10 February 2023

ஸ்வாமி கூரத்தாழ்வான்

 தை மாதம் அஸ்த நட்சத்திரம் ஸ்வாமி கூரத்தாழ்வான்  அவதார திருநட்சத்திரம்.

இன்று  ஸ்வாமியின் 1014 ஆவது திருநட்சத்திரம்.



 ஸ்வாமி கூரத்தாழ்வான்  வாழி திருநாமம் !!


சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!

ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!

எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!



கி.பி 1010 (சௌம்ய வருஷம், தை மாதம், ஹஸ்த நக்ஷத்ரத்தன்று) ஒரு உன்னத குடும்பத்தில் கூரம் என்னும் கிரமத்தில் உள்ள கூரத்தாழ்வார் மற்றும் பெருந்தேவி அம்மாள் என்பவர்களுக்கு திருக்குமாரராக திருவவதரித்தார். 

இவருக்கு ஸ்ரீவத்ஸாங்கன் என்ற திருநாமத்தை சூட்டினார்கள்.

இவருடைய திருத்தாயார் சிறு வயதிலேயே ஆசார்யன் திருவடி (பரமபதித்தார்) அடைந்தார்.

 சாஸ்திரம் ஒருவர் ஏதாவது ஒரு ஆச்ரமத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் (அதாவது ஒருவனுடைய திருமணத்திற்கு பின் அவன் தர்மபத்னி பரமபதித்தால், அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்) இவருடைய  திருத்தகப்பனாரோ மறுபடியும் திருக்கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு “நான் திருமணம் செய்து கொண்டால், வரும் புது மனைவி கூரத்தாழ்வானை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப் பெரிய பாகவத அபச்சாரம்” என்று கூறினார். இவருக்கு இத்தகைய உயர்ந்த பண்புகள் சிறு வயதிலேயே இருந்தது.

தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பி இவரை வழிநடத்தி வந்தார்.

 தன்னுடைய நல்ல குணங்களுக்கு ஏற்றவரான ஆண்டாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளையே புகலிடமாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார்.

 தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.



போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்ற க்ரந்தத்தை மீட்டெடுக்க  எம்பெருமானாருடன் இவரும் காஷ்மீரம் சென்றார். 

திரும்பி வரும் வழியில் அந்த க்ரந்தத்தை இழந்த பின்னர், இதைக் கண்டு எம்பெருமானார் வருந்த, அதற்கு கூரத்தாழ்வான் தான் அந்த க்ரந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று எம்பெருமானாருக்கு ஆறுதல் கூறினார். 

பிறகு திருவரங்கம் வந்தவுடன், எம்பெருமானாருடைய மிகப் பெரும் க்ரந்தமான “ஸ்ரீ பாஷ்யம்” என்னும் க்ரந்தத்தை எம்பெருமானார் அருளிச்செய்ய அதை இவர் பனை ஓலைகளில் ஏடுபடுத்துவதற்கு உதவி புரிந்தார்.

இவர் திருவரங்கத்தமுதனாரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார். எப்படி என்றால், முதலில் ஏகாகம் என்ற சடங்கில் உட்கார்ந்து, அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார்.

எம்பெருமானாருக்குப் பதிலாக இவர் சைவ அரசனிடம் சென்று, “ருத்ரன் தான் மிகப் பெரியவன்” என்று அரசன் கூறும் கூற்றை மறுத்து பேசி, “ஸ்ரீமன் நாராயணனே மிகவும் உயர்ந்தவன்” என்று ஸ்தாபித்தார். இந்த விவாதத்தின் இறுதியில் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை (சம்பிரதாயம்) காப்பதற்காக தன்னுடைய தர்சனத்தை (கண்கள்) இழந்தார். இவர் திருவரங்கத்தை விட்டு திருமாலிருஞ்சோலைக்குச் (எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் (மேல்கோட்டை) )சென்ற பிறகு சென்று அங்கு 12 வருடங்கள் இருந்தார்.

பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை இவர் கள்ளழகருக்காக (திருமாலிருஞ்சோலை எம்பெருமான்) அருளிச்செய்தார்.

எம்பெருமானார் திருவரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் இவர் திருவரங்கம் எழுந்தருளினார். எம்பெருமானார் நியமனத்தினால் இவர் வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாளிடம் அருளிச்செய்தார். இறுதியில் தன்னுடைய அனைத்து சம்பந்திகளுக்கும் மோக்ஷம் வேண்டும் என்றும், முக்கியமாக நாலூரானுக்கும் (ஆழ்வான் கண்களை இழப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான காரணம்) மோக்ஷம் வேண்டும் என்று கேட்டார்.

இவர் பஞ்ச ஸ்தவத்தை இவர் அருளிச்செய்தார் –  ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்,  அதிமானுஷ ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீ ஸ்தவம். இவை அனைத்துமே வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது.

எம்பெருமானர் திருவரங்கம் கோயிலில் இவருக்கு பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். மேலும் இவரது காலத்தில் இவரே நமது சம்ப்ரதாயத்திற்கு க்ரந்த நிர்வாகியாக (காலக்ஷேபாதிகாரி) இருந்தார்.

இவரும், இவருடைய தர்ம பத்னியும், ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ப்ரசாதத்தை பெற்றனர். அந்த ப்ரசாதத்தை ஸ்வீகரித்ததால், இரண்டு அழகான குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களுக்கு பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள்.

இவர் அருளிச்செயல் (4000 திவ்ய ப்ரபந்தம்) அனுபவத்தில் மிகவும் மூழ்கி இருந்தார். இதை எப்படி கண்டுகொள்ளலாம் என்றால், எப்பொழுது உபன்யாசத்தை தொடங்கினாலும், சொல்லப்போகும் விஷயத்தின் அனுபவத்தை நினைத்து மிகவும் உருகி அழுவார் இல்லையெனில் மூர்சையுற்றுக்கிடப்பார்.


பெரிய பெருமாள் நேரடியாக இவருடன் பேசுவார்.

இறுதியில் இவர் பெரிய பெருமாளிடம் மோக்ஷத்தைக் கேட்டார், பெரிய பெருமாளும் தந்தோம் என்றருளினார். இதைத் கேட்டறிந்த எம்பெருமானார், விரைந்து இவரிடம் வந்து, “எனக்கு முன்பாக எப்படி நீர் செல்லலாம்?” என்று கேட்க, அதற்கு இவர் “திருவாய்மொழியில் சூழ்விசும்பணிமுகில் பதிகத்தில் ஆழ்வார் கூறின படி, ஒருவன் பரமபதத்திற்குச் செல்லும் போது, நித்யர்கள் மற்றும் முக்தர்கள் வந்து, புதிய முக்தாத்மாவின் திருவடியை விளக்குவார்கள். இதை எப்படி தேவரீர் வந்து அடியேனுக்குச் செய்வதை அனுமதிக்கமுடியும். அதனால் தான் அடியேன் தேவரீருக்கு முன்பாகச் செல்கிறேன்” என்று கூறினார்.

பல ஐதீஹ்யங்கள் (சம்பவங்கள்) கூரத்தாழ்வானைப் பற்றி வ்யாக்யானங்கள் மற்றும் குரு பரம்பரா ப்ரபாவத்தில் விஸ்தரமாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

அருளிச்செய்தவை - பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள்.










இரண்டாம் திருவந்தாதி


2276    

என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தான் அவனை -

வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-

ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-

ஆழியான்*  அத்தியூரான். 95



2277 

அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-

துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-

மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*

இறை ஆவான் எங்கள் பிரான். (2) 96




ஓம் நமோ நாராயணாய நம!!
சுவாமி கூரத்தாழ்வான்  திருவடிகளே சரணம்!!


அன்புடன்
அனுபிரேம் 💙💙

2 comments:

  1. ஆழ்வான் வைபவம் மிக மிக அருமை
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. ரொம்ப சுருக்கமா இருக்கு. ஒரு சம்பவத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு விஸ்தரித்திருக்கலாம். வஞ்சமுக்குறும்பை அறுத்த ஒரே ஒருவர் கூரத்தாழ்வான். ராமானுச நூற்றந்தாதிப் பாடலைச் சேர்த்திருக்கலாம்

    ReplyDelete