23 April 2021

இது ராம (பாதுகை) ராஜ்யம் !

 மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் தரிசனம் .....இது ராம (பாதுகை) ராஜ்யம்!

பரதன் அன்றாடம் துயில் எழுந்து நேராக தர்பாருக்குச் செல்வான். 

அங்கே சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைக்கு வணக்கம் செலுத்துவான்.

 'தங்கள் ஆட்சியில் என்றும், எல்லோருக்கும் நன்மையே விளைய வேண்டும் அண்ணா' என வேண்டிக் கொள்வான்.

ஒரு நாள் பிறக்கிறது என்றால், அவனைப் பொறுத்தவரை சந்தோஷம் தான். 

ஆமாம், அந்த ஒருநாள் தன் அண்ணன் ராமன் அயோத்திக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது அல்லவா?

பரதனின் மனநிலை, அவன் தம்பி சத்ருக்னன், வசிஷ்டர் முதலான ரிஷிகள், ஏன், அயோத்தி மக்களிடமும் நிலவியது.

இத்தனைக்கும் ராமன் நகர்வலம் வந்து மக்களைச் சந்தித்ததில்லை. 

அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. 

தசரதரின் ஆட்சியில் மக்கள் நலமாக வாழ்ந்ததால் ராமனின் தலையீடும் இல்லை. 

இருந்தாலும் ஆட்சி நிகழ்வுகளின் நீக்கு போக்கை கவனித்து வந்தான்.

எனினும் அயோத்தி மக்கள் மற்றும் அரண்மனைவாசிகளுக்கு 'ராமன்' என்ற சொல்லே புத்துணர்வை தந்தது. அயோத்தியில் தங்களோடு ராமன் இருக்கிறான் என்பதே மகிழ்ச்சி அளித்தது. சில சமயம் உப்பரிகையில் அவன் வந்து நிற்கும் போது அந்த வழியாகச் செல்பவர்கள் வணக்கம் செலுத்த, ராமனும் பதிலுக்கு வணக்கம் செலுத்துவான். அதை மக்கள் பாக்கியமாகக் கருதினர். அந்தளவுக்கு ராமன் என்னும் காந்தம் அவர்களை ஈர்த்தது. 

ஆனால், அவன் காட்டுக்குச் சென்ற பின்னர் அவர்களின் முகத்தில் கவலை படர்ந்தது.

குடிமக்களுக்கே அந்நிலை என்றால், பரதன் பற்றிச் சொல்ல வேண்டுமா? 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று சொல்லி ராமன் புறக்கணித்த வருத்தம் அவன் மனதை விட்டு அகலவே இல்லை.

 வசிஷ்டர், அவனது மாமனார் ஜனகர் கேட்டும் கூட அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை.

எப்படியாவது ராமனை அயோத்திக்கு அழைத்து வருவது கங்கணம் கட்டிக் கொண்டு சென்ற பரதன் ஏமாற்றம் அடைந்தான். 

ராமன் அயோத்தி திரும்ப மறுத்த நிலையில் பாதுகையாவது தருமாறு பரதன் கேட்டான்.


தம்பியின் இந்த விருப்பத்தையாவது நிறைவேற்ற சம்மதித்தான் ராமன். 

காட்டில் பாதுகை இல்லாமல் கரடு முரடான வழியில் நடக்க நேரும் என்பதையும், இன்னும் 14 ஆண்டுகள் இப்படியே காலம் தள்ள வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டே தன் பாதுகைகளைத் தியாகம் செய்தான். 

பரதன் சமாதானம் அடைந்தால் போதும் என்பது ராமனின் எண்ணம்.

அந்தப் பாதுகைகளை தலைமீது சுமந்து வந்த பரதன், அவற்றை சிம்மாசனத்தில் அமர்த்தி, மலரிட்டு, அர்ச்சித்து, வழிபட்டு தன்னையும், அயோத்தி நாட்டையும் நல்வழிப்படுத்துமாறு வேண்டினான்.

என்ன தான் பாதுகைகள் என்றாலும் ராமனுக்குச் சமமாகுமா? 

ஆனாலும் ராமனின் ஆசி இருந்ததால் அயோத்தியில் எந்தக் குழப்பமும் இல்லை. 

மக்களுக்கு குறை ஏதும் இல்லை. ஆனால் ராமனின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தான் பரதன்.

ஒருநாள் குடிமக்கள் இருவருக்கு இடையில் வழக்கு ஒன்று எழுந்ததாக கேள்விப்பட்ட பரதன் வருந்தினான். 
ராம பாதுகைகளின் நல்லாட்சியில் எங்கு தவறு நடந்தோ தெரியவில்லையே... என துடித்தான். 

இப்படி ஒரு நெருக்கடி உருவாகக் காரணம் என்ன? என சிந்தித்தபடி சபைக்கு வந்தான் பரதன். பின் தொடர்ந்தான் சத்ருக்னன்.


அவையில் இரு விவசாயிகள் கைகட்டி நின்றிருந்தனர்.

சிம்மாசனத்தை அலங்கரித்த பாதுகைகளை வணங்கிய பரதன், '' உங்களுக்குள் என்ன பிரச்னை?'' எனக் கேட்டான்.

அவர்களில் ஒருவன், ''ஐயனே! எனக்குச் சொந்தமாக விளைநிலம் இருந்தது. அதை இவருக்கு விற்றேன்''

''அதற்கு பணம் தர மறுக்கிறாரா?'' எனக் குறுக்கிட்டான் பரதன்.

''இல்லை ஐயனே! பேசியபடி பணம் வாங்கி விட்டேன். பிரச்சனை அதுவல்ல''

''வேறு என்ன?'' கேட்டான் பரதன்.


நிலத்தை வாங்கியவன். ''ஐயனே! வாங்கிய நிலத்தை நான் கலப்பையால் உழுதேன். அப்போது அங்கு தங்கப் புதையல் கிடைக்கப் பெற்றேன் '' பரதனுக்கு வழக்கின் தன்மை புரிவது போலிருந்தது.


''உடனே இந்தப் புதையல் உங்களுக்கு தான் சொந்தம். இது உங்கள் நிலத்தடியில் இருந்தது என இவரிடம் ஒப்படைத்தேன் ''

''நிலத்தை விற்றேன் என்றால் அடியில் உள்ள புதையலையும் சேர்த்து விற்றதாகத் தானே அர்த்தம்?'' என்றார் விற்றவர்.


''இல்லை! நிலத்தை மட்டும் தான் எனக்கு விற்றீர்கள். அதனடியில் இருக்கும் புதையல் குறித்து தெரிந்திருக்க தங்களுக்கு நியாயமில்லை. ஆகவே புதையல் உங்களுக்கே சொந்தம்'' என்றார் நிலத்தை வாங்கியவர்.

பெருமிதத்துடன் அவர்களை பார்த்த பரதன், ''எத்தனை நேர்மையாளர்கள் இவர்கள்! மக்கள் இப்படி தர்ம வழியில் வாழ சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைகள் தானே காரணம்! ஒரு வேளை நான் ஆட்சி நடத்தினால் இப்படி நேர்மையுடன் இருப்பார்களா? புதையல் தனக்கே சொந்தம் என சண்டையிட்டிருப்பர்!


ராமனின் நேர்மை, பெருந்தன்மை, பரந்த குணம் தான் மக்களிடம் வேரூன்றி விட்டது! 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பதே உண்மை!

போதும் என வாழ்ந்திடும் அவர்களின் பொன்மனம் பரதனுக்கு புரிந்தது. 

அயோத்தி மக்களுக்கு பயன்படும் விதத்தில் பணத்தை செலவழிக்க முடிவெடுத்தான். அதை சபையோர் அனைவரும் ஏற்றனர்.

ராமன் ஆண்டால் என்ன... ராம பாதுகை ஆண்டால் என்ன! 

ராம உணர்வு இருக்கும் வரை தர்மம் காக்கப்படும் என்பது அங்கே என்பது நிரூபணமானது.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

(படித்ததில் பிடித்தது )

பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்


செறிதவச்சம்புகன்தன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியும் கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *
திறல்விளங்கும் இலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை * மறவாதஉள்ளந்தன்னை
யுடையோம் மற்றுறுதுயர மடையோமன்றே.

9 749


அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறிஅசுரர் தம்மை
வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற
விண்முழுதும் எதிர்வரத்தன்தாமம்மேவி *
சென்று இனிதுவீற்றிருந்தஅம்மான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
என்றும்நின்றான் அவனிவனென்றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)

10 750தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடு அமர்ந்தான்தன்னை *
எல்லையில்சீர்த்தயரதன்தன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரன்சொற்செய்த *
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

11 751
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 

2 comments:

 1. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகுடன் அருமை. ஸ்ரீராம பாதுகையின் மகிமை பற்றிய கதை ஏற்கனவே தெரிந்தது என்றாலும், இங்கு படிக்கும் போது மீண்டும் மெய்சிலிர்க்க வைத்தது. ஸ்ரீ ராமரின் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.🙏.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 2. ஏரி காத்த ராமர் - படங்கள் அழகு. கதை இதுவரை படித்ததில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete