25 February 2023

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாழ்வார் போலே

 36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாழ்வார் போலே




திருக்குடந்தை அருகே திருமண்டங்குடி என்ற சின்ன ஊரில் இந்த ஆழ்வார் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு ‘விப்ரநாராயணன்’ என்று பெயர் சூட்டினர். சிறுவயதிலேயே வேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு கற்றார். ஒருமுறை திருவரங்கம் சென்று அரங்கனைச் சேவித்தார். அவன் அழகில் மயங்கினார். திரும்ப ஊருக்கே வரவில்லை. திருவரங்கத்திலேயே தங்கிவிட்டார்.


திருவரங்க கோவிலுக்குப் பக்கம் ஒரு அழகிய பூந்தோட்டம் ஒன்று அமைத்தார். அதில் அழகிய வண்ண வண்ணப் பூச்செடிகள், துளசிச் செடிகளை வளர்த்து. நறுமணம் மிக்க பூக்களைக் கொண்டு பெரியாழ்வார் போல் அழகிய மாலைகளைக் கட்டி அரங்கனுக்குச் சூட்டினார்.


ஒரு நாள் தேவதேவி என்ற பேரழகி தன் தோழிகளுடன் உறையூரிலிருந்து திருவரங்கம் வழியாக வரும்போது ஆழ்வாரின் தோட்டத்தைக் கடந்தபோது அதன் அழகில் மயங்கினாள் “என்ன அழகு! என்ன அழகு! வண்ணமயமான, நறுமணம் மிக்க மலர்கள் !” என்று பிரமித்து நின்றாள். 

“இந்த அழகிய தோட்டத்தைப் பராமரிப்பவர் யாரோ ? என்று தேடினாள். 

அப்போது முனிவர்போல ஒருவர் தாடி மீசையுடன் கையில் ஒரு கூடையுடன் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். தோட்டத்தைப் பராமரிப்பவர் இவராகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அவர் அருகில் சென்றாள்.


தேவதேவியைக் கவனிக்காமல் விப்ரநாராயணன் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். 

அவருக்கு அரங்கனின் தொண்டு தான் முக்கியம்.. தேவதேவிக்கு மிகுந்த கோபம் வந்தது.

 “என் அழகைக் கவனிக்காத இவர் என்ன பித்துப் பிடித்தவரா ?” என்று கேட்டாள்.

 “தேவதேவி உன் அழகையும் கவனிக்காத இவர் திருவரங்கனாதனின் தொண்டன். உன் அழகெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டல்ல” என்றாள் கூட இருந்த தோழி. 

இது தேவதேவிக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது “இவரை என் அழகில் மயங்க வைக்கிறேன்” என்றாள்.

 பக்கத்திலிருந்த தோழி ”முடியவே முடியாது. 

நீ அப்படிச் செய்தால் நான் உனக்கு அடிமையாகிவிடுகிறேன்” என்றாள் தோழி.

சவாலை ஏற்றத் தேவதேவி, தன் அலங்காரங்களைக் களைந்தாள். 

எளிய உடை அணிந்து விப்ரநாராயணன் காலில் விழுந்து “ஸ்வாமி ! நான் இத்தனை நாட்களாக என் வாழ்கையை வீணாக்கிவிட்டேன். இனி பெருமாளுக்குத் தொண்டு செய்து என் பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும். இந்தத் தோட்டத்தில் தொண்டு புரிய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றாள். 

விப்ரநாராயணனும் இரக்கப்பட்டு அனுமதித்தார். 

ஆசிரமத்துக்கு வெளியே தோட்டத்திலேயே தங்குவதற்கு இடமும் கொடுத்தார்.

சில மாதங்கள் கழித்து மழைக்காலம் வந்தது. ஒரு நாள் நல்ல இடியுடன் கூடிய பலத்த மழை. தேவதேவி ஆசிரமத்துக்கு வெளியே குளிரில் உடைகள் நனைந்து நடுங்கிக்கொண்டு இருந்தாள். விப்ரநாராயணன் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவளை ஆசிரமத்துக்கு உள்ளே அழைத்து. உடுக்க தன் உடைகளைக் கொடுத்தார். அப்போது அவள் அழகில் மயங்கினார். அதற்குப் பிறகு அரங்கனின் தொண்டை மறந்தார்.

தேவதேவி ஆழ்வாரை மயக்கினாள். 

ஆசிரமத்துக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கினாள். ஆழ்வாரின் செல்வத்தை அபகரித்தாள். சில காலம் கழித்து அவரை வீட்டை விட்டுத் துரத்தினாள். ஆழ்வார் அவளை மறக்க முடியாமல் வீட்டுத் திண்ணையிலேயே கிடந்தார்.

ஒரு நாள், நம்பெருமாளும் நாச்சியாரும் அந்த வழியே விப்ரநாராயணன் திண்ணையில் கிடக்கும் காட்சியைப் பார்த்தார்கள். 

நாச்சியார் ஆழ்வார்மீது கருணைக்கொண்டு “நம் பக்தனைத் திருத்தி மீண்டும். மீண்டும் அவரைப் பூமாலை கட்டும் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும்” என்று சொல்லப் பெருமாளும் சரி என்று ஒரு சிறுவனின் வடிவத்தை எடுத்துக்கொண்டார். 

தன் தங்க வட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு தேவதேவி சென்றார். 

“யாரப்பா நீ?” என்று தேவதேவி கேட்கச் சிறுவன் “நான் விப்ரநாராயணனின் சிஷ்யன். அவர் இதை உங்களுக்குக் கொடுத்து அனுப்பினார் என்று பளபளக்கும் தங்க வட்டிலை அவளிடம் கொடுத்தான். 

தேவதேவி அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டாள். விப்ரநாராயணனை திண்ணையிலிருந்து உள்ளே அழைத்துக்கொண்டாள்.

மறுநாள் கோவிலைத் திறந்தபோது வட்டில் ஒன்றைக் காணவில்லை என்று அர்ச்சகர்களுக்கு அதிர்ச்சி. கோவில் வட்டில் களவு போனது என்ற செய்தி அரசனுக்கு எட்டியது. 

அரசன் காவலாளிகளை அனுப்பித் தேடச் சொன்னான். தேவதேவி தோழி ஒருத்தி “தங்க வட்டில் ஒன்று தேவதேவியை வீட்டில் இருக்கிறது” என்று துப்பு கொடுக்க அரசன் விசாரித்தான். தேவதேவி விப்ரநாராயணன் சிஷ்யன் என்ற சிறுவன் வந்து கொடுத்தான் என்றாள். விப்ரநாராயணனை கூப்பிட்டு விசாரித்தார் அரசன். எனக்குச் சிஷ்யனே கிடையாது என்றார் விப்ரநாராயணன். 

அரசன் வட்டிலை கோவிலில் சேர்த்துவிட்டு தேவதேவிக்கு அபராதம் விதித்தான். விப்ரநாராயணனை சிறையில் அடைத்தான்.

அன்று இரவு திருவரங்கன், அரசனின் கனவில் தோன்றினார்.

 விப்ரநாராயணன் கதையைக் கூறினார். அரசன் முழித்துக்கொண்டு விப்ரநாராயணனை உடனே விடுவித்தான். பூமாலை கட்டிக்கொண்டு தொண்டனாக இருந்து சம்சாரத்தில் மூழ்கித் தாழ்ச்சியையும், பெருமாளின் கருணையையும் உணர்ந்தார். இதற்குப் பிராயச்சித்தமாகத் திருமால் அடியார்களின் பாத தூசியையும், அவர்களின் திருவடி தீர்த்ததையும் எடுத்துக்கொண்டார். அதனால் இவருக்கு ’தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்’ என்று பெயர். தேவதேவியும் திருந்தி ஆழ்வாருடன் சேர்ந்து திருவரங்கனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார்கள்.

திருக்கோளூர் பெண்ணின் வார்த்தையில் 'இரு' என்ற சொல் இரு அர்த்தம் கொண்டது - 'சிறந்த' மற்றும் 'இரண்டு'.

இதில் முதல் அர்த்தத்தை வைத்து படித்தால், ஆழ்வார் சிறந்த அழகிய மாலைகளை அரங்கனுக்கு தந்தார் எனலாம். அவை சிறந்த மாலைகள் தாம், ஏனெனில் ஆழ்வார் தன்னை பகவானின் பாத தூசியாக - தொண்டர் அடி பொடி - எண்ணி முற்றிலும் பக்தி சேவைக்காக மட்டுமே சார்த்தினார். மலர்மாலை மட்டுமல்லாமல் 'திருமாலை' 'திருப்பள்ளியெழுச்சி' என சிறந்த கவிமாலைகளையும் அரங்கனுக்கு அளித்தார்.

அதுவே இரண்டாம் அர்த்தத்தை முன்னிறுத்தி படித்தால், ஆழ்வார் 'இரண்டு' சிறந்த மாலைகளை அரங்கனுக்கு அளித்தார் எனலாம். ஒன்று, மாலை அவர் அரங்கனுக்கு தினமும் கட்டும் பூ மாலை. இரண்டாவது அரங்கன் மீது அவர் பாடிய பாமாலை - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி.

எனவே, "தொண்டரடிபொடியாழ்வார் போல இரு சிறந்த மாலைகளை அந்த பகவானுக்கு தொடுத்துப்போட்டு கைங்கரியம் தான் செய்தேனா எங்கள் வைத்தநிதிப் பெருமாளுக்கு? பிறகு நான் திருக்கோளூரில் இருந்து என்ன புண்ணியம்?" என்று அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1-7 பிறவித்துயர் அற 
ஆராதிப்பார்க்கு  மிக எளியவன் 


பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று* 
துறவிச் சுடர் விளக்கம்*  தலைப் பெய்வார்,*
அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே. 1

2965



வைப்பு ஆம், மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
துப்பு ஆம், புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
அப்பால் அவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே. 2

2966











37. திருமணிக்கூடம் 

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ மணிக்கூட நாயகாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment