04 February 2023

33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே.

 33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே.





இது நம்பாடுவான் கதை. நம்பாடுவான், திருப்பாணாழ்வார் போலப் பாணர் குலத்தில் பிறந்தவர்.

அதாவது, அவர்கள் கையில் எப்போதும் பாண் என்ற இசை வாத்தியம் இருக்கும். சதா சர்வகாலமும் பெருமாள் பாசுரங்களைப் பாடிக்கொண்டு அதிலே லயித்துக் கிடப்பார்கள்.

பெருமாள் பன்றியாக (வராக) அவதாரம் எடுத்தார். கடலுக்கு அடியிலிருந்த பூமியை அரக்கனிடமிருந்து மீட்டு மேலே கொண்டு வந்தார். அப்போது பெருமாள் பூமாதேவியிடம் ஒரு கதை சொல்லுகிறார். 


அந்தக் கதை தான் நம்பாடுவான் கதை. 


பாண்டிய தேசத்தில் திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசம் இருக்கிறது. 

அங்கே இருக்கும் பெருமாள் அழகிய நம்பி. திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தில் வைணவ பக்தன் வாழ்ந்து வந்தான். 

பெயர் நம்பாடுவான். தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். அதனால் அவனுக்குக் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இதைப் பற்றி எல்லாம் அவனுக்குக் கவலை இல்லை. தினமும் விடிகாலையில் குளித்துவிடுவான். பாண் வாத்தியத்தைக் கையில் எடுத்துக்கொள்வான்.

கோயிலின் வாயிலுக்கு முன் நின்றுகொண்டு திருக்குறுங்குடி அழகிய நம்பியைக் குறித்து பண் இசைத்துப் பாடிக்கொண்டு இருப்பான். பல ஆண்டுகள் இப்படியே செய்துகொண்டு இருந்தான். ஒரு கார்த்திகை நாள், ஏகாதசி இரவு முழுவதும் கண் விழித்து அழகிய நம்பியைத் தியானித்து

மறுநாள் துவாதசிக்கு, விடியற்காலை விரதத்தை முடிக்கக் கோவிலுக்குப் புறப்பட்டான். 

நல்ல இருட்டு. கார்த்திகை மாசக் குளிர். எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். காட்டுவழியே செல்லும்போது மரத்திலிருந்து ஒரு பிரம்ம ராட்சசன் அவன் முன்னே வந்தது ...

 ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்துக்கொண்டது. 

நம்பாடுவான் “என்னை  என்ன செய்யப் போகிறாய் ?” என்று கேட்டான். 

அதற்கு அந்தப் பிரம்ம ராட்சசன் “எனக்குக் கோரமான பசி, உன்னை உணவாகச் சாப்பிடப் போகிறேன்” என்றது.

அதற்கு நம்பாடுவான் “என்னை நீ சாப்பிடு ஆனால் நான் விரதத்தில் இருக்கிறேன். நம்பியைப் பாடிவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு திரும்ப வரும்போது என்னைச் சாப்பிட்டுக்கொள்” என்றான்.

பிரம்ம ராட்சசன் “பயங்கரமாகச் சிரித்தது. நான் என்ன பைத்தியமா உன்னைப் பேச்சை நம்ப ? யாராவது என்னைச் சாப்பிடு என்று திரும்பி வருவானா ? என்னை ஏமாற்றிவிட்டுத் தப்பிக்கலாம் என்று பார்த்தாயா ?” என்றது.

நம்பாடுவான் “நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பெருமாள் அழகிய நம்பியின் பரம பக்தன். பொய் சொல்லமாட்டேன். இது சத்தியம். என்னை நம்பு” என்றான்.

பிரம்ம ராட்சசன் ”என் சத்தியத்தை எப்படி நம்புவது?” என்று கேட்டது. 

அதற்கு நம்பாடுவான் பதினேழு விதமான சத்தியங்களைச் சொல்லி என்னை விரதத்தை முடிக்க விடு என்று ராட்சசனிடம் மன்றாடுகிறான். 

ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. 

நம்பாடுவான் பதினெட்டாவது சத்தியமாக “நான் திரும்ப வரவில்லை என்றால் திருமாலையும் மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்து வணங்குபவர்களுக்கு என்ன பாவம் கிடைக்குமோ அது எனக்குக் கிடைக்கட்டும்” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான்.

