22 April 2021

ராம நாமத்தின் விலை ....

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர்  தரிசனம் 
ராம ராம ராம ராம !!  











ராம நாமத்தின் விலை....


 இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது....


பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. 

அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.

காலகிரமத்தில் இறந்து போனான். 

அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். 

அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, 'ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. 

அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 

'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.

'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். 

அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.

'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.

'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.


அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று. 

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.


'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.


அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!

(படித்ததில் பிடித்தது)








பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்


தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி *
வனமருவுகவியரசன்காதல்கொண்டு
வாலியைக் கொன்று இலங்கைநகரரக்கர்கோமான் *
சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
இனிதமர்ந்தஅம்மானைஇராமன்தன்னை
ஏத்துவாரிணையடியேஏத்தினேனே.

6 746


குரைகடலைஅடலம்பால்மறுகவெய்து
குலைகட்டிமறுகரையைஅதனாலேறி *
எரிநெடுவேலரக்கரொடும் இலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டு அவன்தம்பிக்கு அரசுமீந்து *
திருமகளோடினிதமர்ந்தசெல்வன்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அரசமர்ந்தானடிசூடும் அரசையல்லால்
அரசு ஆகஎண்ணேன்மற்றரசுதானே.

7 747



அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி
அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்
தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி
உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *
செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்
பருகுவோம் இன்னமுதம்மதியோமன்றே.


8 748




2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் படங்கள் அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று உள்ளது. ராமநாம மகிமை கதையும் அருமை. ராம நாமத்திற்கு விலை ஏது? விலை மதிக்க முடியாத நாம மகிமை அறிய தந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. ராம நாமத்தின் மகிமை சொல்லும் கதை மிக மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete