23 January 2019

திருமழிசையாழ்வார் வைபவம்


இன்று   திருமழிசையாழ்வார்    அவதார தினம் .....

தையில் மகம்........






திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!

இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!

எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!

நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!

நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!





திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்

திருமழிசையாழ்வார் வைபவம்  இங்கே...




சொன்னவண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி)

காஞ்சிபுரம்  மாநகருக்கு கிழக்கில் "திருமழிசை" என்னும் தலத்தில் திருமாலின் திருச்சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான "திருமழிசை ஆழ்வார்" .

சீரும், சிறப்புமாய் வளர்ந்த கணிகண்ணனும் திருமழிசையாழ்வாரின்  சீடர் ஆனார்.

ஆரம்ப காலங்களில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார் திருமழிசையாழ்வார் பின் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால், வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் , பூரிப்போடும்,  மனங்குளிர ஏற்றுக்கொண்டார். .

திருவெஃகாவில் பெருமாளை தினமும்  வழிபட்டு, அவன்  மீது பாடல்களைப் பாடிவந்தார். அச்சமயத்தில் ஒரு மூதாட்டி தினமும் இத்தலத்தில் தொண்டு செய்து வந்தாள்.



         இதைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார்,  அவளின் முதுமையை நீக்கி இளமையாக்கினார். அவளையே பின்னாளில் மன்னன் பல்லவராயன் மணந்தான். திருமணம் ஆகி சில ஆண்டுகள் கடந்தும் அவள் இளமையோடு இருந்தாள்.

ஒருநாள் மன்னன், திருமழிசையாழ்வாரின் அருளால் அப்பெண் முதுமை நீங்கி இளமை பெற்ற இரகசியத்தை அறிந்தான். உடனே பல்லவ மன்னனும் இளமை பெற விரும்பினான்.

ஆகவே கணிகண்ணனை அழைத்து ,கணிகண்ணன் மூலமாக திருமழிசையாழ்வாரின் உதவியை நாட எண்ணினான்.

ஆனால், கணிகண்ணன் தன்னுடைய குருநாதராகிய திருமழிசையாழ்வார், அந்த மன்னனைக் காண வரமாட்டார் என்றும், இது குறித்து அந்த மன்னனுக்கு உதவி செய்ய மாட்டார் என்றும் பதில் கூறினார்.

பிறகு கணிகண்ணன் ஒரு வரகவி என்பதை அறிந்த மன்னன், தன் மீது கவி பாடுமாறு கணிகண்ணனிடம் கூறினான். ஆனால்,  பெருமாளைத் தவிர மற்றவர்கள் மீது கவி பாடுவதில்லை என்று கணிகண்ணன் பதில் கூறினார்.






   இதனால் , கோபம் கொண்ட அந்த மன்னன், காஞ்சி மாநகரத்தை விட்டு வெளியேறுமாறு கணிகண்ணனுக்கு கட்டளையிட்டான்.

இச்செய்தியை அறிந்த திருமழிசையாழ்வார், இத்தல பெருமாளிடம் "கணிகண்ணனுடன், நானும் காஞ்சி  மாநகரத்தை விட்டு போகிறேன். நீயும் உன்னுடைய பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு எங்களுடன் புறப்படு" என்று பாடினார்.

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய

செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.


இவ்வாறு திருமழிசையாழ்வார் பாட பெருமாளும் அவ்வாறே செய்தார்.

திருமழிசையாழ்வார் மற்றும் கணிகண்ணனுடன் சேர்ந்து பெருமாள் அவ்விடம்  விட்டுப் புறப்பட்டுச் சென்றவுடன் நகரம் இருளில் மூழ்கியது.

பல்லவ மன்னன் , தன்னுடைய தவறை உணர்ந்து,
வெஃகாவிற்கு அருகில் ஓரிடத்தில் திருமழிசைப்பிரான் கணிகண்ணருடன் தங்கியிருந்த  இடத்திற்கு சென்று,  அவர்கள் பாதங்களில் வீழ்ந்து குற்றம் பொறுக்கும்படி கேட்டுக்கொண்டான். திருமழிசைப்பிரான் மன்னனை மன்னித்தார்.


 மன்னன் காஞ்சிபுரத்திற்குத் திரும்பியவுடன் திருமழிசையாழ்வார், பெருமாளிடம், "கணிகண்ணனுடன் சேர்ந்து, நானும் காஞ்சி மாநகருக்குத் திரும்புகிறேன். நீயும் காஞ்சி மாநகருக்கு திரும்பி வந்து முன்பு போலவே அக்கோவிலிலேயே பாம்பு படுக்கையை விரித்துக் படுத்துக்கொள்" என்று கூறினார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய

செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.

பெருமாளும் அவ்வாறே செய்தார்.

திருமழிசையாழ்வார் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், இத்தல பெருமாள் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார்.

சொன்ன வண்ணம் என்பதற்கு "யதோத்தகாரி" என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. இதனால் இவ்வூர் மக்கள் "யதோத்தகாரி பெருமாள்" என்ற திருநாமத்தில் வழிபடுகின்றனர்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஓரிக்கை கிராமத்திலிருந்து காஞ்சி  மாநகருக்குத் திரும்பியவுடன், காஞ்சி மாநகரத்தை சூழ்ந்திருந்த இருள் விலகியது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.




754

ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அல்லவற்று உளாயுமாய்,* 
ஐந்துமூன்றும் ஒன்றும்ஆகி*  நின்ற ஆதி தேவனே,* 

ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அந்தரத்துஅணைந்துநின்று,* 
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை*  யாவர்காண வல்லரே?*

755

மூன்று முப்பதுஆறினோடு*  ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்,* 
மூன்று மூர்த்தி ஆகிமூன்று*  மூன்றுமூன்று மூன்றுமாய்*,

தோன்றுசோதி மூன்றுமாய்*  துளக்கம்இல் விளக்கமாய்*, 
ஏன்றுஎன் ஆவியுள்புகுந்தது*  என்கொலோ? எம் ஈசனே!*


ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம்...

8 comments:

  1. ஓம் நமோ நாராயணாய நம!!
    திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!

    படங்களும், வரலாறும் பதிவு அருமை.

    ReplyDelete
  2. திருமழிசை ஆழ்வார், கும்பகோணம் போனதைக் குறிப்பிடவில்லை. அவருடைய திருவரசு அங்குதான் இருக்கிறது. நான் சமீபத்தில் இருமுறை தரிசனம் செய்தேன். அவர் அங்கு யோக நித்திரையில் இருப்பதாக ஐதீகம். கும்பகோணம் சென்றால் தரிசிக்க மறவாதீர்கள்.

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழன் சார் ..
      திருமழிசை ஆழ்வார்,திருவரசு அங்கு உள்ளது என கேள்விப்பட்டு இருக்கிறேன் இன்னும் செல்லும் பாக்கியம் கிட்ட வில்லை ...

      கண்டிப்பாக காண வேண்டும் ...

      Delete
  3. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. திருமழிசையாழ்வார் பெருமையறிந்தேன். அருமை. கும்பகோணம் சாத்தாரத்தெருவில் திருமழிசையாழ்வார் திருவரசு (கோயில்) உள்ளது. அதனைப் பற்றி விக்கிபீடியாவில் கும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் பதிந்துள்ளேன். வாய்ப்பிருப்பின் அப்பதிவினைக் காண வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies


    1. விக்கிபீடியாவில் கும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயிலையும் கண்டு தரிசித்தேன் ..தகவலுக்கு நன்றி ஐயா..

      Delete
  5. புதுத்தகவல்... நம் சமயத்தில் எத்தனை எத்தனை ஆயிரம் இருக்கு.. அனைத்தையும் அறிவதுக்குள் காலம் போய் விடும் நமக்கு:).

    ReplyDelete