தம் / பிண்ட தானம் செய்து வருவதால் பாவங்கள் விலகும் என்று அவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சம்பிரதாயங்கள் நடந்து வருகின்றன. 


விஷ்ணுபாதம் கோவில்: 

விஷ்ணுபாத் என்ற குன்றின் மீது விஷ்ணுவின் பாதம் உள்ளது. கயாசுரனைக் கொல்லும் போது, ஒரு காலை இக்குன்றின் மீதும், அடுத்த காலை அசுரனின் மார்பின் மீது வைத்ததால், அப்பாதம் உருவானது. 


கிருதயுகத்தில், “கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரம்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால், 

“தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன்.

 அந்த வரமும் பெற்றுவிட்டான். 

இதனால் பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். 

இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது.

 யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். 

விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். 

“ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்க சொன்னர். 

பிரம்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக் கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். “இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை” என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான். 

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட,ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது. 

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். 

“தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான்.

 அவன் 2 வரங்கள் கேட்டான். 

1. “முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்.”

2. “இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்.

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப் பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. 



விஷ்ணு பாதம் கோவிலின் அமைப்பு -

 இப்பொழுதைய விஷ்ணு பாத கோவில் அஹல்யாபாய் ஹோல்கர் என்ற இந்தூர் மஹாராணியால் 1780ல் கருங்கற்களினால் கட்டப்பட்டதாகும. அஷ்டகோண வடிவில் 100 அடி  உயரத்தில் உள்ள பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. 


இணையத்திலிருந்து 


கூரை வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட பல தூண்களால், இரண்டு அடுக்களில் கட்டப்பட்டுள்ளது.

 சுற்றிலும் பிரகாரங்கள், சன்னதிகள் உள்ளன. 

பூஜையின் போது, வெள்ளியினால் செய்யப்பட்ட அஷ்டகோணத்தில் உள்ள பீடத்தைச் சுற்றிலும் இருக்கும்படி வைத்து அபிஷேகம், ஆராதனை செய்து அலங்காரம் செய்கிறார்கள். 

பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. சுற்றிலும் பல சன்னிதிகள்.

ஒவ்வொரு பக்தரும் பூஜை செய்யலாம், தொட்டு கும்பிடலாம்.

 வெளியில் கோவிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் எப்பொழுதும் பஜனை, உபன்யாசம் நடந்து கொண்டிருக்கின்றன. 


நடுவில் விஷ்ணு பாதம்


விஷ்ணு பாதம்



இங்கு கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால்  கோவிலின் உள்புற படங்கள் இணையத்திலிருந்து.


இங்கு தான் சிரார்த்தம் செய்ய வேண்டும். அதனால்  நாங்கள் முதல் நாளே மடத்தின் வழியாக  கயாவில் செய்ய வேண்டிய சிரார்த்திற்கு உதவி புரியும் வாத்தியார் எண்ணை  வாங்கி கொண்டோம். விஷ்ணு பாதம் கோவிலில் காலை 7மணிக்கு இருக்க சொன்னார்கள். நாங்களும் அந்நேரமே அங்கு சென்று விட்டோம்..


நாங்கள் தங்கியிருந்த மடத்தின் விலாசமும், தொலைபேசி எண்ணும் ---

 ( Gaya Nattukottai Nagara Chatram

171, Chand Chowra,Gaya, Bihar 823001

 mobile no-  7311166234 )








தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼








4 comments:

  1. கசகசவென இருந்த அந்த இடத்தை நினைவில் கொண்டுவருகிறீர்கள். காசில எரிப்பு கயாவில் பிண்டம்

    ReplyDelete
  2. அற்புதமான தகவல்

    ReplyDelete
  3. கயா போகிறவர்களுக்கு உபயோகமான விவரங்கள்.

    ReplyDelete
  4. விரிவான தகவல்கள்..... பலருக்கும் பயன்படும். நான் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் நினைவில் இன்னமும் பசுமையாய்....

    ReplyDelete