18 April 2021

ஸ்வாமி ராமானுஜர் திருநட்சத்திரம்

ஆதிசேஷன் அம்சமான சுவாமி  இராமானுஜரின்   திருநட்சித்திரம்  - இன்று

  சித்திரையில் திருவாதிரை ....


ஸ்ரீரங்கம் - உடையவர் திவ்ய சேவை



ஸ்ரீரங்கம் உடையவர் திவ்ய சேவை.





எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)



அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!




 



எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே

எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே

பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே

பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே

தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே

தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே

தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே

சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே



திருக்கோவலூர் 


திருநக்ஷத்ரம்  : சித்திரை, திருவாதிரை

அவதார ஸ்தலம்  : ஸ்ரீபெரும்பூதூர்

ஆசார்யன்  : பெரிய நம்பி

சிஷ்யர்கள்  : கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 சிம்ஹாசனாதிபதிகள், 700 சந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் சிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

பரமபதித்த இடம்  : ஸ்ரீரங்கம்

 

இந்த தேசத்தில் ஸ்வாமியின்  காலடி படாத வைணவத் தலங்களே இல்லை. 
வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்களசாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் சுவாமி ராமானுஜர்.

திருமலையில் சுவாமி  ராமானுஜர்  ஒருவருட காலம் தங்கியிருந்து பகவத் கைங்கரியம் செய்தார். திருமலையைக் கண்டதுமே அவர் கண்கள் பனித்தன. எம்பெருமானின் நினைப்பு எப்போதும் அவரிடம் ஓடிக்கொண்டே இருக்கும்.



ஒருமுறை பெரியநம்பியின் மகள் அத்துழாய்க்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 
சுவாமி ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ, தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். 

இதில் சில நிபந்தனைகள் உள்ளன.

 ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். 
பிக்ஷை பெற்ற தானியம் பூராவையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்கு மேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது. 

அப்படி ஒருநாள் பெரியநம்பியின் வீட்டு வாசலில் சுவாமி ராமானுஜர் நின்று பிக்ஷை கேட்கிறார். 

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ!

நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்காரவடிசிலும் திருமாலிருஞ்சோலைப்பெருமாளுக்கு படைப்பதாக ஆண்டாள் அன்று வேண்டிக்கொண்டாள், என்பதற்காக தன்காலத்தில் அதே அளவு வெண்ணெயையும், அதே அளவு அக்கார வடிசிலையும் ஆண்டாளுக்காக ஸ்ரீ ராமானுஜர் சாதித்தார் என்றால் அவருடைய பாகவத பிரியத்தை என்னென்று சொல்லுவது?

இப்படிப்பட்ட ராமானுஜர் உஞ்சவிருத்தி எடுத்து வரும்போது பெரியநம்பியின் வீட்டு வாசலில் நிற்கிறார். அத்துழாய் உஞ்சவிருத்திக்கு வந்த பிராமணரை வரவேற்க கதவை திறக்கிறாள். 

அத்துழாய் கதவைத் திறந்ததைப் பார்த்த மறுகணம் ராமானுஜர் மூர்ச்சையாகி விழுந்து விடுகிறார். அத்துழாய்க்கு என்ன செய்வதென்று புரியாமல் தந்தையிடம் ஓடிப்போய் ராமானுஜர் விழுந்ததைச் சொல்லுகிறாள்.

பெரியநம்பி மகளைப் பார்த்து சிரிக்கிறார். 

அத்துழாய்க்கு வியப்பு. 

வாசலில் ராமானுஜர் மூர்ச்சையாகிக் கிடப்பதை பதைபதைப்புடன் சொல்கிறோம் தந்தையார் இப்படி சிரிக்கிறாரே!



“அத்துழாய் ! நீ வருத்தப்படவேண்டாம். இராமானுசர்  ஒரு பரம பக்தர். நாராயணனையும் அவன் பாகவதர்களையும் தவிர அவர்  நினைப்பில் வேறு சிந்தையே கிடையாது. அவர்  வாய் எப்பொழுதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை முணுமுணுத்தவாறே இருக்கும். நீ கதவைத் திறக்கும்போது  ‘உந்து மத  களிற்றன்’ பாசுரத்தை பாடியிருப்பார். அதில் ஈற்றில் நந்தா கோபன் மருமகளே நப்பின்னாய் என்ற வரிகள் பாடிக் கொண்டிருக்கும்போது நீ கதவைத் திறந்திருப்பாய். உன்னை அப்படியே நப்பின்னையாகவே நினைத்துக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பார் . பயப்படாதே! சிறிது நேரத்தில் அவரே  தெளிந்து விடுவார் ” என்றார் சாதாரணமாக.

அவருடைய நாராயணின் மீதான பற்று அத்தனை உயர்த்தியானது. 







ஸ்ரீபெரும்புதூர்  




ராமானுஜருக்கு ஆளவந்தார் நியமித்த பஞ்ச ஆசார்யர்களுள் ஒருவர் திருமலை நம்பிகள். 

திருமலை நம்பிகள் தாய்மாமாவாக, ராமானுஜரின் நாமகரண விழாவில் பங்கேற்று, ராமானுஜரின் ஆதிசேஷ அம்சமும், கல்யாண குணங்களும் மிளிறும் வண்ணம் "இளையாழவார்" என்று திருநாமம் சூட்டினார்.


 சுவாமி ராமானுஜரின் முதல் திருமலை விஜயத்தின் போது, 

திருமலை நம்பிகள் மலையிலிருந்து இறங்கி வந்து முழங்கால் முடிச்சு அருகில்,

 திருவேங்கடவரின் பிரசாதங்களுடன் எதிர்கொண்டு வரவேற்றார்.

"இந்த எளியேனை வரவேற்க தேவரீரே, வரவேண்டியதில்லையே! யாராவது சிறியவரை அனுப்பி இருக்கலாமே" என்று உடையவர் பணிவுடன் விண்ணப்பிக்க,

அவர் "திருமலை நான்கு மாட வீதிகளிலும், சல்லடை போட்டுத் தேடியும், ஏவல் கொள்ளுமளவுக்கு அடியேனை விடச் சிறியவர் யாரும் கிடைக்கவில்லை. 
எனவே அடியேனே வந்தேன்" என்று மிக நைச்சியமாகச் சொன்னார்.



சுவாமி  ராமானுஜருக்கு ஶ்ரீராமாயணத்தின் அர்த்த விசேஷங்களை ஓராண்டு முழுவதும் போதித்த ஶ்ரீ சைல பூரணர் (திருமலை நம்பி)....

ஶ்ரீ ஆளவந்தார் தம் தலையாய சீடர்கள் ஐவரிடம், சுவாமி  ராமானுஜருக்கு ஆசார்யர்களாக இருந்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு அற்புதத்தை போதிக்க வேண்டும் என்று நியமித்துச் சென்றுவிட்டார்.

அவ்வாறு திருமலை நம்பிகளிடம்,  இளையாழ்வாருக்கு வால்மீகியின் ஶ்ரீராமாயணத்தை உரைக்கச் சொன்னார்.

அந்தத் தருணம் ராமானுஜரின், முதல் திருமலை விஜயத்தில் அமைந்தது.


ராமானுஜர் திருமலையே பெருமாளின் திருமேனி என்று எண்ணியதால் தினமும் மலை ஏறிவர இசையவில்லை. 

நித்யசூரிகள் வாசம் செய்யும் திருமலையில் தங்கவும் இசையவில்லை.

அவர் கருத்தை மதித்த திருமலை நம்பிகள்,  தினமும் திருவேங்கடவருக்கு, காலை திருவாராதானத்தை முடித்தவுடன் நைவேத்யப் பிரசாதங்களுடன் கீழே இறங்கிவிடுவார்.

அங்கு  அடிப்புளியில்(அலிபிரி),   ஒரு பாறை மீது காத்திருக்கும் சீடர் ராமானுஜருக்கு, பிரசாதம் கொடுத்து விட்டு உடனே பாடம் ஆரம்பித்து விடுவார்.  மீண்டும் மாலையில் இருட்டும் முன் மலையேறி,மாலை திருவாராதனத்துக்கு சென்று விடுவார். 

 அப்போது அவருக்கு ஏறத்தாழ 90 வயது!


தற்போது மாதிரி 9/10 நாட்கள் நடந்தவை  அல்ல அது!!


ஓராண்டு முழுவதும், ஒரு நாள் விடாமல் தொடர்ந்தது நடந்தது!!!



வால்மீகி ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அதன் ஆழ்ந்த மறை பொருளையும்,ஶ்ரீராமாயணத்தின் 18 அர்த்த விசேஷங்களையும் எடுத்துரைத்தார்...!!!




திருமலையில் சுவாமி  

திருமலையில் சுவாமி  






திருவரங்கத்தமுதனார் அருளிய 
இராமாநுச நூற்றந்தாதி


படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்தி வெள்ளம் *
குடிகொண்டகோயிலிராமானுசன்குணங்கூறும் * அன்பர்
கடிகொண்டமாமலர்த்தாள்கலந்துள்ளங்கனியும்நல்லோர்
அடிகண்டுகொண்டுகந்து * என்னையும் ஆளவர்க்காக்கினரே.

37 3813



ஆக்கிஅடிமைநிலைப்பித்தனை என்னைஇன்று * அவமே
போக்கிப் புறத்திட்டதென்பொருளாமுன்பு? * புண்ணியர் தம்
வாக்கிற்பிரியாஇராமானுச! நின்னருளின்வண்ணம்
நோக்கில்தெரிவரிதால் * உரையாய்இந்தநுண்பொருளே.

38 3814




பொருளும்புதல்வரும்பூமியும் * பூங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும் நமக்குநெஞ்சே! * மற்றுளார்தரமோ
இருள்கொண்டவெந்துயர்மாற்றித்தன்னீறில்பெரும்புகழே
தெருளும்தெருள்தந்து * இராமானுசன்செய்யும் சேமங்களே.

39 3815


கும்பகோணம் திருச்சேரை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலில் 







உபதேச ரத்தின மாலை 


இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்

என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் – என்றவர்க்குச்

சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்

நாற்றிசையும் கொண்டாடும் நாள்  

27



ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் 

வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும்

உய்ய எதிராசர் உதித்தருளும் - சித்திரையில் 

செய்ய திருவாதிரை

28


எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா

வந்துதித்த நாள் என்னும் வாசியினால் – இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே

ஒருவாமல் எப்பொழுதும் ஓர் 

29


திருவல்லிக்கேணி ஸ்வாமி எம்பெருமானார்


ஸ்ரீபெரும்புதூரில் சுவாமி  




உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்

அனுபிரேம்..



1 comment:

  1. உடையவர் திருநக்ஷத்திரம் - தகவல்களும் படங்களும் சிறப்பு.

    தொடரட்டும் பக்தி! தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete