இன்று திருமழிசை ஆழ்வார் அவதார திருநட்சத்திரம் - தையில் மகம் ...
திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!
அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறு நூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே
திருமழிசையாழ்வார்
பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்
திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) , பார்கவ மகரிஷிக்கும், கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.
திருமழிசை ஆழ்வாரின் திருவரசு (பரமபதம் அடைந்த பின் சரமதிருமேனி பள்ளிப்படுத்திய இடம்), திருக்குடந்தையில் ஆதி வராஹப் பெருமாள் கோவிலுக்கு அருகில், சாத்தார வீதியில் உள்ளது.
4700 ஆண்டுகள், இப்பூவுலகில் வாசம் செய்த ஆழ்வார் ஒரு சித்தர்.
தம் யோக சக்தியால் பல நூறு, ஆண்டுகளுக்கு ஒரு முறை மூச்சு விடும் அரியசக்தியைப் பெற்றிருந்தார். அடிக்கடி தவயோகத்தில் அமர்ந்து விடுவாராம். அப்படி ஒரு முறை யோகநிலையில் அமர்ந்திருந்த போது, அந்த இடத்தில் இருந்தவர்கள், அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கருதி, அந்த இடத்திலேயே, அதே யோகநிலையில், அவரைத் திருப்பள்ளிப் படுத்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.
யோக சக்தியுள்ள ஆழ்வார் பூமிக்கடியில் இன்னும் ஜீவித்துள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆழ்வார் கூற்றுப்படி அவர், பெருமாள் கல்கி அவதாரம் எடுத்தபின், அந்த அவதாரத்தில் அவரைச் சேவித்துப் பாசுரம் பாடிவிட்டுத்தான் பரமபதம் அடைவாராம்! எனவே அவர் இன்னும் ஜீவித்திருப்பதால் அந்த இடம் திருமழிசை ஆழ்வார் சந்நிதி என்றே அழைக்கப்படுகிறது.
காஞ்சிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அவதரித்து, காஞ்சி வரதரிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தி,பல நூறு ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார் திருமழிசை ஆழ்வார்.
அவர் கும்பகோணத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று கேட்ட, வரதர் தம் பக்தரான ஆழ்வாரைக் கடாசிக்க உடனே கும்பகோணத்துக்கு ஓடியே வந்து விட்டாராம்.வேகமாக வந்ததால்,
கருடனையும் ஏவவில்லை; பெருந்தேவித் தாயாரையும் அழைத்து வரவில்லை.
கும்பகோணம் திருமழிசை ஆழ்வார் சந்நிதியில் "பக்திசார வரதர்" கோயில் உள்ளது.
தம் அத்யந்த பக்தர் பெயரை ஏற்று,"பக்தி சார வரதர்" என்னும் திருநாமத்துடன காஞ்சி வரதர் சேவை சாதிக்கிறார்.
திருச்சந்த விருத்தம்
காலநேமி காலனே!* கணக்கு இலாத கீர்த்தியாய்,*
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர்* பாலன் ஆய பண்பனே,*
வேலை வேவ வில் வளைத்த* வெல் சினத்த வீர,* நின்-
பாலர்ஆய பத்தர் சித்தம்* முத்தி செய்யும் மூர்த்தியே! 31
782
குரக்கினப் படை கொடு* குரை கடலின் மீது போய்*
அரக்கர் அங்கு அரங்க* வெஞ்சரம் துரந்த ஆதி நீ,*
இரக்க மண் கொடுத்தவற்கு* இரக்கம் ஒன்றும் இன்றியே,*
பரக்க வைத்து அளந்து கொண்ட* பற்பபாதன் அல்லையே? 32
783
மின் நிறத்து எயிற்று அரக்கன்* வீழ வெஞ்சரம் துரந்து,*
பின்னவற்கு அருள் புரிந்து* அரசு அளித்த பெற்றியோய்,*
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை* பின்னை கேள்வ! மன்னுசீர்,*
பொன்நிறத்த வண்ணன் ஆய* புண்டரீகன் அல்லையே? 33
784
ஆதி ஆதி ஆதி நீ* ஒர் அண்டம் ஆதி ஆதலால்,*
சோதியாத சோதி நீ* அது உண்மையில் விளங்கினாய்,*
வேதம் ஆகி வேள்வி ஆகி* விண்ணினோடு மண்ணுமாய்*
ஆதி ஆகி, ஆயன் ஆய* மாயம் என்ன மாயமே? 34
785
அம்பு உலாவு மீனும் ஆகி* ஆமை ஆகி, ஆழியார்,*
தம்பிரானும் ஆகி மிக்கது, அன்பு* மிக்கு அது அன்றியும்*
கொம்பு அராவு நுண்மருங்குல்* ஆயர் மாதர் பிள்ளையாய்*
எம்பிரானும் ஆயவண்ணம்* என்கொலோ? எம் ஈசனே! 35
786
ஆடகத்த பூண்முலை* யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்*
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி* கள்ளதாய பேய்மகள்*
வீட வைத்த வெய்ய கொங்கை* ஐய பால் அமுது செய்து,*
ஆடகக் கை மாதர் வாய்* அமுதம் உண்டது என்கொலோ? 36
787
காய்த்த நீள் விளாங்கனி* உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்-
சாய்த்து,* மா பிளந்த கைத் தலத்த* கண்ணன் என்பரால்*
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு* வெண்ணெய் உண்டு,* பின்-
பேய்ச்சி பாலை உண்டு* பண்டு ஓர் ஏனமாய வாமனா! 37
788
கடம் கலந்த வன்கரி* மருப்பொசித்து ஒர் பொய்கை வாய்,*
விடம் கலந்த பாம்பின் மேல்* நடம் பயின்ற நாதனே*
குடம் கலந்த கூத்தன் ஆய* கொண்டல்வண்ண! தண்துழாய்,*
வடம் கலந்த மாலை மார்ப!* காலநேமி காலனே! 38
789
வெற்பு எடுத்து வேலை நீர்* கலக்கினாய்! அது அன்றியும்,*
வெற்பு எடுத்து வேலை நீர்* வரம்பு கட்டி, வேலை சூழ்,*
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்* இலங்கை கட்டழித்த நீ,*
வெற்பு எடுத்து மாரி காத்த* மேக வண்ணன் அல்லையே! 39
790
ஆனைகாத்து ஒர் ஆனை கொன்று* அது அன்றி ஆயர் பிள்ளையாய்,*
ஆனை மேய்த்தி; ஆ நெய் உண்டி* அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனை காத்து மை அரிக்கண்* மாதரார் திறத்து, முன்*
ஆனை அன்று சென்று அடர்த்த* மாயம் என்ன மாயமே? 40
791
உபதேசரத்தினமாலை
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் (12)
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!
அனுபிரேம்💛💛
திருச்சந்தவிருத்தத்தின் அழகில் மயங்கியிருக்கிறேன். அதனால்தான் அந்தப் பாசுரத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன் (மனப்பாடம் ஆகவில்லை என்பது வேறு விஷயம்).
ReplyDeleteகும்பகோணம் சாத்தாரத் தெருவில், திருமழிசையாழ்வார் திருவரசில் இரண்டு மூன்று முறை சென்று சேவித்திருக்கிறேன். (அங்கிருந்த அர்ச்சகர், அந்த இடமே, ஆற்றின் கரையில்தான் அமைந்திருந்தது என்று சொன்னார். இப்போ ஆறாவது..குளமாவது..எல்லாமே வீடுகள், வீதிகள்)
சமீபத்தில் சந்தை கற்றுக்கொண்ட உபதேச ரத்தின மாலை பாசுரம் நினைவுக்கு வந்துவிட்டது.
மிக சிறப்பு சார்
DeleteWe can say, it is very difficult to write பொழிப்புரை to திருச்சந்தவிருத்தம். சில நூல்களில் (நாலாயிரத்துக்கும் அர்த்தம் போட்டுள்ள), சில திருச்சந்த விருத்தப் பாசுரங்களுக்கு, அர்த்தத்தை பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் என்றே போட்டிருந்தது எனக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
ReplyDeleteஇப்பாடல்கள் பார்க்க எளிமை போல இருந்தாலும், உள் கருத்து அதிகம்....
Deleteபொருளுடன் பதிவிட முயன்றேன், ஆனால் சரியாக அமையவில்லை சார் .