நம்பாடுவான் மகிழ்ச்சியுடன் திருக்குறுங்குடி அழகிய நம்பியைச் சேவிக்க வேகமாகச் சென்றான். கோயிலுக்கு முன் இனிமையான பாடல்களைப் பாடி தன் விரதத்தை முடித்துக்கொண்டான். 

ராட்சசனைத் தேடித் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

 எதிரே ஒரு கிழவர் நம்பாடுவானிடம் “எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்?” என்று கேட்க அதற்கு நம்பாடுவான் “காட்டுக்குள் செல்கிறேன்” என்றான். 

அந்தக் கிழவர் “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்றார்.

 நம்பாடுவான் கிழவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னான்.

 எல்லாவற்றையும் கேட்ட கிழவர் ”ஒரு நல்லவனிடம் சத்தியம் செய்திருந்தால் அதை நிறைவேற்றலாம். ஆனால் நீ ஒரு கொடூர கெட்ட ராட்சசனிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவசியம் இல்லை” என்று சொல்ல ,

அதற்கு நம்பாடுவான் “என் உயிரே போனாலும் நான் சத்தியம் தவற மாட்டேன் அது ராட்சசனாக இருந்தாலும்” என்றான்.

 கிழவர் நம்பாடுவானின் உறுதியைக் கண்டு அவனுக்குத் திருக்குறுங்குடி அழகிய நம்பியாகக் காட்சிகொடுத்து ”எல்லாம் நல்லவையாகவே நடக்கும்” என்று அருள்புரிந்து மறைந்தார்.

நம்பாடுவான் ராட்சசனிடம் சென்றான். “என்னைச் சாப்பிடு” என்று கூற ராட்சசன் மெதுவாக இவனிடம் பேச்சுக் கொடுக்கிறது.

 அப்போது எப்படி சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசனானேன் என்ற தன் கதையைச் சொல்லிவிட்டு, ”உனக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கிறேன் எனக்கு நீ கோவிலின் முன் பாடிய பாடலின் பலனைக் கொடு” என்று கேட்க, அதற்கு நம்பாடுவான் “எனக்கு உயிர்மீது ஆசை இல்லை, என்னைக் கொன்று தின்றுவிடு ஆனால் பாடலின் பலனைக் கொடுக்கமாட்டேன்” என்றான்.

ராட்சசன் விடவில்லை “முழு பாடலின் பலனைக் கொடுக்க வேண்டாம், அதில் கொஞ்சமாவது கொடு” என்று கேட்டது.

நம்பாடுவான் “முடியாது” என்று மீண்டும் மறுத்தான்.

“இன்று கடைசியாகப் பாடிய பாட்டின் பலனையாவது எனக்குத் தர வேண்டும் என்று நம்பாடுவான் காலில் விழுந்தது. நம்பாடுவான் சரி என்று பலனைக் கொடுக்கப் பிரம்ம ராட்சசன் பாவங்கள் எல்லாம் தொலைந்து, சாபம் தீர்ந்து மோட்சம் பெற்றான்.


( இளைப்புவிடாய் தீர்த்தேனோ - பிரம்ம ராட்சசன் சாபத்தால் இளைத்து இருந்த விடாயை நம்பாடுவான் தீர்த்தான்)

"நம்பாடுவானைப் போல பாடி ஒருவனை ராக்ஷஸ பிறவியிலிருந்து விடுவித்தேனா?" என்று கேட்கிறாள் பெண்பிள்ளை.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 6 பரிவது இல் 

ஆராதனைக்கு எளியவன்  


கொள்கை கொளாமை இலாதான்*  

எள்கல் இராகம் இலாதான்*

விள் கை விள்ளாமை விரும்பி*   

உள் கலந்தார்க்கு ஓர் அமுதே. 5

2958


அமுதம் அமரர்கட்கு ஈந்த* 

 நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

அமுதிலும் ஆற்ற இனியன்*  

நிமிர் திரை நீள் கடலானே.6

2959









34 . திருவாலி திருநகரி

ஸ்ரீ அம்ருதகடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாளிமணவாள ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment